Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்ட எத்தனிப்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏகோபித்து எதிர்த்துள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் நிலையைப் பார்த்தால், அச்சம்தான் மேலிடுகிறது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக இசைவு பெறாமல் வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாத நிலையில், மேகேதாட்டுப் பகுதியில் கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாகக் கடந்த ஏப்ரலில் வெளிவந்த செய்திகள் கூறின. இதன் அடிப்படையில், தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் சென்னை அமர்வு தாமாக இவ்விவகாரத்தை 26.05.2021-ல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேகேதாட்டுப் பகுதியை ஆய்வுசெய்ய சுற்றுச்சூழல், வனத் துறை, காவிரி மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரிகள் அடங்கிய ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்த ஆய்வுக் குழு 05.07.2021-க்குள் தம் அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
எதற்காகப் பேச்சுவார்த்தை?
கர்நாடக அரசு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முனைந்தது. அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினார். தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் தம் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று முறையீடு செய்வதாக கர்நாடக அரசு அறிவித்தது. தமிழ்நாடு அரசும் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களை ஆலோசிக்கப் போவதாகக் கூறியது. இந்நிலையில், தமிழ்நாடு அரசிடம் ஒரு குழப்பம் வெளிப்பட்டது. மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், கர்நாடகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது ஏன்? பேச்சுவார்த்தை என்ற சொற்பிரயோகம் வியப்புக்குரியது. 1968 முதல் 1990 வரை இரு மாநில அரசுகளும் சுமார் 26 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன. முடிவு சுபமாக இல்லை. 1992-ல் இரு மாநில விவசாயப் பிரதிநிதிகளின் கூட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நடத்தினார். அதுவும் தோல்வியுற்றது. பேச்சுவார்த்தையின் பெயரால் காலம் விரயமானதுதான் காவிரி வரலாறு.
கர்நாடகத்தின் வியூகம்
இதுபோன்ற தருணங்களுக்காகத்தான் காத்திருப்பதுபோல் கர்நாடகம் நடந்துகொண்டது. தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் மீது டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் கர்நாடகம் மேல்முறையீடு செய்தது. 17.06.2021-ல் காணொலி மூலம் விசாரணை நடந்தது. டெல்லி அமர்வு, கர்நாடக அரசு முன்வைத்த வாதங்களை ஏற்பதாகவும் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கு விசாரணையைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்புக் கூறியது. மேலும், தமிழ்நாடு அரசு மேகேதாட்டு குறித்து மத்திய ஜல்சக்தி துறையிடம் முறையிட்டுள்ளதாகவும் இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நிலுவையில் உள்ளதாகவும் கூறி, தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணையை முடித்துவைத்தது. இந்தத் தீர்ப்பினால் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு உடனடியாகக் கலைக்கப்பட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயங்கள் இந்தியாவில் 5 உள்ளன. அனைத்தும் சம அதிகாரம் பெற்றவை. ஒவ்வொன்றுக்கும் அதிகார வரம்புக்குட்பட்ட மாநிலங்கள் எவை என குறிப்பிடப்பட்டு சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு ஆணை எதுவும் இல்லாமல், பிற மண்டலங்களில் உள்ள பசுமைத் தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளை டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றுவதற்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் டெல்லி பிரிவு 12.06.2021-ல் பிறப்பித்த உத்தரவு தவறானது, இதனை ரத்துசெய்ய வேண்டும் என்ற பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் நலச் சங்கத்தின் சார்பில் செல்வராஜ்குமார் தாக்கல்செய்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அலுவல்ரீதியான டெல்லி உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது என்பது அவர் வழக்கு.
இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் மேற்கூறிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. நாடு முழுவதும் பொருந்தக்கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் தொடர்பான, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் அனைத்தையும் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு அனுப்ப வகைசெய்யும் உத்தரவு தடைசெய்யப்பட்டது. 4 வாரங்களுக்குள் மத்திய அரசும், டெல்லி பசுமைத் தீர்ப்பாயமும் இவ்வழக்கில் தங்கள் பதிலைத் தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேகேதாட்டு விஷயத்தில் இம்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அதே தலைமை நீதிபதி அமர்விலேயே அதே காரணங்களுக்காக எழுப்ப வாய்ப்பு இருந்தது. எனினும், தமிழ்நாடு அரசு நேரடியாகவே உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்விலேயே கர்நாடக அரசுபோல தமிழ்நாடு அரசும் அட்வகேட் ஜெனரலையோ கூடுதல் சட்ட வல்லுநர்களையோ பயன்படுத்தியிருக்கலாம்.
நிலுவையில் இருக்கும் வழக்குகள்
காவிரி குறித்த வழக்குகளில் தமிழ்நாடு முன்பே பல முறை ஏமாந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஓ.எஸ். 1/1971 என்ற வழக்கை காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் வாக்குறுதியை நம்பி 28.08.1972-ல் தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் திரும்பப் பெற்றது. இதேபோல் காவிரிப் பிரச்சினையில் 1924-ல் செய்யப்பட்ட 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்கத் தமிழ்நாடு போதுமான முயற்சிகளைச் செய்யவில்லை. இந்த இடைக்காலத்தில் பாசனப் பரப்பை கர்நாடகம் விரிவாக்கிவிட்டது.
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய சில அம்சங்களைத் தமிழ்நாட்டு விவசாயிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார்கள். அவற்றில் முக்கியமானது, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது. மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் 16.02.2018-ல் ஒரு வழக்கையும், மேலும் திட்ட மதிப்பீட்டு இயக்குநரக இயக்குநர், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடக நீர்வளச் செயலாளர் ஆகியோர் மீது 05.12.2018-ல் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணையையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரைத் தராததால் ஏற்பட்ட சாகுபடி இழப்புக்கு ரூ.1,045 கோடியும் மற்ற பாதிப்புகளுக்கு ரூ.1,434 கோடியும் இழப்பீடு கேட்டு தமிழ்நாடு தொடர்ந்த வழக்கும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்குகளின் விசாரணையையும் துரிதப்படுத்த வேண்டும்.
கர்நாடகம், பெங்களூரு குடிநீர்த் தேவையை மட்டுமே பூதாகரப்படுத்தும்போது, தமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்கள் 1.5 கோடி மக்களின் குடிநீர்த் தேவையையும் முன்வைத்துத் தமிழ்நாடு அரசு சட்டரீதியாகவும் போராட முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி தொடர்பான வழக்குகள் யாவும் சட்டரீதியான சிக்கல்கள் மட்டுமில்லை, வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்மானிப்பவையும்கூட.
- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT