Published : 25 Feb 2016 09:02 AM
Last Updated : 25 Feb 2016 09:02 AM
மதுவிலக்கு என்பது மக்களின் மனதுக்கு நெருக்கமான பிரச்சினை. அதைக் காங்கிரஸ் கையி லெடுத்துப் போராடினால் மக்கள் செல்வாக்கு பெருகும் என்றும் அதைக்கொண்டு நீதிக்கட்சியை வீழ்த்தலாம் என்றும் கணித்தார் ராஜாஜி. அதை சத்தியமூர்த்தி போன்றோர் ஏற்க மறுத்த போது, “மதுவிலக்கு கோரிப் போராடினால், வரும் தேர்த லில் உங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்” என்றார். ஆகட்டும் என்று தலையசைத்தனர் சுயராஜ் ஜியக் கட்சியினர்.
நீதிக்கட்சி அரசும் பல முற்போக்கான காரியங் களைச் செய்திருந்தது. முக்கியமாக, மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதியை நீக்கியது, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழக உருவாக்கம், 5 முதல் 12 வயது குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி போன்றவற்றைச் சொல்லலாம்.
ஆனால் தேர்தல் என்று வந்தபோது சுயராஜ்ஜியக் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே கடும் போட்டி. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியின்படி சுயராஜ்ஜியக் கட்சிக்காக ராஜாஜி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது நீதிக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டியவர், பெரியார். காங்கிரஸ் தொண்டராக இருந்த அவர், வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் இப்போது நீதிக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.
வழக்கம்போல,
“தேர்தலில்
வென்றால் ஆட்சியமைக்க மாட்டோம்” என்று பிரச்சாரம் செய்தது சுயராஜ்ஜியக் கட்சி. மாறாக,
“தேர்தலில் வென்று ஆட்சி நிர்வாகத்தைச் சிறப்பாகத் தொடர்வோம்” என்றது நீதிக்கட்சி. ஆனால் மக்களின் தீர்ப்போ நீதிக்கட்சிக்கு எதிராக வந்தது. வெற்றிபெற்ற 98 பேரில் 41 பேர் சுயராஜ்ஜியக் கட்சியினர். இருமுறை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சிக்கு வெறும் 21 இடங்களே கிடைத்தன. மிச்சமுள்ள 36 பேரும் சுயேச்சைகள்.
சென்னை மாகாணம் சந்தித்த விநோதமான தேர்தல் முடிவு அது. தனிப்பெருங்கட்சியான சுயராஜ்ஜியக் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். பிரிட்டிஷாரின் ஆட்சிமுறைக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதே எங்கள் முதன்மைப் பணி என்று சொல்லிவிட்டது சுயராஜ்ஜியக் கட்சி. பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்பது நீதிக்கட்சியின் நிலைப்பாடு.
இந்த நிலையில் அரசியல் காட்சி மாற்றங்கள் நடந்தன. நீதிக்கட்சி சார்பில் வெற்றிபெற்ற பி.சுப்பராயன் திடீரென அதிலிருந்து விலகினார். சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்தார். அதன் பின்னணியில் சுயராஜ்ஜியக் கட்சி இருந்தது. 4 டிசம்பர் 1926 அன்று சென்னை மாகாணத்தில் சுயேச்சை முதல்வர் பி.சுப்பராயன் தலைமையில் புதிய சுயேச்சை அமைச்சரவை உருவானது. அதில் அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் இடம்பெற்றனர். இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர்கள்.
தேர்தல் அரசியலை எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் கட்சி, அடுத்த தேர்தலிலாவது நேரடியாகக் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்தது!
ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
(கோஷம் போடுவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT