Published : 04 Jun 2014 09:00 AM
Last Updated : 04 Jun 2014 09:00 AM
அறுவைச் சிகிச்சை அறையிலிருந்து வரும் ஒரு மருத்துவரின் தோற்றம் எப்படியிருக்கும்? நோயாளிக்குத் தன்னிடமிருந்துகூட எவ்வித நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையோடு கையுறைகளுடனும் முகத்தை மூடும் துணியுடனும் மருத்துவர் இருப்பார்.
அக்கறைமிக்க இந்த நவீன மருத்துவச் சிந்தனைகளை அறுவைச் சிகிச்சை மருத்துவத்தில் புகுத்தியவர் டாக்டர் ஜான் மிகுலிஸ் ரடேக்கி (1850 - 1905). ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழகத்தில் படித்தவர் இவர். அறுவைச் சிகிச்சைக்கான நவீன முறைகளையும் கருவிகளையும் கண்டுபிடித்தவர். அறுவைச் சிகிச்சை செய்த உறுப்புகள் சீக்கிரம் ஆறுவதற்கான ஆன்டிசெப்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதிலும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார். முக்கியமாக, செரிமான உறுப்பு மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சைகளைச் செய்வதில் சாதனை புரிந்தவர். பெருங்குடலின் ஒரு பகுதியை வெட்டி நோயாளியைக் குணமாக்கிக் காட்டியவர்.
அவர் குணப்படுத்திய அந்த நோய்க்குத் தற்போது அவரது பெயரே வைக்கப்பட்டுள்ளது. பல மருத்துவக் கருவிகளை வடிவமைப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னோடியாக இருந்தார். இன்று நாம் மருத்துவரின் கைகளில் பார்க்கிற கையுறைகளையும் முக மறைப்புகளையும் அவர்தான் உருவாக்கினார்.
அவற்றைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்த அவர், அதன்மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டினார். மருத்துவப் பேராசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். அவரது பெயரால் போலந்து நாட்டில் ஓர் அறுவைச் சிகிச்சைக் கல்லூரி இன்றும் செயல்படுகிறது. டாக்டர் ஜானின் தந்தை போலந்து நாட்டையும் தாய் ஆஸ்திரியா நாட்டையும் சேர்ந்தவர்கள். அதனால், அவர் போலீஷ், ஜெர்மன், ரஷ்யன் மற்றும் ஆங்கில மொழிகளைச் சரளமாகப் பேசுவார். “நீங்கள் எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்?” என அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில்: நான் ஒரு அறுவைச் சிகிச்சையாளன். -சரித்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT