Last Updated : 08 Aug, 2021 03:17 AM

 

Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM

ராபெர்டோ கலாஸ்ஸோவுடன் ஒரு பயணம்

ராபெர்டோ கலாஸ்ஸோ எழுதிய ‘க‘ நாவலை மொழிபெயர்த்துத் தரும்படி ‘காலச்சுவடு’ கண்ணன் என்னைக் கேட்டபோது, இரண்டு மனநிலைகளுக்கு ஆட்பட்டேன். உடனே சரி என்று சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல். நம்மால் இந்த மாபெரும் காரியத்தைச் செய்ய முடியுமா என்ற பெரும் தயக்கம் மறுபுறம்.

ஏற்கெனவே அந்த நூலை ஒரு முறை வாசித்திருந்தேன். அதன் பிரம்மாண்டம் என் மனத்தில் அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான என் தகுதி பற்றிய சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால், என் ஆவல் அச்சத்தையும் தயக்கத்தையும் வென்றுவிட, கண்ணனிடம் என் ஒப்புதலைத் தெரிவித்தேன். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு கால அவகாசமாவது வேண்டும் என்று கேட்டேன். இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என்று பெரிய மனத்துடன் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்தக் காரியம் முடிவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தமிழ் வடிவம் வெளிவந்தபோது அதன் மூல ஆசிரியரான கலாஸ்ஸோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அந்த நூலை எழுதி முடிப்பதற்குத் தனக்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன என்று அவர் சொன்னது என்னைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இத்தாலியரான கலாஸ்ஸோ தன் தாய்மொழியைத் தவிர பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், லத்தீன், பழைய கிரேக்கம் போன்ற மொழிகளிலும் வல்லுநராக இருந்தார். இளம் வயதிலேயே உபநிடதங்கள், பகவத் கீதை இவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதன் ஆழத்தைக் கண்டு வியந்த அவர், சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டு மூல நூலைப் படித்தார். உபநிடதங்கள், வேதங்கள், பிராம்மணங்கள் ஆகியவற்றை மூல வடிவத்திலேயே வாசித்தார்.

கவிஞர் குவளைக் கண்ணன் எனும் ரவியுடன் இணைந்து நான் மொழிபெயர்த்த ‘க’ நாவலின் உள்ளடக்கம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இந்த நூல் பெருமளவுக்கு ரிக் வேதம், சதபத பிராம்மணம், மகாபாரதம், பாகவதம், புத்தரின் கதை இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த மூல நூல்கள் அனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலம் சென்று, இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுப் பின் மீண்டும் ஆங்கிலம் வழியாகத் தமிழை வந்தடைந்திருக்கிறது இந்த நூல். மாக்ஸ் ம்யுல்லர், ஹெய்ன்ரிச் ஜிம்மர் போன்றோர் மூலமாக மேற்கத்திய மனத்தைச் சென்றடைந்த இந்திய தத்துவ, புராணங்கள், இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்துகளை அடியோடு மாற்றின. பெருவாரியான அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்து இங்கே நிரம்பியிருக்கும் ஆன்மிகப் பெருநிதியைக் கண்டறிந்து, அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். பிறகு, பல மேற்கத்திய மொழிகளில் இந்த நூல்கள் வெளிவந்தன. இந்தியா மட்டுமின்றி, சீன தேசத்து ஆன்மிக நூல்களும் மேற்கத்திய மொழிகளில் வெளியாயின.

அவர்களின் பார்வையில் இந்த நூல்கள் மிகப் புதியதொரு ஆழத்தையும் கோணத்தையும் மேற்கொண்டன. அவர்களுடைய புதிய கோணமும் புதிய பார்வையும் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இந்தப் பொக்கிஷங்களைக் குறித்த மறுபரிசீலனையை நாம் மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இவை அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நாம் இட்டுச்செல்லப்பட்டோம். வெறும் பக்தி இலக்கியமாகவும் வழிபாட்டுக்கு உகந்தவையாகவுமே கொள்ளப்பட்டிருந்த இவை, மனம், பிரக்ஞை குறித்த ஆழமான வெளிச்சங்களைக் கொடுக்கவல்லவை என்று அறிந்துகொள்ளப்பட்டன. இவற்றின் புதிய பரிமாணங்கள் வெளிப்பட்டன. நடைமுறை வாழ்வின் சிக்கல்களுக்கான தீர்வுகள் இவற்றில் உள்ளன என்னும் உண்மை அறிந்துகொள்ளப்பட்டது.

இந்திய மற்றும் கீழைத் தேச ஆன்மிக நூல்கள், தியான முறைகள், தன்னிருப்பின் மூலவேர்களைத் தேடிச்செல்லும் பெரும் பயணத்தின் அடிச்சுவடுகளாக, வழிக்குறிப்புகளாக அமைந்திருப்பது தெரிந்தது. இந்தப் பாதையில்தான் ராபெர்டோ கலாஸ்ஸோவின் ‘க‘, ‘ஆர்டர்’ (Ardor) போன்ற நூல்கள் நம்மை அழைத்துச்செல்ல விழைகின்றன.

‘க’ நாவல் எழுதியது குறித்து கலாஸ்ஸோ என்னுடனான நேர்காணலில், “இந்த நாவலை நான் எழுதிய ஏழு ஆண்டுக் காலமும் நான் வேத காலத்து இந்தியாவில்தான் வாழ்ந்துகொண்டிருந்தேன்” என்றார். அவர் சொன்ன இன்னொரு முக்கியமான கருத்து, “வேத ஆராய்ச்சியாளர்கள் பௌத்த நூல்களைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. அதேபோல், பௌத்த ஆய்வாளர்கள் வேதங்களை அசட்டை செய்கிறார்கள். உண்மை என்னவெனில், இவை இரண்டையுமே வாசித்தால்தான் இரண்டையுமே சரியான விதத்தில் புரிந்துகொள்ள முடியும்” என்பது. இரண்டையும் தெளிவாக வாசித்து அறிந்திருந்த அவர் சொன்ன இந்த விஷயம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

நூல் வெளியீட்டுக்காக அவர் சென்னை வந்திருந்தபோது மூன்று நாட்களை அவருடன் கழித்தேன். அவருடைய மேதைமையும் அதன் அடையாளமான பெரும் பணிவையும் நான் அந்த மூன்று நாட்களில் கண்டேன். ஆழமான நட்புணர்வுடன் அவர் என்னிடம் தன்னைப் பற்றியும் தன் எழுத்து குறித்தும் பகிர்ந்துகொண்டதை எனக்கு வாய்த்த பெரும்பேறாக நான் கருதுகிறேன். 80 வயது நிறைவு கண்டு, சென்ற வாரம் நம்மைவிட்டுப் பிரிந்த ராபெர்டோ கலாஸ்ஸோவுக்கு என் பணிவான அஞ்சலி!

- ஆனந்த், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: anandh51ad@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x