Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM

பொய்களுக்கு எதிராக உண்மை நடத்தும் வேட்டை

அதிகாரத்துக்கு எதிரான மனிதனின் போராட்டம் என்பது, மறதிக்கு எதிராக நினைவு நடத்தும் போராட்டமாகும் என்பது எழுத்தாளர் மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற கூற்று. மனித குல வரலாற்றில் மறக்கவே முடியாத களங்கம் என்று சொல்லப்படும், யூத இன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு ஜெர்மனி அரசு முக்கால் நூற்றாண்டைத் தாண்டியும் ஒரு தேசமாகத் தான் நிகழ்த்திய குற்றத்துக்கு நிவர்த்தி தேட முயன்றுவருகிறது. நாஜி வதைமுகாமின் முன்னாள் காவலரும், 3,518 யூதர்களின் கொலையில் பங்குபெற்றவருமான நூறு வயது ஜெர்மானிய முதியவர் நீதிமன்ற விசாரணையை வரும் அக்டோபர் மாதம் எதிர்கொள்ளப்போகிறார்!

சாச்சென்ஹாசன் முகாமில் 1942 முதல் 1945 வரை பணியாற்றிய இவர், யூத மக்களைத் துப்பாக்கியால் சுட்டும் விஷவாயு செலுத்திக் கொல்வதிலும் பங்குபெற்றவர் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. ஜெர்மானிய அரசின் சட்டவிதிகளின்படி, ஒரு நபர் செய்த குற்றம் தொடர்பிலான விசாரணை அவருடைய வயதோடு தொடர்புடையதல்ல. விசாரணையில் பங்கேற்கும் வகையிலான உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்றவராகவும் உயிருடனும் இருக்க வேண்டும் என்பதே முன்நிபந்தனை. யூத இனப்படுகொலை தொடர்பிலான குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிக்கும் கடைசி விசாரணையாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாஜி வதைமுகாமில் பணியாற்றியவர்கள் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து முறையாக நடத்திவரும் ஜெர்மனி அரசு, 2011-ல் முன்னாள் காவலர் ஜான் டெம்ஜான்ஜுக்கை விசாரித்துத் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்.

யூத மக்களைக் கொன்ற நூறு வயது நாஜி குற்றவாளி உள்ளிட்ட முதியவர்களை அவர்கள் வாழ்நாளின் கடைசி நாட்களில் குற்ற விசாரணைக்குக் கொண்டுவந்த நான்கு முக்கியமான நபர்களின் அனுபவங்களைப் படிக்கும் வாய்ப்பு ஜெர்மானியப் பத்திரிகையான ‘ஸெய்ட்மேகஸின்’ (Zeitmagazin) மூலம் கிடைத்தது. ஹோலகாஸ்ட்டில் (யூத இனப்படுகொலை) உயிர் தப்பியவர்களுக்காக வழக்காடும் தாமஸ் வால்தர், குற்றவியல் சட்டப் பேராசிரியர் கார்னெலியஸ் நெஸ்டலர், நாஜி குற்றவாளிகளைப் புலனாய்வதில் அனுபவம் பெற்ற ஸ்டெபான் வில்ம்ஸ், அரசு வழக்கறிஞர் ஆண்டியாஸ் ப்ரெண்டல் ஆகிய நால்வர் அவர்கள். முற்பகலில் செய்த குற்றங்களைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டு, வாழ்வின் அந்திம இருளில் நாட்களை அவர்கள் எண்ணிக் கழித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் வீடுகளின் கதவுகள் எப்படித் தட்டப்பட்டன என்பதை இந்த நால்வரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

நூறு வயதான ஒருவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவது முரண்நகையாக இல்லையா என்ற முதல் கேள்விக்கு, கார்னெலியஸ் இப்படிப் பதில் அளிக்கிறார்: “இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலானவை விசாரணை எல்லைக்கு வருவதே அபூர்வமானது. சட்ட அமலாக்கம் என்பது அத்தனை மந்தமாக நடப்பது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருந்தால் அவர்கள் மேலான ஆரோக்கியத்துடன் இருந்திருப்பார்கள்.”

ஜெர்மனி போன்ற முன்னேறிய நாட்டிலேயே இதுதான் நிலைமை எனும்போது, இந்தியா போன்ற நாடுகளில் நீதி பரிபாலனமும், எளிய மக்களுக்குக் கிடைக்கும் நீதியும் எவ்வளவு மந்தமாக நடக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஓரதோர் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்ளிட்ட 643 பேரை ஹிட்லரின் எஸ்.எஸ். படையினர் கொன்ற சம்பவத்தைப் புலனாய்வு செய்துவிட்டுத் திரும்பிய ஸ்டெபான் வில்ம்ஸ் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஒரு முடிவைச் செய்தார். அப்போது 2013. “இந்தக் குற்றங்களைச் செய்தவர்களுக்கு எத்தனை வயதானாலும் ஆகியிருக்கட்டும். அவர்களது வீட்டு அழைப்பு மணியை அழுத்துவேன் என்பதை அவர்கள் எந்த நேரமும் எதிர்பார்க்கவே வேண்டும். அவர்களிடம் எனக்குப் பேச வேண்டியிருக்கிறது.”

அதற்குப் பின்னர் அவர்கள் 50 வீடுகளின் அழைப்பு மணிகளை அழுத்தியிருக்கிறார்கள். பிரெண்டல் துணையாக வந்தாலும் அழைப்பு மணியை அழுத்துவது தன் பணி என்கிறார் வில்ம்ஸ். தாங்கள் செய்த குற்றத்தின் தடயங்களைக் காலம் அழித்துவிட்டது என்று நம்பியிருந்த அந்த முதியவர்கள் தம்மைத் தேடிப் புலனாய்வாளரும் காவல் துறையினரும் வருவார்கள் என்று நினைத்திருக்கவே இல்லை. 2009 வசந்த காலத்தில், சாமுவேல் கே என்பவரின் வீட்டின் அழைப்பு மணி அழுத்தப்பட்டது. நாஜி வதைமுகாம்களிலேயே அதிகபட்சமாக வன்முறைகள் நடந்த முகாம்களுள் ஒன்றான பெல்ஜெக் மரண முகாமின் பாதுகாவலர் அவர். நான்கு லட்சத்து 30 ஆயிரம் கொலைகள் நடத்தப்பட்ட இடம் அது. அந்தக் குற்றங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது சாமுவேல் கே, அதைப் பொருட்படுத்தாமல், தனது படுக்கையைச் சரிசெய்ய அனுமதி கேட்டிருக்கிறார். அவரது மனைவியோ தான் மதிய உணவு சமைக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்.

பெரும்பாலான குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு அவர்கள் செய்த எதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை என்பது விசாரணை மூலம் தெரியவருகிறது. அத்துடன் பெரும்பாலான நாஜி குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை, குற்றவுணர்வு கொள்ளவும் இல்லை என்பதைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஆபரேஷன் ஹார்வஸ்ட் பெஸ்டிவல் என்ற பெயரில் லுப்லின் மாவட்டத்தில் எஸ்எஸ் படையினரால் 30 ஆயிரம் யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் பங்கேற்றவர் அவர். “நான் சுட்டேன்... ஆழமாக வருந்துகிறேன்” என்று வீட்டுக்கு விசாரிக்க வந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். ஆனால், வீட்டில் உண்மையைச் சொன்ன அந்த நபரோ, தனக்கு வழக்கறிஞர் கிடைத்தவுடன் தான் சொன்னதிலிருந்து பிறழ்ந்துவிட்டார் என்கிறார் வில்ம்ஸ்.

ஓரதோர் கிராமத்துப் படுகொலைகளை விசாரணை செய்தபோது, அத்தனை பேரும் கொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதை எதையெதையோ கூறிச் சமாளித்துள்ளனர். ஒருவர் தான் கார் டிரைவராக மட்டுமே இருந்தேன் என்றிருக்கிறார். ஒருவர் சமையல் மட்டுமே செய்தேன் என்றிருக்கிறார். அவர்கள் அப்படித்தான் சொல்ல முடியும். அவர்கள் சொல்வதையே அவர்கள் நம்புவார்கள். அப்படி நம்பினால்தான் அவர்கள் செய்த குற்றத்தின் சுமை அவர்களை அழுத்தாது என்று உளவியலாளர்கள் சொன்னதாக வில்ம்ஸ் பகிர்கிறார். சாமுவேல் கே, வதைமுகாம் வாசலில் ஒரு மாண்டலினை வாசித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைக் காட்டி ப்ரெண்டல் அவரைப் பார்த்து, வதைமுகாமுக்குள் என்ன நடக்கிறதென்று தெரியாமலா இந்த மாண்டலினை வாசித்துக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்டதைச் சொல்கிறார். குற்றத்தைப் பார்த்துச் சும்மா இருந்ததையும், உடந்தையாக இருந்ததையும், துணையாக இருந்ததையும் ஜெர்மானியச் சமூகம் முதலில் இப்படித்தான் முழுமையாக மறுக்க முயன்றது.

1921-ல் பிறந்த ஆஸ்கர் க்ரோனிங் கணக்காளராக ஆஸ்விட்சில் பணியாற்றியவர். அவர் நீதி விசாரணையின் நிழலுக்குள் பல முறை வந்தும் அவர் எதிலும் தண்டனை பெறவில்லை. 2005-ல் பிபிசி போன்ற ஊடகங்களில் நேர்காணல்களை அளித்தார். 2015-ல் மூன்று லட்சம் கொலைகளுக்கு உதவியதாக நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்றார். க்ரோனிங் தனது தண்டனை தொடங்கும் முன்னரே இறந்துவிட்டார். நாஜி குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்த குற்றத்துக்குத் தண்டனை தருவதைவிட, உண்மைகள் இந்த உலகத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியமானது என்று வால்தர் குறிப்பிடுகிறார். ஆஸ்கர் க்ரோனிங் விசாரணையின்போது உடல் நலமில்லாமல் போனதையடுத்து, அவரது மருந்துகள் சம்பந்தமாகத் தான் உதவியதையும் குறிப்பிடுகிறார். அவர்கள் ஒரு குற்றம் செய்ததாலேயே அவர்கள் அநியாயமாக நடத்தப்படக் கூடாது என்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக நாஜி குற்றங்களைப் புலனாய்வு செய்ததில் நாஜி வேட்டையாடிகள் என்று வில்ம்ஸும் ப்ரெண்டலும் குறிப்பிடப்படுவது குறித்து அவர்களிடம் ‘‘ஸெய்ட்மேகஸின்’’ கேள்வி கேட்கிறது. “நாங்கள் நாஜிக்களை வேட்டையாடவில்லை. ஒரு குற்றத்தைத் தீர்த்துவைப்பது தொடர்பானது அது. நீதி என்பது தண்டனை கொடுப்பது மட்டுமல்ல; நீதியின் வழியாக உண்மை பரப்பப்படுகிறது. ஒரு வழக்கு தோல்வியுற்றாலும் பாதிக்கப்பட்டவரின் கதைகள் பொதுமக்களுக்குத் தெரியவருகிறது. அது முக்கியமானது” என்கிறார் வில்ம்ஸ்.

சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்தி படுகொலையை ஒட்டி அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், குஜராத் படுகொலைகள், சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த கலவரச் சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன. அந்தக் குற்றங்களைச் செய்தவர்களின் வீடுகளில் யார் எப்போது அழைப்பு மணியை அழுத்தப்போகிறார்கள்?

- ஷங்கர்ராமசுப்ரமணியன்

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x