Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM
அறுபதுகளின் மத்தியில் தொடங்கிய பசுமைப் புரட்சி காலத்திலிருந்து தமிழ்நாடு விவசாயத் துறையில் சிறந்த மாநிலமாகப் பெயர் பெற்றிருந்தாலும், அதன் விவசாயிகள் வருவாய்க் குறைவு காரணமாகக் கடன் தொல்லையில் சிக்கிப் பெரும் துயரங்களைச் சந்தித்துவருகிறார்கள். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை வேளாண் துறைக்குத் தனி வரவு-செலவுத் திட்டம் தயாரிக்க உள்ள திமுக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது அவசியமாகிறது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, முக்கியப் பயிர்களின் ஒரு ஹெக்டோ் மகசூல் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தாலும், மொத்த உற்பத்தியில் மக்காச்சோளம், சில பருப்புப் பயிர்கள் தவிர மற்ற பயிர்களில் நம் மாநிலத்தின் பங்கு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் கடுமையாகக் குறைந்துள்ளது.
1980-83-களில் சராசரியாக 59.07 லட்சம் டன்களாக இருந்த மொத்த உணவு தானியங்களின் உற்பத்தி 2017-20 ஆண்டுகளில் 107.91 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளபோதிலும், தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.51%-லிருந்து 3.73%-ஆகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல் உற்பத்தியின் பங்கு 8.62%-லிருந்து 5.73% ஆகவும், துவரை 2.13%-லிருந்து 1.38% ஆகவும், மொத்த எண்ணெய்வித்துப் பயிர்களின் உற்பத்தி 9.31%-லிருந்து 3.17% ஆகவும், பருத்தி 3.52%-லிருந்து 1.17%-ஆகவும், கரும்பு 10.18%-லிருந்து 4.19%-ஆகவும் குறைந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன? தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி வேகம் சராசரி இந்தியாவின் வளா்ச்சி வேகத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் குறைந்துவரும் நிகர சாகுபடிப் பரப்பு. 1970-71-லிருந்து 2018-19 வரையில், மொத்தமாக 15.87 லட்சம் ஹெக்டோ் சாகுபடிப் பரப்பை தமிழ்நாடு இழந்துள்ளது.
வேளாண் உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறார்கள். முதல் பெரும் பிரச்சினை பயிர்ச் கிடைக்கும் குறைவான வருமானம். இந்தியக் கிராம மக்களின் நிதி நிலவரத்தை அறிய நபார்டு வங்கியால் 2016-17-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தமிழ்நாட்டு விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம் வெறும் ரூ.9,775 மட்டுமே. இதைவிட அதிர்ச்சியான விஷயம், தமிழ்நாட்டு விவசாயிகளின் மொத்த ஆண்டு வருமானத்தில் பயிர்ச் சாகுபடியில் கிடைக்கும் வருவாய் வெறும் 27%. இது இந்தியாவின் சராசரி அளவைவிட (73%) மிகவும் குறைவு.
அதிகமாகத் தேவைப்படும் பயிர்ச் சாகுபடிச் செலவு குறைவான வருமானத்துக்கு முக்கியக் காரணம். இந்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் (2017-18) புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் முக்கியப் பயிர்களின் உற்பத்திச் செலவு, நாட்டின் சராசரிச் செலவைவிட மிகவும் அதிகம். நெல்லுக்கு 26.01%, சோளத்துக்கு 67.78%, உளுந்துக்கு 33.59%, நிலக்கடலைக்கு 13.32%, பருத்திச் சாகுபடிக்கு 42.99% கூடுதலாகத் தமிழ்நாட்டு விவசாயிகள் செலவுசெய்துள்ளார்கள்.
வருமானக் குறைவால் விவசாயிகள் பெரும் கடனாளிகளாக மாறிவிட்டனா். 2016-17 புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் 61% விவசாயிகள் கடன்பட்டுள்ளார்கள். இது இந்திய சராசரி அளவைவிட (47%) அதிகம். விவசாயக் குடும்பத்தின் கடனளவும் (ரூ.1,00,266), இந்திய அளவைவிட (ரூ.70,580) அதிகம். தொடர்ந்து கடன் வாங்கி விவசாயம் செய்வதால், தமிழ்நாட்டு விவசாயிகளின் கடன்-சொத்து விகிதம் (4.19), இந்தியாவின் சராசரி அளவைக் (2.46) காட்டிலும் மிகவும் அதிகம்.
விவசாய வளர்ச்சியும், விவசாயிகளின் வருமான வளர்ச்சியும் நெருங்கிய தொடர்புடையவை. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யாமல், விவசாயத் துறையில் வளர்ச்சி ஏற்படுத்துவது சிரமம். எனவே, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க புதிய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலில், நீர்ப்பாசன வளர்ச்சியைப் பெருக்க நடவடிக்கை வேண்டும். 1960-61 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் எந்த வளர்ச்சியும் அடையாத ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, செலவு குறைவான குளம், கால்வாய்ப் பாசனத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்.
இரண்டு, பயிர்ச் சாகுபடியில் கூலிச் செலவு அதிகமாக உள்ளதால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயிர்ச் சாகுபடி வேலையுடன் இணைப்பதால் செலவைக் குறைக்க முடியும். மூன்று, தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில், 21% மட்டுமே 2018-19-ல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது ஆந்திரம் (58.36%), தெலங்கானாவை (77.75%) விடக் குறைவாகும். அரசு கொள்முதல் நிலையங்களில் பொருட்களை விற்றால் மட்டுமே விவசாயிகளால் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற முடியும். எனவே, வேளாண் பொருட்களின் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
நான்கு, இடைத்தரகர்களின் நடவடிக்கைகளால், குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளால் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையில் மட்டும் விளைபொருட்களை விற்பதற்கான உறுதிச் சட்டத்தை (Right to sell at MSP) இயற்ற வேண்டும்.
ஐந்து, குறு, சிறு விவசாயிகள் பல்வேறு சிரமங்களில் உள்ளனர். இவர்களுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்களை வழங்க வேண்டும். ஆறு, காய்கறி, பழவகைப் பயிர்களுக்குப் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்கவில்லை. கேரள அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள தோட்டப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டும். ஏழு, தெலங்கானா, ஒடிசா மாநிலங்கள் போன்று, விவசாயிகளுக்கான நேரடிப் பணவரவுத் திட்டத்தை, குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு அமல்படுத்த வேண்டும். வேளாண் பொருட்களை நகரச் சந்தைகளுக்குக் கொண்டுவர விவசாயிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும்.
எட்டு, வேளாண் சந்தையின் அடிப்படைக் கட்டுமான வசதிகள் பெரும்பாலான இடங்களில் மிகவும் மோசமாக உள்ளன. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அனைத்து தாலுகாக்களிலும் உழவர் சந்தையை ஏற்படுத்த வேண்டும்.
- அ.நாராயணமூா்த்தி, இந்திய விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினா்.
தொடர்புக்கு: narayana64@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT