Last Updated : 27 Jul, 2021 03:13 AM

59  

Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

பெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்

பெகாஸஸ் உளவு மென்பொருள் விவகாரம், உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றமே முடங்கும் அளவுக்கு விவகாரம் பெரிதாகியிருக்கிறது.

பெகாஸஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கியுள்ள உளவு மென்பொருள். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோரை 2016-லிருந்து உளவுபார்த்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆயினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசுகள் இத்தகைய உளவுக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுக்கின்றன.

குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த உளவு மென்பொருளைத் தாங்கள் விற்பதாக என்.எஸ்.ஓ. கூறியிருக்கிறது. ஆனால், இதைப் பற்றிய சர்வதேசப் புலனாய்வின் பட்டியலில் உள்ள தொலைபேசி எண்களில் பெரும்பாலானவை வெவ்வேறு நாடுகளின் எதிர்க் கட்சியினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்றோருடையவை. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவில் ராகுல் காந்தி, பாஜக அமைச்சர்கள் இருவர் ஆகியோரின் எண்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் சாத்தியமுள்ள எண்களின் பட்டியலில் உள்ளன. இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோரின் செல்பேசி எண்கள் அந்தப் பட்டியலில் உள்ளன. ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி இந்து’, ‘ராய்ட்டர்ஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகள்/ செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களுடைய எண்களும் அந்தப் பட்டியலில் உள்ளன. சவுதி அரேபிய அரசின் எதிர்ப்பாளரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழின் பத்திரிகையாளருமான கஷோகி கொல்லப்பட்ட பிறகு, அவருக்கு நெருக்கமானவர்களின் செல்பேசிகளில் இந்த மென்பொருள் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது. பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தும் நாடுகள் என்ற குற்றச்சாட்டுப் பட்டியலில் அஸர்பெய்ஜான், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.), கஜகஸ்தான், சவுதி அரேபியா, பஹ்ரைன், மெக்ஸிகோ, மொராக்கோ, ருவாண்டா, ஹங்கேரி ஆகியவை அடங்கும்.

என்.எஸ்.ஓ. நிறுவனம் தான் விருப்பப்பட்ட நாடுகளுக்கு இந்த மென்பொருளை விற்க முடியாது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி. இஸ்ரேல், தனக்கு எதிராக இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பரிசீலித்துப் பார்த்து, அது ஒப்புதல் தந்த பிறகே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இந்த மென் பொருள் விற்கப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் அரசும் சர்வதேசச் சமூகத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஏராளமான உளவு மென்பொருள்கள் இருக்கின்றனவே; பெகாஸஸில் என்ன விசேஷம் என்ற கேள்வி எழலாம். தீங்கு விளைவிக்கும் மற்ற ஊடு மென்பொருள்களைப் பொறுத்தவரை உங்களுக்கு வரும் இணைப்புகள் (லிங்க்குகள்), நீங்கள் தேடும் இணையதளங்கள் ஆகியவற்றின் மூலமாகத்தான் அவை உங்கள் செல்பேசியில் ஊடுருவும். அதாவது அந்த ஊடுருவலில் உங்கள் பங்கு இருக்கும். பெகாஸஸைப் பொறுத்தவரை அதில் நீங்கள் செய்ய வேண்டியது ஏதும் இல்லை. அந்த மென்பொருளால் அனுப்பப்படும் இணைப்பை நீங்கள் சொடுக்காமலேயேகூட, அதனால் மேற்கொள்ளப்படும் அழைப்பை நீங்கள் ஏற்காமலேயேகூட அது உங்கள் செல்பேசியில் தன்னை நிறுவிக்கொண்டுவிடும்.

காலந்தோறும் போர்கள், ஆயுதங்கள் எல்லாம் மாறிவந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைகள், அணுகுண்டுகள், உயிரிஆயுதங்கள், வேதிஆயுதங்கள் அறிமுகமாயின. 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை தகவல்கள்தான் ஆயுதங்கள், அந்தத் தகவல்களின் சுரங்கம் நாம் ஒவ்வொருவரும்தான். அதனால்தான் சமூக ஊடகங்கள் தொடங்கி பெகாஸஸ் வரை தோன்றி நம் தகவல்களைத் திருட முயன்றுகொண்டே இருக்கின்றன. முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஆகவே, நம் தகவல்கள் சுரண்டப்படுவதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. ஆயினும், பொறுப்புள்ள ஓர் அரசு நினைத்தால், தன் குடிமக்களின் அந்தரங்க உரிமையைப் பாதுகாக்கலாம். அதையும் மீறி ஓர் அரசு உளவு பார்த்தால், அதை ஏற்கவே முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை தேசத்தின் இறையாண்மை, பாதுகாப்பு போன்றவற்றை முன்னிட்டு, உளவு பார்ப்பதை சட்டம் அனுமதித்திருந்தாலும் சாதாரணக் குடிமக்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க் கட்சியினர் போன்றோரை உளவு பார்ப்பதைச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனாலும், அரசுகள் சட்டத்தைப் பொருட்படுத்தியதில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் முக்கியமான தலைவர்கள், செயல்பாட்டாளர்கள், அரசின் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அரசின் மீதான விமர்சனம் என்பது ஒரு ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியமானது. ஆளுங்கட்சி – எதிர்க் கட்சி இரண்டும் இணைந்ததுதான் ஜனநாயகம். ஆனால், அரசின் மீதான விமர்சனத்தை ஏதோ தேச விரோதச் செயல், தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல் என்று கருதிக் கடுமையாக நடந்துகொள்வதில் அன்றைய காங்கிரஸ் அரசுகள் கோடு போட ஆரம்பித்தன; இன்றைய பாஜக அரசும் அத்தகைய குற்றச்சாட்டுக்கே ஆளாகியிருக்கிறது.

1988-ல் ராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடக முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தின் அரசியலர்கள், தொழிலதிபர்கள் போன்றோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் வெடித்தது. வேறு வழியின்றி ஹெக்டே ராஜிநாமா செய்தார். 2012-ல் இமாச்சல பிரதேசத்தில் புதிய காங்கிரஸ் அரசு பதவியேற்றபோது முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கானோரின் லட்சக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் வெளியானது கண்டறியப்பட்டது. இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தான்.

உளவுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு திருக்குறளை எடுத்துக்காட்டி ‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்/ வல்லறிதல் வேந்தன் தொழில்’ என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்கலாம். ஆனால், இது வேந்தர்கள் காலம் இல்லை அல்லவே. ஜனநாயகத்தின் காலம். அரசுக்காக மக்கள் அல்ல, மக்களுக்காக அரசு இருக்க வேண்டிய காலம்! ஆகவே, அரசிடமிருந்து குடிமைச் சமூகம் உரிய பதிலை எதிர்பார்க்கிறது. அரசுக்கு இதில் தொடர்பு இல்லையென்றால், இந்த உளவுச் செயலுக்கு யாரெல்லாம் பொறுப்பு என்று கண்டறிந்து அவர்களைத் தண்டிக்கும் கடமை அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x