Published : 27 Feb 2016 10:45 AM
Last Updated : 27 Feb 2016 10:45 AM
இப்போதைய செய்தியில் அதிகம் இடம்பெறுவது ஏற்றத்தாழ்வு. பிரான்சின் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி இந்தியாவில் இருந்தபோது உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து கேட்டதற்கு அதிகரித்துவரும் பணக்காரர்களுக்கு சர்வதேச வரி விதிக்கலாம் என்றார். ஒரு பக்கத்தில் பெரும்பாலான சிஇஓக்களின் சம்பளம் அதிகரிப்பு குறித்த செய்தியும், டிவி சேனல்களில் பொதுத்துறை வங்கிகளில் பெரும் கடன் தொகை வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனின் பிரசாரமும் ஏற்றத்தாழ்வு காரணமாக பாதிப்புக்குள்ளானது.
சரி சமம் என்பது நமது விருப்பம். ஆனால் அதை அமல்படுத்த முனையும்போது நம்மையும் அறியாமல் ஒருவித பதபதைப்புடன் கூடிய முக மாற்றம் வெளிப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் வளர்ச்சி. அதற்குத் தேவை வாய்ப்புகள். இதன் மூலம் நாட்டில் நிலவும் ஏழ்மையை ஒழித்து ஏற்றத்தாழ்வை போக்குவதாகும். இதனால் அம்பானி எவ்வளவு சம்பாதிக்கிறார், அவர் எவ்வளவு வரி செலுத்து கிறார். எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளார். சமூகத்துக்கு அவரால் சேர்ந்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிடுவது எனக்கு வேண்டாத வேலை.
ஆனால் `ஆம் ஆத்மி’ எனும் சாதாரண குடிமகன் இவை அனைத்தையும் பார்க்கிறான். சில சமயங்களில் தன்னை ஒப்பிட்டுப் பார்க் கிறான். ஆனால் ஒருபோதும் பெரும் பணக்காரர் களுடன் ஒப்பீடு செய்வதில்லை. ஒருவரின் வாழ்க்கை முறை மற்றவர்களைத் தூண்டுவதாக அமைகிறது. இருப்பினும் தர்மத்தின் பால் பொதுவாக அனைவரும் நெறி தவறாமல் வாழ்கிறோம். இது சட்டத்தின் கடமையால் அல்ல.
2014-ம் ஆண்டு இந்திய மக்கள் மோடியை தேர்வு செய்தனர். நாட்டில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கி அதை வாய்ப்புகளாக மாற்றுவார் என மக்கள் நம்பியதன் வெளிப்பாடுதான் அது. உண்மையான வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்ற மோடியின் பேச்சை உண்மையான வாக்குறுதியாக மக்கள் நம்பினர். அதனால் மோடியைத் தேர்ந்தெடுத்தனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியது உண்மையே. ஆனால் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் இருந்தது பிரச்சினையாகிவிட்டது. அதனாலேயே அளித்த வாக்குறுதிகளை மோடியால் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
கட்டமைப்புத் துறைகளில் அரசு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். இப்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரே கேள்வி திட்டமிட்டபடி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ஜேட்லி முனைவாரா?
கட்டமைப்புத் துறையில் முதலீடு என்பது வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் மிக முக்கியமானது. இத்தகைய முதலீடுகளுக்காக பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ஜேட்லி நிதி திரட்ட முடியும். பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைக் கூட விற்பனை செய்யலாம். போட்டிகளை சமாளிக்க இயலாத பொதுத்துறை வங்கிப் பங்குகளை முதலில் விற்பனை செய்வது சரியானதாக இருக்கும்.
பொதுத்துறை வங்கிகள் இன்று மிக மோசமான நிதி நிலையில் உள்ளன. இதற்கு ஒரே தீர்வு இவற்றில் அரசுக்கு உள்ள பங்குகளை 50 சதவீதத்துக்கும் குறைவாக குறைப்பதுதான். இதன் மூலம் நிதிச் சீர்திருத்த நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டுகிறது என்ற சமிக்ஞையை வெளி உலகுக்கு காட்ட முடியும். அத்துடன் இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்கான சூழல் உருவாகி வருகிறது என்ற தோற்றமும் உருவாகும். இதன் மூலம் வாய்ப்புகளை உருவாக்கி வேலை வாய்ப்பைப் பெருக்கலாம்.
வாய்ப்புகள் என்பது வாழ்க்கையின் நல்ல தொடக்கமாகும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ நிலை என்பது சாத்தியமில்லாத இலக்கு. அதற்குப் பதிலாக சரிசமமான வாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமானது. அதாவது கல்வி, சுகாதாரம் ஆகியன அனைவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் இதை எட்ட முடியும். இந்திய அரசு சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அதேபோல மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட்டதாக இருக்க வேண்டி யதும் அவசியமாகும். அப்படியெனில் அரசுகளே மருத்துவமனைகளையும், சிறந்த கல்வி மையங்களையும் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அவை உருவா வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தலாம். எதிர்வரும் பட்ஜெட்டில் இவற்றுக்கு இடமிருக் கிறதா, முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்ப்போம்..
நமது மக்களிடையே குறிப்பாக பெரும் பாலோர் தங்கள் வாழ்நாளில் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டு கொந்தளிப்பதைப் பார்க்கிறோம். சிவப்பாக இருப்பவர் கல்யாண சந்தையில் வேண்டுமானால் அதிகம் விரும்பப் படுவராக இருக்கலாம். ஆனால் வேலை செய்யும் பொது இடங்களில் அவருக்குக் கிடைக்கும் மரியாதை, முக்கியத்துவத்துக்கான காரணம் என்ன? இதற்கு நம்மிடையே பொதிந்திருக்கும் அதிகார வர்க்க மனப்பாங்குதான். மேலதிகாரி எதை விரும்புகிறோரோ அது சரியானது என்ற எண்ணப்போக்கே இதற்குக் காரணம்.
இதுவே அரசியலாக இருந்தால் `காலில் விழு மகனே உண்ணை நான் காக்கிறேன்’ என்பதாகிறது. ரோஹித் வெமுலாவின் மரணம் நாடு முழுக்க பெரிதாக பேசப்பட்டது. இதற்குக் காரணம் ரோஹித்துக்கு எது தேவையோ அதைத் தருவதற்கு பல்கலைக்கழகம் தவறிவிட்டது என்பதுதான் யதார்த்தம். இதுபோன்ற பாரபட்சமான நடவடிக்கைகளை நாம் களைய வேண்டும். சமூகத்தில் அனைத்துத் தரப்பிலும் நம்மால் இதை நீக்க முடியாது என்றாலும், சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேறும் அனைவருக்கும் அதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
பாரபட்சமின்மை என்பதை ஒப்புக் கொண்டோமானால் நாம் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும். சாதாரணமாக ஒரு பெண்ணோ அல்லது ஆணோ அடுத்த கட்டம் நோக்கி வளர்கிறார் என்றால் அதில் பாரபட்சம் கிடையாது. இதற்கு அடித்தளம் அமைப்பது கல்வி மையங்கள்தான். மிகச் சிறந்த கல்வி மையங்கள் ஏற்றத்தாழ்வை ஒருபோதும் உருவாக்காது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியன் தனது சிஇஓ சிறப்பாக செயல்படுவதால்தான் தனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது என்றே நினைக்கிறான். தன்னை விட நூறு மடங்கு அதிக சம்பளம் அவருக்குக் கிடைக்கிறது என்று அவன் ஒருபோதும் நினைப்பதில்லை. இதைத்தான் அமெரிக்க சிந்தனையாளர் ஜான் ரால்வ்ஸ் தனது ``தி தியரி ஆப் ஜஸ்டிஸ்’’ நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலகில் சமத்துவம் அதாவது ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை என்பது அடைய முடியாத ஒன்றல்ல. ஆனால் அது ஆபத்தானது. இதை நாம் சோவியத் ரஷியாவிலும் மாவோசிய சீனாவிலும் கண்கூடாக கண்டுவிட்டோம். எனவே ஜனநாயக வழியிலான முதலாளித்துவ போக்கு நமக்கு சரியானதுதான். மேற்கக்திய நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு நிலை இருப்பது உண்மைதான்.
அங்கும் வேலையிழப்பு ஏற்பட்டு நடுத்தர மக்கள் தவிப்பது நிகழ்கிறது. ஆனால் இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தை வளமிக்கதாக உயர்த்துவோம். அதன் மூலம் நமது பொருளாதாரத்தை வலுமிக்கதாக ஆக்குவோம். அனைவருக்குமான சமத்துவ வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவோம். இதற்கு அனைவருக்கும் சிறந்த கல்வியை அளிப்போம். அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதியை ஏற்படுத்துவோமாக.
இதைச் செய்வாரா ஜேட்லி. பட்ஜெட்டில் பார்ப்போம்.
gurcharandas@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT