Published : 16 Aug 2021 03:20 AM
Last Updated : 16 Aug 2021 03:20 AM

பருவநிலை மாற்றமும் தமிழ்நாடும்: செய்ய வேண்டியது என்ன?

‘‘பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்து வதாகச் சொல்லி, அரசுகள் செய்திருப்ப தெல்லாம் வெறும் கண்துடைப்பு. என்ன செய்தாலும் அடுத்த இரு பத்தாண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது’’ எனப் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (ஐ.பி.சி.சி.-Intergovernmental Panel for Climate Change) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 66 நாடுகளைச் சேர்ந்த 234 அறிவியலர்கள் கூட்டாகத் தயார்செய்துள்ள இந்த ஆறாவது பருவநிலை அறிக்கை, புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைக் கடக்கும் சூழல் ஏற்பட்டால், மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் எனக் கூறுகிறது.

1969-லிருந்து தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வானிலை நிலையங்களில் பதிவான வானிலைத் தரவுகளைத் தொகுத்து ஜெயகுமார வரதன் முதலானோர் மேற்கொண்ட முன்னோடி ஆய்வு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. புவிவெப்பமாதல் விளைவாக மழைப் பொழிவிலும் வானிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்கிறது இந்த ஆய்வு. கோவையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரி கூடிவருகிறது; வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை சராசரி கூடிவருகிறது; மதுரையில் குறைந்தபட்ச வெப்பநிலை, அதிகபட்ச வெப்பநிலை இரண்டும் கூடிவருகின்றன என்கிறது இந்த ஆய்வு.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பத்தாண்டுகளுக்குச் சுமார் 0.1 முதல் 0.2 டிகிரி எனும் வீதத்தில் வெப்பநிலை உயர்கிறது. வடஇந்தியாவின் சில பகுதிகளைவிட இது குறைவு என்றாலும் இதே போக்கில் தொடர்ந்தால் சிக்கல் ஏற்படும். இதுவரை வடமாநிலங்களைப் போல தென்னிந்தியாவில் கொடும் வெப்ப அலைகள் வீசியது இல்லை. ஆனால், பருவநிலை மாற்றத்தின் விளைவாகக் கொடும் வெப்ப அலைகள் 21-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்குள் தென்னிந்தியாவிலும் வீசத் தொடங்கும் என ரோஹினி முதலான ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

சமச்சீரற்ற போக்கு

ஸ்ராத் ஜெயின் உள்ளிட்டோர் மழை மற்றும் வெப்பநிலை மாற்றத்தில் ஏற்படும் போக்கு குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர். காவிரி நீர்பிடிப் பகுதியில் ஆண்டுக்கு 0.879 மிமீ என்ற அளவில் மழை கூடிக்கொண்டுபோகிறது. ஆனால், மழைப் பொழிவு நாட்கள் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. வைகை, தாமிரபரணி நீர்பிடிப் பகுதிகளில் ஆண்டுக்கு 0.950 மிமீ அளவுக்கு மழை அளவு குறைந்துள்ளதோடு, மழைப் பொழிவு நாட்கள் ஆண்டுக்கு 0.333 என்ற அளவில் குறைந்துவருகின்றன. பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக தென்னிந்தியா அமையும் என்று சோனாலி பட்நாயக்கும் அவரது ஆய்வுக் கூட்டாளிகளும் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில ஆய்வுகளின்படி தென்தமிழ்நாடு, கேரளம் ஆகிய பகுதிகளில் மழையற்ற நாட்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. பல நாட்கள் இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக மழை பொழியாமல், ஒருசில நாட்களில் மட்டுமே அதிக அளவு பொழிந்துவிடுவதால் வெள்ளப் பெருக்கு, வெள்ளச் சேதம் ஏற்படுவது அதிகரித்துவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. திடீர் மழை என்பதால், நீர்நிலைகளில் சேகரிக்கவும் முடியாது; நிலத்தடி நீராகவும் அது சேகரமாகாது என்பதே இதன் விளைவு.

தமிழகத்தில் பருவமழை

ஜெயகுமார வரதன் உள்ளிட்டோரின் ஆய்வுகள் பருவநிலை மாற்றத்தின் விளைவாகத் தமிழ்நாட்டுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழையின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என எச்சரிக்கை செய்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பொழியும் மழை அளவு கூடியுள்ள அதே சூழலில், செப்டம்பர் மாதத்தில் பொழியும் மழை அளவு குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பருவநிலை மாற்றத்துக்கு முன்பு கனமழை பொழியும் மாதமாக இருந்த செப்டம்பர், இப்போது பருவமழை பின்வாங்கும் மாதமாக மாறிவருகிறது என்கிறார்கள். மேலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொழியும் மழையின் அளவு கூடியுள்ளது என்கின்றன இந்த ஆய்வுகள்.

அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், தென்மேற்குப் பருவமழை குறைந்து பரவலும் குறைந்துபோயுள்ளது; வடகிழக்குப் பருவமழை அதிகரித்து அதன் பரவல் தன்மையும் கூடியுள்ளது எனலாம். இதன் தொடர்ச்சியாக தென்மேற்குப் பருவமழையை நம்பி விவசாயம் செய்யும் கால இடைவெளி குறைந்துள்ளது. அதே சமயத்தில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெள்ளப் பெருக்கைச் சமாளித்துதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் அளவில் மாற்றங்கள்

சிவப்பிரகாசம் உள்ளிட்டோர், தாமிரபரணி ஆற்று நீர்பிடிப் பகுதியில் மழைப் பொழிவின் பாங்கில் 1971 முதல் 2000 வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வுசெய்து வெளியிட்டுள்ளனர். அந்த நீர்பிடிப் பகுதியில் உள்ள 14 மழைமானி, வானிலைத் தரவுகளைத் திரட்டி நடத்திய ஆய்வில், பாபநாசம் முதலான மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ள அதே சமயம், தாமிரபரணி நீர்பிடிப் பகுதியில் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துவருகிறது எனக் கூறுகிறனர்.

இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பருவநிலை மாற்றத்தைக் கணக்கில் கொண்ட முன்நோக்குத் திட்டமிடுதல் நம் உடனடித் தேவை என்றே கூற வேண்டும். தாமிரபரணிப் பகுதியின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் தற்போது மழை வரத்து குறைந்துவரும் வேளையில், என்ன விதமான பயிர்கள் செய்யப்போகிறோம்; முன்னர் உறிஞ்சிவந்த அதே அளவு நிலத்தடி நீரை இன்னமும் எடுக்க அனுமதிக்க முடியுமா என்பது போன்ற பல்வேறு திட்டக் கோட்பாடு சார்ந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டிவரும்.

என்ன செய்ய வேண்டும்

இதுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் பொதுவாக, உள்ளூர் சார்ந்த நுட்பமான ஆய்வுகள் குறைவு. பொத்தாம்பொதுவான ஆய்வுகள் மற்றும் ஒருசில வானிலை நிலையங்களில் உள்ள தரவுகளைக் கொண்டு நடத்தப்படும் முன்னோட்ட ஆய்வுகள்தான் உள்ளன என்பதுதான் இன்றைய நிலை.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் எந்தப் போக்கில் செல்கிறது என்பதை அறிய முற்படாவிட்டால், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோலத் திசை தெரியாமல்தான் அலைந்துகொண்டு இருப்போம். இந்த ஆய்வுகள் வெறும் அறிவியல் கேள்விகளுக்கு விடை தரும் ஆய்வுகள் அல்ல. எதிர்கால வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்க உதவும் நுட்பமான ஆய்வுகள் வழியாக இன்று உள்ள போக்கை அறிய முற்பட்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத் திட்டமிடலைச் செய்யவில்லை என்றால், நமது திட்டங்களும் பருவநிலை மாற்றத்தின் போக்கும் ஒன்றுக்கொன்று முரணாகிவிடும். எனவே, அறிவியல் பார்வையில் எதிர்காலத் திட்டமிடலை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றால், பருவநிலை மாற்றத்தின் உள்ளூர் அளவிலான போக்குகள் உட்பட அனைத்தையும் நாம் நுட்பமாக ஆய்வுசெய்வது அவசியம்.

- த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை அறிவியலாளர், விஞ்ஞான் பிரச்சார். தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x