Published : 11 Feb 2016 09:35 AM
Last Updated : 11 Feb 2016 09:35 AM
சிறுவர் பட்டாளம் ஓரிடத்தில் கூடினால் விளையாட மட்டும்தானா? இது ஒரு பத்திரிகைப் பட்டாளம். இதில் நிருபராக, உதவி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களின் சராசரி வயது 14. அத்தனை பேரும் தெருவோரம் வசிக்கும் குழந்தைகள். தென் டெல்லியில் இயங்கிவரும் ‘பாலக்நாமா’ பத்திரிகைக்காக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தமாக 14 செய்தியாளர்கள் பணியாற்று கின்றனர். அதிகாலையில் கார் துடைப்பது, வீடுகளில் நாளிதழ் போடுவது போன்ற வேலைகளைச் செய்துவிட்டுக் காலைப் பொழுதில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் மதியம் பரபரப்பான பத்திரிகையாளராக மாறிவிடுகிறார்கள்.
தங்களைப் போன்ற எண்ணற்ற குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளை, பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அக்குழந்தைகளை மீட்டெடுப்பதே இவர்களின் நோக்கம். தொலைநோக்குப் பார்வையோடும் சீரிய சிந்தனையோடும் செயல்படும் இவர்களுடைய தலைமை ஆசிரியர் 10-ம் வகுப்பு படிக்கும் 18 வயது இளம் பெண்ணான சாந்தினி.
சாந்தினியின் தந்தை ஒரு கழைக்கூத்தாடிக் கலைஞர். நான்கு வயதிலிருந்து தனது அப்பா வோடு டெல்லி வீதிகளில் ஆடி, பாடி, கயிறு மேல் ஏறி, கூடியிருக்கும் பொதுமக்களுக்குக் காட்சிப் பொருளான சிறுமிதான் சாந்தினி. ஆனால், 2008-ல் அவருடைய அப்பா வலிப்பு வந்து மரணமடைந்தார். அதன் பிறகு, 11 வயதிலிருந்து குப்பை பொறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சாந்தினி. எதேச்சையாக ஒரு நாள் ’சேத்னா’என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்களின் கண்ணில் பட்டார். 2010-ல் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவருடைய புத்திக்கூர்மையும் உத்வேகத்தையும் அடையாளம் கண்ட அமைப்பினர், அவர்கள் நடத்திவந்த
‘பாலக் நாமா’ பத்திரிகையில் நிருபராக சாந்தினியை இணைத்துக்கொண்டனர். மளமளவெனப் பத்திரிகை யின் அத்தனை சூட்சுமத்தையும் பயின்று கொண்டதால் 2014-ல் அதே பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார்.
குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டு, பிச்சை எடுக்கவும் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் உணவகங் களிலும் கடுமையான வேலைகள் செய்ய நிர்ப்பந்திக் கப்படும் குழந்தைகளின் வாழ்வை உலகுக்கு உரக்கச் சொல்லும் முயற்சி இது என்கிறார் சாந்தினி. இதன் மூலம் அவர்கள் வாழ்வை மீட்டெடுக்கத் துடிக் கிறார். ஆனால், அரசாங்கத்தின் நிதி உதவியோ விளம் பரங்களோ கிடைக்கவில்லை. சேத்னா தன்னார்வ நிறுவனத்தின் முதலீடு மட்டுமே பிரசுரத்துக்கும் விநியோகத்துக்கும் கைகொடுக்கிறது. தினந் தோறும் அத்துமீறலையும் சுரண்டலையும் எதிர் கொள்ளும் தெருவோரக் குழந்தைகளின் வாழ்வு குறித்த உண்மையான கள ஆய்வை டெல்லி அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை. ஆனால், சாந்தினி தலைமையில் இந்தச் சிறுவர் பத்திரிகைப் படை வீறுநடைபோடுகிறது. இன்று சாந்தினி தலைமை யில் பாலக்நாமா 4,000 முதல் 5,500 பிரதிகள் விற்பனையாகின்றன. உலகிலேயே உச்சபட்சமாக 1 கோடியே 80 லட்சம் தெருவோரக் குழந்தைகளைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்குக் குரல் கொடுக்கிறார், அவர்களுடைய பிரதிநிதி சாந்தினி!
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT