Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

ஒலிம்பிக்கின் வெற்றி!

உ.ஸ்ரீராம்

அதிர்ச்சி... ஆச்சரியம்... ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்வுகள் அடங்கிய பெட்டகம் ஒலிம்பிக் போட்டிகள். உலகின் பெரும்பாலான நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கில், மேற்கண்ட உணர்வுகள் ஒருபடி அதிகமாகவே இருக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கும் அப்படித்தான் இருந்தது.

இந்தியாவும் இந்த ஒலிம்பிக்கில் பல ஆச்சரியங்களையும் சில ஏமாற்றங்களையும் சந்தித்துள்ளது. வெற்றி, தோல்வியைத் தாண்டி ஒலிம்பிக் போன்ற உச்ச விளையாட்டில் பங்கேற்பதே பாராட்டப்பட வேண்டியது. ஒலிம்பிக்கின் பழமையான விளையாட்டுகளில் ஒன்றான வாள்வீச்சுக்கு இந்தியா இதுவரை தகுதிபெற்றதே இல்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்தியா சார்பில் பவானிதேவி பங்கேற்றார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்குப் பெருமை. படகோட்டும் போட்டியில் இந்தியா சார்பில் முதல் பெண்ணாகப் பங்கேற்ற நேத்ரா குமணனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே.

போட்டி தொடங்கிய முதல் நாளே இந்தியாவுக்குப் பிரகாசமாக இருந்தது. பளுதூக்குதல் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு. தொடர்ந்து குத்துச்சண்டை வெல்ட்டர் வெயிட் பிரிவில் லவ்லீனா போர்கோஹெய்ன் வெண்கலத்தை உறுதிசெய்தார். மற்ற மாநிலத்தவர்களால் விநோதமாகவும் விலக்கிவைத்தும் பார்க்கப்படும் வடகிழக்கு மாநிலத்தவர்களே, உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப்பிடித்துள்ளனர்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, இந்த முறை வெண்கலம் வென்றிருக்கிறார். அந்த வகையில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஆகியிருக்கிறார்.

ஒரு காலத்தில் ஹாக்கி என்றாலே இந்தியாதான், ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற அணி என்ற பெருமை இருந்தது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு வெற்றியைக்கூட இந்தியா பெற்றிருக்கவில்லை. இந்த முறை ஆண்கள் அணி மட்டுமல்லாமல், பெண்கள் அணியும் அரையிறுதி வரை முன்னேறி இன்ப அதிர்ச்சி கொடுத்தன. ஆண்கள் அணி வெண்கலம் வென்றது. பெண்கள் அணி கடும் போராட்டத்துக்குப் பின் வெண்கலப் பதக்கத்தை இழந்தது. கடந்த ஒலிம்பிக்கில் கடைசி இடம் பிடித்திருந்த பெண்கள் அணி, இந்த முறை கண்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானது. இந்தியாவில் ஹாக்கி மீண்டும் உயிர்த்தெழுவதற்கான தொடக்கமாக இந்த வெற்றிகள் அமைந்திருக்கின்றன.

ஹரியாணாவின் புழுதிக்காட்டில் புரண்டெழுந்த சிங்கங்கள் மல்யுத்தத்தில் களமிறங்கியிருந்தனர். எதிர்பார்க்கப்பட்ட சிலர் தோற்றாலும், ரவிகுமார் தாஹியா வெள்ளியும் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கமும் வென்று பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர். முத்தாய்ப்பாகப் போட்டி முடிவடைவதற்கு முந்தைய நாள், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா வென்றுள்ள இரண்டாவது தனிநபர் தங்கம் இது, தடகளத்தில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும்கூட. ரவிகுமார், பஜ்ரங், நீரஜ் ஆகிய மூவரும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு பெரிய ஏமாற்றம் துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தைப் போட்டிகள்தான். உலகத் தரவரிசைப் பட்டியலில் 1, 2 இடங்களில் இருப்ப வர்கள் எந்தப் பதக்கமும் வெல்லத் தவறினார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் கால்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் 4-வது இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ராவின் ஒரு தங்கத்துடன் நாம் திருப்தியடைந்துவிட்டால், ஒரு விளையாட்டு தேசமாக மாறுவதற்கான கனவு நிஜமாகாது.

இந்தியா மட்டுமல்ல, இந்த முறை வேறு பல நாடுகளும் ஆச்சரியங்களை நிகழ்த்தியுள்ளன. நிலமற்று, அடையாளமற்று உலகெங்கும் நிறைந்திருக்கும் அகதிகளுக்கென அணி இரண்டாவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது. கிரீஸுக்கு அடுத்து இரண்டாவது அணியாக தலைநிமிர்ந்து அகதிகள் வீரநடை போட்டு வந்தது பெரும் உத்வேகம் அளிப்பது.

இத்தாலியின் தம்பேரி, கத்தாரின் பர்ஷிம் ஆகிய இரண்டு வீரர்கள் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை தாங்களாகவே விரும்பிப் பகிர்ந்துகொண்டனர். இருவரும் நெருங்கிய நண்பர்களும்கூட. போட்டி ‘டை’ ஆனதால், இன்னொரு முறை தாண்டலாம் என நடுவர் கூற, அதை மறுத்து, இருவருமே தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர். இந்த நெகிழ்ச்சி மிக்க சம்பவம் ஆகஸ்ட் 1 நண்பர்கள் தினத்தில் அரங்கேறியது. பிரிட்டனைச் சேர்ந்த தன்பாலின உறவாளரான நீச்சல் வீரர் டாம் டாலே தங்கப் பதக்கம் வென்றிருந்தார். ‘LGBTQ சமூகத்தின் பிரதிநிதியாகப் பதக்கம் வெல்வதில் பெருமை கொள்கிறேன்’ என அவர் பேசியது வரவேற்பைப் பெற்றது. நியூஸிலாந்தின் லாரல் ஹப்பார்டு பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை ஆனார்.

ஜப்பானின் 13 வயதுச் சிறுமி மொமீஜி நிஷியா ஸ்கேட் போர்டிலும், குவைத்தின் 57 வயது அப்துல்லா அல் ரஷிதி ஸ்கீட் துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வென்றுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வயது தடையில்லை என்பதற்கு இவர்கள் உதாரணம். அதேநேரம், பல முன்னணி வீரர்/ வீராங்கனைகளின் அதிர்ச்சிகரமான தோல்வி, எதிர்பார்க்கப்படாதவர்களின் அதிரடி வெற்றி போன்றவை ஒலிம்பிக் போட்டிகளின் பன்முகத்தன்மையையும் வெற்றி/தோல்விகள் சகஜம் என்பதையும் நிரூபித்தன.

அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோற்றவுடன் சில சாதி இந்துக்கள் இந்திய வீராங்கனை வந்தனாவின் ஹரித்வார் வீட்டின் முன் வெடிவெடித்துக் கொண்டாடி, தலித்துகள் அதிகம் ஆடுவதாலேயே மகளிர் அணி தோற்கிறது எனக் கூச்சல் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர். இது போன்ற பிற்போக்குவாதிகளுக்குப் பாடம் புகட்டும் வகையிலேயே டோக்கியோ ஒலிம்பிக் அமைந்திருந்தது. மனித குல வேறுபாடுகளும் பிரிவினைக் கருத்தாக்கமும் பின்பற்றப்படுவதை விலக்கி வைப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு முறையும் கூடுதல் முயற்சிகளை எடுக்கிறது. அகதிகள் முதல் அமெரிக்கக் குடிமகன் வரை யார் வேண்டுமானாலும் அதில் பங்கேற்க முடியும்; மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்களும் பங்கேற்க முடியும்; பதக்கத்தைப் பங்கிட்டுக் கொள்ளவும் முடியும்; தான் தோற்கடித்த சக போட்டியாளரை அணைத்துக்கொள்ளவும் முடியும் – இப்படி எல்லா உணர்வுகளுக்கும் இங்கே மதிப்புண்டு.

அனைவருக்குமான அங்கீகாரத்தையும் கண்ணியத்தையும் ஒலிம்பிக் போட்டி உறுதிசெய்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் சொல்லும் செய்தியும் அதுதான்.. ‘உலகம் எல்லா மனிதர்களுக்குமானது, எல்லா உணர்வுகளுக்கு மானதும்கூட’!

- உ.ஸ்ரீராம், விளையாட்டு விமர்சகர். தொடர்புக்கு: sriramanarayanan3199@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x