Published : 13 Jun 2014 12:00 AM
Last Updated : 13 Jun 2014 12:00 AM
இளமையும் அனுபவமும் பிரேசிலுக்குத் துணைநிற்கும்...
பீலே பிரேசிலுக்கான கடைசிக் கால்பந்து போட்டியில் விளையாடி அரை நூற்றாண்டு நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும் பிரேசிலைத் தாண்டியும் கால்பந்து ரசிகர்களின் கடவுள் அவர்தான். ஆனால், பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்கள் பீலேவின் சிம்மாசனத்தையும் அசைத்திருக்கின்றன. ஏழைகளால் நிரம்பிய ஒரு தேசத்தில் இவ்வளவு வெட்டிச் செலவு தேவையா என்ற கேள்வியுடன் தெருக்களில் திரளும் மக்கள் இந்தப் போட்டியின் சர்வதேசத் தூதுவரைப் போலிருக்கும் பீலேவைச் சங்கடத்தில் தள்ளுகிறார்கள். இந்த எதிர்ப்புகளைத் தான் மதிப்பதாக பீலே கூறுகிறார். ஆனால், ஆட்டம் வேறு; அரசியல் வேறு என்கிறார். உலகக்கோப்பை ஜுரம் இந்த மனிதருக்குக் கொஞ்சமும் குறையவில்லை. 1950-ல் பிரேசிலில் நடந்த உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியின்போது பீலேவுக்கு வயது 10. இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் மரகானாவில் தோல்வியடைந்தபோது நாட்டில் மயான அமைதி நிலவியது. தான் பெரியவனாக ஆனதும் நாட்டுக்காகக் கோப்பையை நிச்சயம் வெல்வேன் என்று பீலே தன் தந்தைக்கு வாக்களித்தார். பின்னாளில் அதைச் செய்தும் காட்டினார். இன்றைக்கும் அதே உற்சாகமும் தேசிய அணியின் மீதான பிடிமானமும் பீலேவிடம் காணப்படுகிறது.
மரகானா நாட்கள் நினைவில் இருக்கிறதா?
எப்படி மறக்க முடியும்? என்னுடைய கால் பந்துக் கனவுகள் அங்கேதானே தொடங்கின? அப்போதெல்லாம் இப்போதுபோல தொலைக் காட்சிப் பெட்டிகள், நேரடி ஒளிபரப்பு எல்லாம் கிடையாது. வானொலியில்தான் கால்பந்து போட்டிகளின் வர்ணனைகளைக் கேட்போம். என்னால் மறக்கவே முடியாத அந்த நாள், உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம். பிரேசிலும் உருகுவேவும் ஆடுகின்றன. பிரேசில் தோற்றபோது அப்பா தேம்பித் தேம்பி அழுதார். வெளியே வந்து பார்த்தால் எல்லோருமே அழுகிறார்கள். எனக்கு என்ன ஆனது என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் பிரேசிலுக்காக உலகக்கோப்பையை வென்று வருவேன் என்று அப்பாவிடம் சொன்னேன். அடுத்த எட்டு ஆண்டுகளில் அதைச் சாதித்தும் காட்டினேன்.
சரி, இந்த முறை போட்டியில் யார் வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று உங்களுக்குத் தெரியாதா?
ஆனால், பிரேசில் அணி மிகையாக மதிப்பிடப்படு வதாகப் பலரும் சொல்கிறார்கள். ஏனென்றால், மூத்த வீரர்களே இல்லாத ஓர் இளம் அணியாக அது காட்சி அளிக்கிறது. உதாரணமாக, பலராலும் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் நெய்மார் இதுவரை உலகக்கோப்பைப் போட்டி களில் பங்கேற்காதவர்.
ஒரு நல்ல வீரனுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை. தவிர, பிரேசில் அணியில் இளமையும் அனுபவமும் சரிவிகிதத்தில் கலந்தே காணப்படு கிறது. கோல்கீப்பரும் தற்காப்பு வீரர்களும் அனுபவமிக்கவர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? பயிற்சியாளர் ஸ்காலரி எவ்வளவு அனுபவசாலி?
நெய்மாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களைப் போலவே முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே அவரும் கோப்பையை வெல்வார் என்று நினைக்கிறீர்களா?
அன்றைக்கு நான் வெளிப்படுத்திய ஆட்டத்தை விடவும் அபாரமான ஆட்டத்தை நெய்மார் வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன். அந்தப் பையன் பெரிய ஆள்தான். நெய்மார் நிச்சயம் நல்ல வீரராகப் பரிமளிப்பார். அணியைத் தன் தோளில் சுமந்துசெல்லக் கூடியவர்தான் அவர். ஆனால், பிரேசில் அணி உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வாங்கியாக வேண்டும் என்ற பெரும் பொறுப்பு அந்தச் சின்னப் பையனின் இளம் தோளில் ஏற்றப் பட்டுவிட்டதே என்ற கவலை எனக்கு உண்டு. அவர் மிகவும் இளவயது ஆட்டக்காரர்; எல்லாப் பொறுப் புகளையும் அவர் மீதே சுமத்துவது அவருக்குப் பெருஞ்சுமையாகிவிடும்.
ஒருவேளை பிரேசில் தோற்றுவிடுவதாக வைத்துக் கொள்வோம். வேறு யார் அந்த இடத்தைக் கைப்பற்றுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
ஜெர்மனி. பிரேசில் ஆறாவது முறையாகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேட்கை யுடன் இருப்பதைப் போலவே அவர்களும் தாங் கள் நான்காவது முறையாகக் கோப்பையை வெல்வதற்
கான வேட்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் வலுவான நிலையிலும் இருக்கிறார்கள்.
அடுத்து?
ம்… அர்ஜெண்டினா.
ஸ்பெயின் சவால் இல்லையா?
நிச்சயமாக. அவர்களுடைய அற்புதமான ஆட்டம் கோப்பையை அவர்களே தக்கவைத்துக்கொள்ள உதவலாம். ஆனாலும், பிரேசிலைவிட்டு கோப்பை வெளியே செல்லாது. எப்போதுமே தற்காப்புத் திறனைவிட, தாக்குதல் திறனைச் சிறப்பாக வெளிப் படுத்தும் அணி பிரேசில். இந்த முறை எங்கள் தற்காப்புத் திறன் அசாதாரணமான பலத்தைப் பெற்றிருக்கிறது. வரலாற்றில் இவ்வளவு சிறப்பான தற்காப்புத் திறனை பிரேசில் பெற்றிருந்தது இல்லை. நடுக்கள வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர். நடுக்களத்திலிருந்து முன்னேறிச் செல்வது எளிதாக இருக்கும். நடுக்களத்தின் பின்பக்க ஆட்டக்காரர்கள் நல்ல வலுவுடன் விளையாடுகின்றனர். நீங்கள் பாருங்களேன்… கோப்பை பிரேசிலைவிட்டு வெளியே போகாது.
உலகில் எங்கு உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடந்தாலும் பிரேசிலுக்கு அது திருவிழா போலத்தான் இருக்கும். ஆனால், இந்த முறை சொந்த நாட்டிலேயே போட்டிகள் நடந்தாலும் வழக்கமான உற்சாகம் இல்லை. எங்கும் போராட் டங்களும் எதிர்ப்பும். பிரேசில் வெற்றியை இது பாதிக்குமா?
மக்களுடைய போராட்டங்களை நான் மதிக்கிறேன். ஆனால், போட்டிகளும் பிரச்சினை களும் வெவ்வேறானவை. இரண்டையும் நாம் குழப்பிக்கொள்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. இந்தப் போராட்டங்களால் பிரேசில் வீரர்களின் வெற்றி பாதிக்கப்படுமா, பாதிக்கப்படாதா என்று கேட்டால், பாதிக்கப்படக் கூடாது என்று நான் சொல்வேன்.
-தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT