Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில், தாய்நாட்டின் சார்பாக ஜிம்னாசிய வீரர் டிமிதிரியாஸ் லேயாந்த்ரஸ் பங்கேற்றபோது, அவருடைய வயது 10 ஆண்டு 218 நாட்கள். இந்த இளம் வயதுச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அவர் இடம்பெற்ற ‘பேரலல் பார்ஸ்’ அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
தற்போதைய ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் வயதுக்காரர் யார் தெரியுமா? சமீப காலத்தில் போரால் அதிகம் பேசப்பட்ட சிரியாவைச் சேர்ந்த ஹெந்த் ஸாஸா (12 ஆண்டு 204 நாட்கள்) என்கிற டேபிள் டென்னிஸ் வீராங்கனை. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் பங்கேற்றவர்களிலேயே இளம் வயதுக்காரர் ஸாஸா. அத்துடன், ஒலிம்பிக்கில் 1992-க்குப் பிறகு பங்கேற்பவர்களிலேயே மிகவும் இளையவர்.
தற்போதைய ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்றவர் மோமீஜி நிஷியா. பெண்களுக்கான ‘தெரு ஸ்கேட்போர்டிங்’ போட்டியில் தங்கம் வென்ற அவருடைய வயது 13. ஜப்பான் நாட்டில் மிகவும் இளம் வயதில் பதக்கம் வென்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இப்படி இவர்கள் எல்லாம் இளம் வயதுச் சாதனைக்காரர்களாக இருக்கிறார்கள் என்றால், முதியவர்களும் ஒலிம்பிக்கில் சாதித்துள்ளார்கள். 1920 ஒலிம்பிக்கில் 100 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் சுவீடனின் ஆஸ்கர் ஸ்வான் பதக்கம் வென்றபோது, அவருடைய வயது 72 ஆண்டு 279 நாட்கள். இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அந்த வயதிலும் வெள்ளி வெல்லும் அளவுக்குத் துல்லியமாகக் குறிபார்க்கும் திறனைக் கொண்டிருந்தார் தாத்தா.
தற்போதைய ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவின் மேரி ஹன்னா, 66 வயதில் குதிரையைச் செலுத்தி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். அவர் பங்கேற்ற டிரெஸ்ஸேஜ் எனப்படும் போட்டியில் பாலின வேறுபாடு கிடையாது. இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களிலேயே வயதான மேரி, உடல் உறுதியுடன் இருக்கும்பட்சத்தில் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT