Published : 26 Aug 2021 03:13 AM
Last Updated : 26 Aug 2021 03:13 AM
தமிழ்நாட்டில் இதுவரை சென்னையில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயில், வருங்காலத்தில் கோவையிலும் மதுரையிலும் ஓடும். ஆகஸ்ட் 13 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிதியறிக்கையைத் தாக்கல்செய்த நிதியமைச்சரும், ஆகஸ்ட் 18 அன்று அவையில் நடந்த விவாதத்தில் விடையளித்த முதலமைச்சரும் மெட்ரோ ரயிலைப் பற்றிப் பேசினார்கள். அவற்றில் நான்கு செய்திகள் இருந்தன: சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது, இந்தப் பணிகள் 2026-ல் நிறைவுபெறும். இரண்டாவதாக, சென்னை மெட்ரோவின் முதல் தடம் விமான நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாகக் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும். மூன்றாவதாக, கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும். கடைசியாக, மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
2002-ல் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிய டெல்லி, உலக அளவில் குறிப்பிடத்தக்க மெட்ரோ ரயில் நகரமாக வளர்ந்திருக்கிறது. இப்போது டெல்லி மெட்ரோவின் நீளம் 350 கிமீ. டெல்லியின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை (54 கிமீ), பெங்களூரு (48 கிமீ), மும்பை (12 கிமீ), ஹைதராபாத் (67 கிமீ), கொல்கத்தா (39 கிமீ) ஆகிய பெருநகரங்களும் இந்த ஓட்டத்தில் இணைந்தன. சென்னை மெட்ரோவின் பணிகள் 2009-ல் தொடங்கின. 2015-ல் ஏழு நிலையங்களோடு சேவை தொடங்கியது. இப்போது 40 நிலையங்கள்.
சென்னை மெட்ரோ - இரண்டாம் கட்டம்
ஒரு நகரத்தில் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் வலைப்பின்னலாக மெட்ரோ அமைய வேண்டும். சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டம் அதைச் செய்யும். முதல் கட்டத்தில் இரண்டு தடங்கள் இருக்கின்றன. இரண்டாம் கட்டத்தில் மூன்று தடங்கள் இருக்கும். தடம்-3 மாதவரத்தில் தொடங்கும். பெரம்பூர், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு, சோழிங்கநல்லூர் வழியாக சிப்காட் தொழிற்பேட்டையை அடையும். தடம்-4 கலங்கரை விளக்கத்தில் தொடங்கும். மயிலாப்பூர், நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி வழியாக பூந்தமல்லியை அடையும். தடம்-5 மாதவரத்தில் தொடங்கும். கொளத்தூர், திருமங்கலம், ஆலந்தூர், மடிப்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூரில் வந்து சேரும். இரண்டாம் கட்டத்தின் நீளம் 119 கிமீ; நிலையங்கள்: 127. இதுவரை சுரங்கப் பாதைக்கும் மேம்பாலப் பாதைக்கும் தலா இரண்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுவிட்டன. பிற ஒப்பந்தங்களும் அடுத்தடுத்து வழங்கப்படும்.
கிளாம்பாக்கம் வரை
சென்னை மெட்ரோவின் முதல் தடம் விமான நிலையத்தில் முடிகிறது. இது தாம்பரம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட இருக்கிறது. அண்ணா உயிரியல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம், நட்சத்திர நிலையமாக உருவாகும். உலகின் பல நகரங்களில் உயிரியல் பூங்காக்களுக்கு அருகில் மெட்ரோ நிலையங்கள் இருக்கின்றன. ஹாங்காங்கின் டிஸ்னி லேண்டுக்கு அருகில் அமைந்த டிஸ்னி மெட்ரோ நிலையத்தை எளிதில் மறக்க முடியாது. கனடாவின் கால்கரே மெட்ரோ நிலையத்தில் கண்ணைக் கவரும் விலங்குகளும் பறவைகளும் நம்மை வரவேற்கும். பெய்ஜிங் மெட்ரோவில் 370 நிலையங்கள் உள்ளன. அதில் மிகவும் புகழ்பெற்றது பெய்ஜிங் உயிரியல் பூங்கா நிலையம். அந்த நிலையத்தின் நடைமேடையில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேரின் காலடித் தடங்கள் பதிகின்றன. அண்ணா உயிரியல் பூங்கா நிலையமும் அந்த வரிசையில் சேரும்.
இந்தத் தடம் கிளாம்பாக்கத்தில் முடிவடையும். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் ஒன்றைக் கட்டிவருகிறது. வருங்காலத்தில் தென்மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்குப் பதிலாக இந்த முனையத்தில் நின்றுவிடும். இந்த முனையத்துக்குள் புதிய மெட்ரோ நிலையம் அமைக்கப்படும். அயலூர்ப் பயணிகள், குளிரூட்டப்பட்ட மெட்ரோ ரயிலில் ஏறி, நெரிசலும் காலவிரயமும் இல்லாமல், தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையலாம்.
இரண்டாம் நிலை நகரங்கள்
மக்கள்தொகை வாழ்நிலை, வீட்டு வசதி முதலானவற்றின் அடிப்படையில், நகரங்கள் முதல் நிலை (பெரு நகரங்கள்), இரண்டாம் நிலை என்று பிரிக்கப்படுகின்றன. முன்குறிப்பிடப்பட்ட டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவை முதல் நிலை நகரங்கள். 2011-ல் ஒன்றிய அரசு இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து பல இந்திய நகரங்கள் மெட்ரோ ரயில் நகரங்களாக மாறிவருகின்றன.
தற்சமயம் குஜராத்தின் அகமதாபாதில் பயன்பாட்டில் இருக்கும் தடத்தின் நீளம் 6 கிமீ. அதே வேளையில், கட்டுமானத்திலும் விரைவில் கட்டுமானம் தொடங்கும் நிலையிலும் உள்ள தடங்களின் நீளம் 62 கிமீ. மெட்ரோ ரயில் அமைத்துக்கொண்டிருக்கும் இரண்டாம் நிலை நகரங்களில் சில இவை: ராஜஸ்தானின் ஜெய்பூர் (சேவை-12 கிமீ, கட்டுமானம்-26 கிமீ); மத்தியப் பிரதேசத்தின் போபால் (0, 28 கிமீ), இந்தூர் (0, 31 கிமீ); உத்தர பிரதேசத்தின் லக்னோ (23 கிமீ, 11 கிமீ), கான்பூர் (0, 28 கிமீ), ஆக்ரா (0, 31 கிமீ), நொய்டா (30 கிமீ, 15 கிமீ); மஹாராஷ்டிரத்தின் நாக்பூர் (23 கிமீ, 67 கிமீ), பிஹாரின் பாட்னா (0, 31 கிமீ), கேரளத்தின் கொச்சி (25 கிமீ, 15 கிமீ)
கோவை மெட்ரோ
2011-ல் ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியான உடனேயே தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்த உரையாடல் தொடங்கிவிட்டது. எனினும் 2019-ல்தான் சாத்தியக்கூறு அறிக்கை தயாரானது. இப்போது திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரிவான அறிக்கை, மண் பரிசோதனை, நில அளவீடு முதலான பணிகள் தொடரும். கோவை மெட்ரோவில் ஐந்து தடங்கள் இருக்கும். அவை: கணியூர்-உக்கடம் (வழி பீளமேடு), பிளிச்சி-உக்கடம் (வழி துடியலூர்), கரணம்பேட்டை-கணுவாய் (வழி சிங்காநல்லூர்), கணேசபுரம்-காருண்யா நகர் (வழி காந்திபுரம், பேரூர்), உக்கடம்-கோவை பேருந்து முனையம் (வழி போத்தனூர்).
தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் மதுரை. இங்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இன்னும் இரண்டாம் கட்ட நகரங்களுக்கான தகுதி திருச்சி, சேலம், திருப்பூர் முதலிய நகரங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் பெரிய நகரங்கள் அனைத்தும் மெட்ரோ ரயில் நகரங்களாக மாறும் பட்சத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்கும்!
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT