Last Updated : 19 Jun, 2014 08:00 AM

 

Published : 19 Jun 2014 08:00 AM
Last Updated : 19 Jun 2014 08:00 AM

எகிப்தின் எதிர்காலம் என்ன?

முபாரக்கின் வழி, சர்வாதிகாரம், நியாயமான ஜனநாயக அரசு… சிசியின் வழி எது?

யூதர்களிடத்திலே ஒரு நகைச்சுவைக் கதையுண்டு. ஒரு ரபையிடத்திலே (ரபை = யூதமத போதகர்) ஒரு யூதர் சென்றார். “நானும் என் மனைவியும் ஐந்து குழந்தைகளும் ஒரே அறையுள்ள சிறிய வீட்டில் வசித்துவருகிறோம். என்னால் அவர்களைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லை. எனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனைசெய்து எனக்கு உதவுங்கள்” என்றார் யூதர்.

ரபை அவரைப் பார்த்து, நாளைக்கு வாருங்கள் என்று சொல்லியனுப்பினார். அடுத்த நாள் அந்த யூதர் வந்தபோது ரபை ஒரு ஆட்டைக் கையில் பிடித்திருந்தார். “கடவுள் இந்த ஆட்டை உனக்குத் தரச் சொன்னார்” என்றார். அந்த யூதரும் ஆட்டை ஓட்டிச் சென்றார். ஒரு வாரம் கழித்து மீண்டும் ரபையிடம் வந்தார். ஆடு பெரும் தொந்தரவாக இருக்கிறது என்றார். கடவுள் மீண்டும் சொல்லும்வரை ஆட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சமாதானம் செய்தார் ரபை. அடுத்த வாரமும் அந்த யூதர் வந்தார். “இதன் துர்வாடை தாங்க முடியவில்லை. இது எங்கள் வீட்டுச் சாமானையெல்லாம் முட்டிமோதி உடைத்துவிட்டது. என்னுடைய மகன்களையும் முட்டிக் காயப்படுத்திவிட்டது. இந்த ஆட்டைத் திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து வைத்திருந்தால் நானே செத்துவிடுவேன்” என்று அழுதார். அந்த ரபையும் பரிதாபப்பட்டு ஆட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார்.

ஒரு வாரம் கழித்து ரபை அந்த யூதரைப் பார்த்தார். இப்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டார். நாங்கள் இப்போதும் ஏழையாகத்தான் இருக்கிறோம், அதே அறையில் குடும்பத்துடன் வசிக்கிறோம். ஆனால், ஆடு இல்லாததால் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்றார் அந்த யூதர்.

எகிப்தின் இன்றைய நிலை

இந்த பதில் இன்றைய எகிப்தின் நிலைமைக்கு அப்படியே பொருந்துகிறது. ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து அவருடைய தலைமை யிலான அரசைத் தூக்கியெறிந்தனர். அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பொருளாதாரம் படுமோசமாகி விட்டது. அராஜகம் காரணமாக முழு எகிப்திய சமூகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

அரசின் புள்ளிவிவரப்படி வேலையில்லாதோர் எண்ணிக்கை 13% அதிகரித்திருக்கிறது; தற்போது 37 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்துவிட்டது. இது சுற்றுலாத் தொழிலை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அதேபோல், ஆண்டுக்கு 30,000 ரூபாய்க்கும் குறைவாக ஈட்டுவோர் எண்ணிக்கை 2009-ல் 21.6% ஆக இருந்தது, 2013 இறுதியில் 26.3% ஆக அதிகரித்துவிட்டது.

எகிப்து ராணுவத்தின் முன்னாள் தரைப்படை தலைமைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை இப்போது கொண்டாடும் அதே மக்கள்தான், முபாரக் ஆட்சியை இழந்தபோதும் கொண்டாடினர். அவர்களே 2012-ல் முகம்மது மோர்சி அதிபரானதைக் கொண்டாடினர். கடந்த ஜூன் மாதம் மோர்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையும் கொண்டாடினர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் வறுமை, அராஜகம், பாதுகாப்பின்மை, இடையறாத பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஆகியவற்றால் மனம் வெறுத்துள்ள எகிப்தியர்கள், இப்போது சிசியைப் பெரிய கதாநாய கனாகவும், இந்தத் துயரங்களிலிருந்து தங்களை மீட்கக் கூடியவராகவும் கருதுகின்றனர்.

பாதுகாப்புதான் தேவை

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச சிசி வந்தபோது, ஒரு பெண்மணி அவரை வழிமறித்தார். “என்னுடைய மகனை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று வீதியில் வைத்துக் கொன்றுவிட்டது. என் மகனை இழந்துவிட்டேன். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் பாதுகாப்பைத்தான்” என்றார். லட்சக் கணக்கான எகிப்தியர்களின் மனநிலையும் இதுதான். என்ன விலை கொடுத்தாவது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று நினைக்கின்றனர். அது போலீஸ் ராஜ்யமாக இருந்தாலும் பரவாயில்லை என்றே கருதுகின்றனர். ராணுவம் தன்னுடைய விருப்பப்படி எவரையும் கைதுசெய்வதையும் விசாரணையின்றி சிறையில் அடைப்பதையும், கைதுசெய்யப்படுகிறவர்கள் சித்திர வதை செய்யப்படுவதையும் பற்றி அவர்கள் தற்போது கவலைப்படுவதில்லை.

சிசியின் ஆதரவாளர்களில் பலர், 2011-ல் எகிப்தில் ஜனநாயகப் புரட்சிக்காகத் தாங்கள் உற்சாகம் காட்டியதை நினைவுகூரக்கூடத் தயாரில்லை. தாரீர் சதுக்கத்தில் அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் அமெரிக்க ஆதரவாளர்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டும் மக்களிடம் இப்போது எடுபடுவதால், பல புரட்சியாளர்கள் இப்போது துரோகிகளாகக் கருதப்படு கின்றனர். ராணுவம், நீதிமன்றம், நாடாளுமன்றம் போன்ற வற்றின் ஆதரவு சிசிக்கு நிச்சயம் உண்டு. முபாரக் காலத்தில் செல்வம் குவித்தவர்களும் ஆதரிப்பார்கள். தங்களுடைய செல்வமும் செல்வாக்கும் சிசியின் காலத்திலும் சேதமில்லாமல் இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

‘முஸ்லிம் சகோதரத்துவம்' என்ற இயக்கம், மக்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர் என்று நம்பத் தயாராக இல்லை. மதத்துக்கு விரோதமான எதிரிகள் மீது தாங்கள் நடத்தும் தாக்குதல் புனிதப் போர் என்று அந்த அமைப்பு இப்போதும் கருதுகிறது. சட்டம், ஒழுங்கை மீட்பதாக இருந்தாலும் சிசியை ஏற்க முடியாது என்று கருதும் புரட்சியாளர்கள் அரங்கைவிட்டே வெளியேறிவிட்டனர். எனவே, சிசிக்கு இப்போது எதிர்ப்பு பலவீனப்பட்டிருக்கிறது.

எகிப்தில் புரட்சி முழுச் சுற்று முடிந்துவிட்டதா? புரட்சிகள் தோல்வியடையுமே தவிர, எதிர்த்திசையில் பயணிக்காது. எகிப்தியர்கள் தங்களுடைய அச்சத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டனர், தங்களுடைய நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டனர். மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு அதிபர்களைப் பதவியிலிருந்து இறக்கினர். சிசிக்கு இப்போது கிடைக்கும் ஆதரவு முழுமையானது அல்ல. ஆனால், எகிப்தியர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்ற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

மூன்று வாய்ப்புகள்

சிசிக்கு முன்னால் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. முதலாவதாக, பழைய ஆட்சிமுறையைப் பயன்படுத்த லாம். அதாவது, ஊழல் செய்த அதிகாரிகளைப் பாது காத்து, மக்களை அடக்கி, முபாரக்கின் கொள்கைகளை அப்படியே தொடரலாம். 30 ஆண்டுகள் அப்படிப்பட்ட ஆட்சியைச் சகித்துக்கொண்டிருந்த எகிப்தியர்கள் மீண்டும் சகித்துக்கொள்வார்களா என்பதே கேள்வி.

இரண்டாவது வழி, 1950-களிலும் 1960-களிலும் அரபு நாடுகளில் பரவலாக இருந்த சர்வாதிகார ஆட்சிமுறை; மக்களுடைய அரசியல் உரிமைகளை அழித்து, நாட்டை உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல முயற்சி மேற்கொள்வது. ஆட்சியாளர் எவ்வளவுதான் மனதளவில் நல்லவராக இருந்தாலும், சர்வாதிகார ஆட்சி பேரழிவுக்கே வழிவகுக்கும் என்பது உலக அனுபவம்.

மூன்றாவது மிகவும் கடினமான வழி. மக்களிடம் தனக்குள்ள ஆதரவைப் பயன்படுத்தி நாட்டின் நிர்வாகத் திலிருந்து ஊழலை ஒழிக்க வேண்டும். பணக்காரர்கள் மீது அதிக விகிதத்திலும் நடுத்தரப் பிரிவினர் மீது லேசான விகிதத்திலும் வரிவிதிப்பைக் கையாண்டு வறுமையை ஒழிக்க வேண்டும். அதே வேளையில், தனிநபர் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளித்து, அராஜகமான கைதுகளையும் சித்திரவதைகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அரசியல் சட்டத்தையும் பொதுச் சட்டங்களையும் மதித்து ஆட்சி நடத்த வேண்டும்.

சிசி இதில் எதைத் தேர்வுசெய்கிறார் என்று விரைவில் தெரிந்துவிடும்.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x