Last Updated : 12 Feb, 2016 09:38 AM

 

Published : 12 Feb 2016 09:38 AM
Last Updated : 12 Feb 2016 09:38 AM

டாக்டர் கூகுள் எம்.பி.பி.எஸ்!

சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்காக ஒருவர் வந்திருந்தார். ‘‘என்ன தொந்தரவு?’’ என்று கேட்டேன். பொதுவாக, நோயாளிகள் ஏதேனும் உடல் உபாதைகளைத்தான் கூறுவார்கள். அவரோ மிகவும் அரிதான ஒரு நோயின் பெயரைச் சொல்லி, அந்த நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பயத்துடன் கூறினார்.

அந்த நோய் ரொம்ப அரிதானது. மருத்துவப் படிப்பின்போது, நாங்களே சாய்ஸில் விட்டுவிடுவோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவு அரிதான நோய்.

‘‘எப்படி உங்களுக்கு இந்த நோய்தான் என்று கண்டுபிடித்தீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘என்னுடைய அறிகுறிகளை வைத்து இணையத்தில் தேடிப்பார்த்தேன்’’ என்றார். உண்மையில், அவருக்கு இருந்தது சாதாரண தலைவலி, தூக்கமின்மைதான் (அந்த நோயின் பெயரைக் குறிப்பிட்டால் சிலர் இணையத்தில் படித்துவிட்டுத் தனக்கும் இருப்பதாக நினைக்கக் கூடும். ஆகவே, வேண்டாம்).

முன்பெல்லாம் ஒரு மருத்துவர் சொல்வது சரிதானா என்பதை உறுதி செய்துகொள்ள இரண்டாவதாக இன்னொரு மருத்துவரிடம் கருத்துக் (செகண்ட் ஒப்பீனியன்) கேட்பார்கள். பின்னர், மருத்துவர்கள் சொல்வது சரிதானா என்பதை இணையதளங்களில் சரிபார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இன்றைய காலகட்டத்தில் முதலில் இணையத்தில் தனக்கு என்ன நோயாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அது சரிதானா என்று உறுதிசெய்துகொள்ள மருத்துவரை இரண்டாவதாக அணுகுபவர்களும் இருக்கிறார்கள். சில தளங்கள் மெய்நிகர் மருத்துவ ஆலோசனை மையங்களையே (Virtual Clinics) நடத்துகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், இன்னும் சில வருடங்களில் ‘ஆன்லைனிலேயே அப்பெண்டிக்ஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன்’ என்றுகூடச் சிலர் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடும்.

இணையத்தில் மருத்துவத் தகவல்களைத் தேடுவது பற்றிப் பல மருத்துவ இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நோயாளிகளில் சுமார் 50% வரை மருத்துவத் தகவல்களை இணையத்தில் தேடுவதாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களது நோயைப் பற்றியும், சிகிச்சை முறைகளைப் பற்றியும் மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றியும் தெரிந்துகொள்வதாகவே இந்தத் தேடுதல்கள் இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலோனோர் தாங்கள் இணையத்தில் விவரங்கள் தேடியதைப் பற்றித் தங்களது மருத்துவர்களிடம் கூறத் தயங்குகிறார்கள் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் செயல்பாட்டில் நன்மை தரக்கூடிய அம்சங்களும் சில தேவையற்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.

அதிகரிக்கும் வெளிப்படைத்தன்மை

மருத்துவ அறிவு என்பது ஒருகாலத்தில் மருத்துவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. ஆகவே, நோயாளிகளைப் பரிசோதித்தல், தேவையான பரிசோதனைகளைச் செய்தல், என்ன வகையான சிகிச்சை அளிக்க வேண்டும், அதன் சாதக பாதக அம்சங்கள் என்னனென்ன என்பதையெல்லாம் முடிவுசெய்வதில் நோயாளிகளுக்குப் பங்கு இல்லாமல் மருத்துவர்களே முடிவுசெய்வதாக இருந்தது. கிட்டத்தட்ட கடவுளிடம் சரணாகதி அடைந்த பக்தனைப் போல் இருந்தது. கடவுள் தவறு செய்ய மாட்டார். நமக்கு நல்லதுதான் செய்வார் என்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிலை அது.

மக்களின் இந்நம்பிக்கையைப் பயன்படுத்தித் தவறிழைப் பவர்களும் உள்ளனர். தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பற்றியோ சிகிச்சை முறைகளைப் பற்றியோ எதுவும் தெரியாமல் இருப்பவர்களின் அறியாமையே இதற்குக் காரணம்.

தங்களது நோய்களைப் பற்றிய விவரங்களை அறிந்தால் அதற்கான பல்வேறு வகையான சிகிச்சை முறைகள், அதன் சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும் பொறுப்பு நோயாளிகளுக்குக் கிடைக்கிறது. இது மருத்துவர்களைக் கிட்டத்தட்டக் கடவுளாகக் கருதும் நிலையிலிருந்து நல்ல ஆலோசகர்களாக மட்டும் காணும் மாற்றத்துக்கு வழிவகுக்கிறது. மருத்துவர், நோயாளி உறவில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். எந்த அறிவும் குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் இல்லாமல் பரவலாக்கப்படுவதே நன்மை பயக்கும். தகவல் தொடர்பு அறிவியல் பெருக்கத்தில் துறைசார் அறிவு பரவலாக்கப்படுவதே ஜனநாயகச் செயல்பாடாகும்.

விழிப்புணர்வை அதிகரிக்கும்

மருத்துவத் தகவல்கள் பரவலாக்கப்படுவதால் இன்னொரு நன்மையும் உண்டு. இன்றைய காலகட்டத்தில் நோயாளிகளுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு எதிர்வினையாக மருத்துவர்களுக்கு எதிராகவும் மருத்துவமனைகளுக்கு எதிராகவும் அவதூறு பரப்புவதும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதும் பெரிதும் நிகழ்கின்றன. வணிகமயமாக்கப்பட்ட மருத்துவத் துறையில் இருப்பவர்களின் செயல்பாடுகள் இதற்குக் காரணமாக இருந்தாலும், நோயின் தன்மை பற்றிய புரிதல் இல்லாமையே பல சமயங்களில் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக அமைகின்றன. நோயின் தீவிரம், நோயாளியின் நிலை, ஏன் இந்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன, இந்த சிகிச்சை ஏன் வழங்கப்படுகின்றது என்பனவற்றையெல்லாம் மக்களுக்குப் புரியுமாறு மருத்துவர்களால் விளக்க முடியாமல் போவதென்பது அடிக்கடி நிகழும் நிகழ்வே. இது துரதிர்ஷ்டவசமானது என்றபோதும், இந்நிலையில் மருத்துவத் தகவல்களை இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்வது இந்த இடைவெளியைக் குறைத்து மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவே செய்யும். மருத்துவத் துறையினருக்கும் தங்களது துறைசார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

மேலும், வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, உடற்பயிற்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சீரான இடைவெளிகளில் செய்ய வேண்டிய நோய் அறியும் பரிசோதனைகள், தடுப்பூசிகள் எனப் பலவிதமான தகவல்களும் இணையத்தில் குவிந்துள்ளன. இது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கப் பயன்படவே செய்யும்.

நம்பகத்தன்மையற்ற தகவல் குவியல்

ஆனால், இதில் பாதக அம்சங்களும் உள்ளன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் எது சரியானது என்பதைக் கண்டுபிடிப்பதில் அந்தந்தத் துறை நிபுணர்களுக்கே சிரமமாக இருக்கும்போது, அந்தத் துறைக்கு அந்நியமானவர்களுடைய நிலையைச் சொல்லத் தேவையில்லை. நம்பகத்தன்மையற்ற தகவல்கள், அடிப்படையற்ற பொய்கள், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் என்று நிரம்பி வழிகின்றன. யாரோ ஒருவருக்கு அபூர்வமாக ஏற்பட்ட ஒரு அசம்பாவிதமோ, பக்க விளைவோ பிரதானப்படுத்தப்பட்டு தகுந்த சிகிச்சையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முடிவெடுப்பதைப் பாதிக்க வைக்கின்றன. பெரும்பாலும் நம்பகமான அதிகாரபூர்வமான இணையதளங்களில் வரும் தகவல்களை மட்டும் நம்புவதே சிறந்தது. தனிநபர்கள் வலைப்பக்கங்களில், குழுக்களில் பகிரும் தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பது நல்லதல்ல.

தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கிறோம் என்று பல்கிப் பெருகும் போலிகளும் இணையத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளனர். இவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனக்கு என்ன நோயாக இருக்கும்? இதற்கு என்ன சிகிச்சை சிறந்தது என்ற ஆலோசனைகளை இணையதளங்களில் பெறுவது சரியல்ல. மனித உடல் மருத்துவத் துறையினருக்கு முழுதும் விளங்காத வகையில் சிக்கலானது. ஒருவருக்கு ஏற்புடையதாக விளங்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு எதிர்மாறான விளைவை ஏற்படுத்தக் கூடும். ஆகவே, நடைமுறை அனுபவம் இருப்பவர்களை அணுகுவதே சிறந்த வழியாகும். மருத்துவத் துறையினர் தரும் தகவல்களைச் சரிபார்க்கவும், குறிப்பிட்ட நோய், பரிசோதனை, சிகிச்சை போன்றவற்றைப் பற்றிய அறிவை மேம்படுத்தவும், தேவைப்படும்போது மருத்துவர்களுடன் விவாதிக்கவும் மட்டும் இணையம் தரும் தகவல்களைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.

மூன்றாம் ஆண்டு சின்ட்ரோம்

மருத்துவ மாணவர்கள் மூன்றாம் ஆண்டில் நோய்களைப் பற்றிப் படிக்கவும் நோயாளிகளைப் பார்க்கவும் தொடங்குவார்கள். அப்போது அவர்களில் சிலருக்குத் தங்களுக்கும் பலவிதமான நோய்கள் இருப்பதாக எண்ணம் உண்டாகி அச்சப்படுவார்கள். இதை ‘மூன்றாம் ஆண்டு சின்ட்ரோம்’ என்று அழைப்பார்கள். அதுபோல் முதல் பத்தியில் குறிப்பிட்டவர் மாதிரி பல அரிய நோய்களைப் பற்றி இணையத்தில் படித்துவிட்டு, அவை தனக்கும் இருக்கின்றனவோ என ஐயமும் அச்சமும் கொள்பவர்களும் உண்டு. இந்த நோய்க்கு சைபர்கோன்ட்ரியா (Cyberchondria) என்று பெயர். (அவர்கள் இதைப் படித்துவிட்டுத் தங்களுக்கும் சைபர்கோன்ட்ரியா இருக்கிறது என்று பயந்துவிடக் கூடாது).

ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும், ஒரு மருத்துவர் நேரம் ஒதுக்கிப் பொறுமையுடன் விளக்குவதற்கு எதுவும் ஈடாகாது. இணைய அறிவியல் வளர்ச்சியை மருத்துவர் நோயாளிகள் உறவைச் சீர்ப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதே ஆரோக்கியமாகும்.

- ஜி.ராமானுஜம்

மனநல மருத்துவர், நோயர் விருப்பம் என்ற நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x