Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM
இரண்டு முறை கரோனா தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நீச்சல் வீரர் டாம் டீன் (21), பிரிட்டன் ஒலிம்பிக் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே சந்தேகமாக இருந்தது. ஆனால், ஆறே மாதங்களில் ஒலிம்பிக் தங்கம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
முதல் முறை கரோனா தொற்றுக்கு ஆளாகி, நான்கு மாத இடைவெளியில் ஜனவரியில் இரண்டாவது முறை கரோனா தொற்றுக்கு உள்ளானார் டாம் டீன். அப்போது அவருடைய ரத்த ஓட்ட அமைப்பு, நுரையீரல் போன்றவை பாதிக்கப்பட்டன. நீச்சல் பயிற்சிக்கு இவை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இடைவிடாத இருமல் வேறு. அப்போது ஒலிம்பிக் தங்கம் என்பது டாம் டீனுக்குக் கனவாக மாறிவிட்டிருந்தது.
பல விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்குப் பல்வேறு விதமான இடைஞ்சல்களையும் தடைகளையும் பெருந்தொற்றுக் காலம் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம் டாம் டீனைப் போன்று மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு. இரண்டாவது முறை நோய்த்தொற்றுக்கு ஆளான பிறகு ஒன்றரை மாதங்களுக்கு மேல் அவரால் பயிற்சியைத் தொடங்க முடியவில்லை.
அந்த நேரத்தில் பயிற்சியாளர் டேவிட் மெக்நல்டி, டாம் டீனின் பதற்றத்தைத் தணித்தார். சிறிது சிறிதாக அவருடைய திறன்களையும் மன உறுதியையும் மீட்டெடுத்தார். ஒலிம்பிக் 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் டாம் டீனும் சக நாட்டைச் சேர்ந்த டங்கன் ஸ்காட்டும் போட்டியிட்டார்கள். டங்கன் ஸ்காட் தங்கம் வெல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டாம் டீன் தங்கம் வென்றுள்ளார். டங்கன் ஸ்காட்டுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் ஸ்காட்டிடமிருந்து தங்கத்தைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், 200 மீட்டர் ஃபிரீஸ்டைல் பிரிவில் ஸ்காட் புரிந்திருந்த சாதனையையும் டீன் (1 நிமிடம் 44.22 விநாடிகள்) முறியடித்துள்ளார். முன்னதாக 1908 ஒலிம்பிக்கிலும் இரண்டு பிரித்தானியர்கள் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT