Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM
உலகத்தை இப்போதுதான் புவியாகவும் பார்க்கப் பழகுகிறோம். சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களாகவே உலக நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். விண்வெளியாகவும் வெப்பமாகவும் பனிப்பாறைகளாகவும் கடல் மட்டமாகவும் மழையாகவும் மண்ணாகவும் உலகத்தைப் பார்த்து அதைப் புவியாகவும் அவதானிக்கப் புதிதாகப் பழகிவருகிறோம். பருவநிலை மாற்றம் இந்த அவதானிப்புப் புரட்சியைத் தூண்டியிருக்கிறது.
ஆனால், காவிரிக் கரையில் இந்த அவதானிப்பு மரபு புதியதல்ல. மண்ணும் நீரும் மழையுமே இங்கு மனிதர்கள் வலுவாக உணர்ந்த உறவுகள். ஐந்து தசாப்த நிகழ்வுகளைப் பருவநிலை மாற்றப் பின்னணியில் இங்கு புரிந்துகொள்ள இயலும். புவிப் பரப்பு முழுவதும் நிகழும் மாற்றமானாலும் அதற்கு அந்தந்த இடம் சார்ந்த உள்ளூர் புரிதலும் உள்ளதுதானே!
காற்றோடு வரும் காவிரி
ஐந்து மாற்றங்கள் காவிரிப் படுகையின் பருவ நிலையோடு தொடர்புள்ளவை: மேலக்காற்று என்ற தென்மேற்குப் பருவக்காற்று இப்போது வலுவாக இல்லை. ஐப்பசி, கார்த்திகை அடைமழை குறைகிறது. ஆறு வாங்காமல் எதிர்த்துக்கொள்வதால் பெய்யும் மழையும் வயல்களிலிருந்து வடிவதில்லை. மார்கழியின் கர்ப்போட்டக் கால மேகங்கள் கண்ணுக்குப் படுவதில்லை. தை மாதப் பனியும் குளிரும் அப்போதுபோல் இல்லை.
மே மாத நடுவிலிருந்து மேலக்காற்று தொடங்கிவிடும். கட்டைவண்டிகூட மேற்கிலிருந்து கிழக்கே வந்தால் மாடுகளை விரட்டாமலேயே வேகமாக வரும். அதுவே கிழக்கிலிருந்து மேற்கே சென்றால் எதிர்க்காற்றில் முயன்றுதான் நகர வேண்டியிருக்கும். காய்ந்த பனை ஓலையை வளைத்துச் சுற்றி, முனைகளைக் கருவை முள்ளால் இணைத்து, சிறிய சக்கரமாகச் செய்துகொள்வோம். ஆற்று மணலில் அதை வைத்தால் போதும்; மேலக்காற்றில் அது உருளும் வேகத்துக்குக் கூடவே ஓடி சிறுவர்களால் அதைப் பிடிக்க முடியாது. ஆடை சலசலப்பதுபோல் தூவாளி மணலை மேலக்காற்று தூற்றிச் சென்று ஆற்றுக் கரையோரம் சரித்துக் குவித்துவிடும்.
மேலக்காற்று காவிரியில் தண்ணீரைக் கொண்டுவரும் என்று சொல்வது வழக்கம். ஓடிவரும் வெள்ளத்தின் முதுகு சிலிர்க்கச் சிலிர்க்க இந்தக் காற்று அதைத் தழுவிக்கொண்டே இன்னும் வேகமாக வீசும். இங்கு மேற்குபார்த்த வீடுகளை விரும்ப மாட்டார்கள். அதுபோலவே புயலுக்குப் பயந்து தெற்குபார்த்த வீடுகளின் கூரையையும் உயரமாக வைக்க மாட்டார்கள். இன்றைய பருவநிலை இவற்றையெல்லாம் கவனித்து வீடு கட்டும்படி யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை!
ஐப்பசி அடைமழை சன்னமாகக் குறைகிறது. வழக்கத்துக்கு மாறாக, ஆனி ஆடி மாதங்களில் நாள் விட்டு நாள் நசுங்கலாகவும், சில நேரம் ஊன்றிப் பெய்யும் மழையாகவும் பருவம் தவறுகிறது. ஐப்பசி, கார்த்திகையில் அப்போதெல்லாம் பகல், அந்தி, இரவு என்று தெரியாமல் இழைந்துபோகுமாறு வானம் மூடிக்கொள்ளும். ஈசானியத் திக்கிலிருந்து பறக்கும் மாசி பாட்டம் பாட்டமாக பொழிந்துகொண்டே வானத்தில் கரைந்துபோகும். குடை தாங்காத மழை என்பதால் தென்னங்கீற்றில் குடலை செய்து தலையையும் முதுகையும் மறைத்து மாட்டிக்கொண்டு நடப்பார்கள். சோரப் பெய்யும் மழையால் தரையில் அடிவைக்கும் இடமெல்லாம் தண்ணீர் கொப்பளிக்கும். சிவப்பு, வெள்ளை, நீலோத்பலம் என்று அல்லி மலர் அடைத்துப் பூத்த குளமும் குட்டையும் வாய்க்காலும் இப்போது எங்கே ஒளிந்துகொண்டன?
மாட்டுக்குக் காய்ந்த வைக்கோல் ருசிப்பதுபோல் பச்சைப் புல் ருசிக்காது. பச்சைக் காய்கறியோ, அப்போதே பிடித்த மீனோ, அப்போதைய ஆட்டுகறியோ நமக்கு ருசிக்காது. கத்திரி வத்தல், அடைமாங்காய், கருவாடு, உப்புக்கண்டம்… இப்படி உப்பிட்டுக் காயவைத்த பண்டங்கள் மட்டுமே ருசிக்கும் நிலைக்கு மழைக்கால உடம்பு குன்றிப்போகும். மழைக்காலம் மழைக்காலமாக இல்லாத இந்தக் காலத்தில் இந்த ருசி பேதமும் நாக்குக்கு மரத்துப்போனது. பருவநிலை மாற்றத்துக்கு நம் உடம்பும் சொல்லாமலேயே மிக நுணுக்கமாக இப்படி மாறிக்கொள்வது விந்தைதான்.
வயலிலிருந்து வடியும் குறைந்த மழையையும் இப்போது ஆறு வாங்கிக்கொள்வதில்லை. ஆற்றின் எதிர்ப்புக்கு அதன் போக்கில் வளர்ந்த சீமைக் காட்டாமணியும் கடலோர இறால் குட்டைகளும் காரணம் என்று நினைத்திருத்தோம். இப்போது கடல் மட்டம் உயர்வதால் வரும் கடல் எதிர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மழை நின்று பத்து நாட்களாகின்றன; வெள்ளம் கிடையாது. ஆனால், வடிய வேண்டிய தண்ணீரை வாய்க்காலும் ஆறும் வாங்கவில்லை என்றால் அதற்கு வேறு என்ன காரணம் சொல்வது?
தொழிற்புரட்சிதான் தொடக்கமோ?
மழைக்காலம் முடிவதற்கு அடையாளமாக மார்கழி பாதிவாக்கில் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக வெண்மேகங்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும். நேற்றுவரை கறுத்துக் கிடந்த வானம் இப்படி வரும் பொதி மேகங்களுக்குப் பெருந்தடமாக மாறிக்கொள்ளும். இதற்குக் கர்ப்போட்டம் என்று பெயர். மேகங்களின் போக்கு எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு அடுத்த ஆண்டு மழையும் அதிகமாகும் என்று சொல்வார்கள். நாம் ஒரு மேகத்தைப் பார்த்து ரசித்து ஓய்வதற்குள் அதைத் துரத்திக்கொண்டு அந்த இடத்துக்கு அடுத்த மேகம் வந்துவிடும். இப்போதெல்லாம் கர்ப்போட்ட மேகங்களை அதிகம் காண முடிவதில்லை. மழை குறைந்துவருகிறது என்பது வெறும் ஊகமல்ல என்பதற்கு இந்தத் தொடர் நிகழ்வை ஆதாரமாக்கலாம்.
எப்போதாவது மார்கழி, தை மாதங்களில் வெறும் புகைமூட்டமாக இருக்கும் பனியைப் பார்க்கிறோம். மழை பெய்து கூரைவாரி ஊற்றியதுபோல் அப்போது பெய்யும் பனி இப்போது இல்லை. தென்னை மரங்களுக்குக் கீழே திட்டுத்திட்டாகப் பனி சொட்டிக் கிடக்கும். குளிரில் மனிதர்களுக்குத் தூக்கம் கலைந்துவிடும். கோழி கூவுவதற்கு முன்பாகவே விழித்து, கிடைத்ததைக் கொளுத்திப்போட்டு வீட்டுக்குள்ளேயே கைகால்களைக் காய்ச்சிக்கொள்வார்கள். குளிர்காயும் சுகமும் உடம்புக்கு மறந்துபோனது. பனியைக் கொண்டே தழைக்கும் உளுந்தும் பயறும் வயல்வெளியிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அந்த இடத்துக்குப் பாசன உளுந்து வந்திருக்கிறது.
பருவநிலை மாற்றத்துக்குத் தக்க எப்படியோ நாமும் மாறிக்கொண்டே இருப்பதால் மாற்றங்கள் நம் பிரக்ஞைக்குள் திரண்டு இருப்பு பெறுவதில்லை. வரலாறு மிகவும் விதந்துகொள்ளும் தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த நிலைமையோடு ஒப்பிட்டுத்தான் மாற்றங்களை அடையாளம் காண்கிறார்கள். அந்தப் புரட்சியைப் பருவநிலை மாற்றத்தின் தொடக்கமாக்குவதும் நமக்கு ஒரு அதிர்ச்சியே!
- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT