Published : 15 Feb 2016 04:51 PM
Last Updated : 15 Feb 2016 04:51 PM

அரசுத் துறை வங்கிகளை விற்கத் துடிக்கிறது அரசு! - தாமஸ் ஃப்ராங்கோ பேட்டி

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான தாமஸ் ஃப்ராங்கோவிடம் ஒரு மணி நேரம் பேசினால், ரத்தம் தானாகக் கொதிக்கும். நம்முடைய பொதுத்துறை நிறுவனங்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் தாரை வார்க்கப்படுகின்றன என்பதையும் இதன் பின்னணியிலுள்ள தனியார்மய அரசியலையும் புட்டுப்புட்டு வைக்கிறார் ஃப்ராங்கோ.

“பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை அரசின் அணுகுமுறை, நாய்க்கு பித்துப் பிடித்துவிட்டது என்று கூறி, அதை சுட்டுக் கொல்வதைப் போன்றது. பொதுத்துறை வங்கிகளில் பிரச்சினைகளும் வாராக்கடன் சுமையும் அதிகம் இருந்தால் அவையெல்லாம் அரசால் ஏற்படுத்தப்பட்டவைதான். தனியார்மயமாக்க அதை எப்படி அவர்கள் காரணமாக்க முடியும்?” என்கிறார் தாமஸ் ஃப்ராங்கோ.

அரசு ஏன் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் நோக்கித் தள்ளுகிறது?

காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பாஜக அரசாக இருந்தாலும் அரசின் செயல்திட்டம் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதுதான். பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்குமாறு பி.ஜே. நாயக் தலைமையில் காங்கிரஸ் அரசு 2014-ல் ஒரு குழுவை நியமித்தது. அந்தப் பரிந்துரைகளின் முக்கிய நோக்கமே தனியார்மயமாக்குவதுதான். எனினும், மக்களவைத் தேர்தல் நெருங்கியதால் அதன் பரிந்துரைகள் அப்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டன. மோடி அரசு இப்போது அதற்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறது.

2016 ஏப்ரலில் ‘வங்கித் துறை பீரோ’ என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார். நாயக் குழு பரிந்துரைப்படி இந்த பீரோ, ‘வங்கி முதலீட்டு நிறுவன’மாக மாற்றப்படும். அதன் தொடர்ச்சியாக பொதுத்துறை வங்கியில் அரசின் பங்கு மதிப்பு 40%-க்கு குறைபட்டு, இந்த முதலீட்டு நிறுவனத்துக்கு மாற்றப்படும். வங்கிகளைக் கட்டுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் இந்த நிறுவனத்துக்கு முழு உரிமையும் தரப்பட்டுவிடும். இது முடிந்தவுடன் இதர பரிந்துரைகள் ஒவ்வொன்றாக அமலுக்கு வரும். முக்கியமானது இதுதான்: தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது கொண்டுவரப்பட்ட ‘அனைவருக்குமான வங்கிச் சேவை’ என்ற வழிகாட்டு லட்சியம் தோற்கடிக்கப்படும்.

வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? நாட்டில் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ தனியார் வங்கிதானே?

தனியார் வங்கிகளின் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. 1969-ல் பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர, இதர அனைத்தும் தனியார் துறையில்தான் இருந்தன. 1947 தொடங்கி 1969 வரையில் 559 வங்கிகள் தொழில்செய்ய முடியாமல் மூடப்பட்டன. ஏராளமானோர் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பையெல்லாம் அந்த வங்கிகளில் முதலீடு செய்திருந்ததால் இழந்தனர். அப்போதெல்லாம் சாமானியர்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கவே முடியாது. கிராமங்களில் வங்கிக் கிளைகளே கிடையாது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, மேல் வர்க்கத்துக்கான வங்கிகள் மக்களுக்கான வங்கிகளாக மாறின. கிராமங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும். மிகப் பெரிய பொருளாதார மந்த நிலையிலும் அரசு வங்கிகள் தாக்குப்பிடித்துவருகின்றன. விவசாயக் கடன் தள்ளுபடி, ஜன் தன் யோஜனா போன்றவற்றை நிறைவேற்றுகின்றன. முன்னுரிமைத் துறைக்கும் சிறுதொழில், நடுத்தரத் தொழில் துறைக்கும் கடன் வழங்கி வருகின்றன. மிக நெருக்குதல்களுக்கு இடையிலும் அவை லாபம் ஈட்டுகின்றன. தனியார் வங்கிகளோ அரசின் சமூகப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதில்லை.

ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில்கூட அவை அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதில்லை. மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால், பொதுத்துறை வங்கிகள் மீதே விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டுத் தரப்பினர் பலருக்குக் குறைகள் இருக்கின்றனவே?

குறைகளை மறுக்கவில்லை. நாம் நிச்சயம் பொதுத்துறை வங்கிகளின் சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும். ஆனால், வரலாற்றுக்கும் கொஞ்சம் நாம் மதிப்பளிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளின் வருகைக்கு முன் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்களிப்பு 40%. ஆனால், அன்றைய வங்கிகள் விவசாயத்

துக்குக் கொடுத்த கடன் தொகை வெறும் 0.2%. மூலதனம் என்பது மிகச் சிலரின் கைகளில் மட்டுமே இருந்தது. இன்றைக்கும் விவசாயத்துக்கான பங்களிப்பு போதவில்லை என்றாலும், விவசாயத்துக்கு உற்ற துணையாக நிற்பவை பொதுத்துறை வங்கிகள்தான். எனவே தீர்வு என்னவென்றால், பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துவதுதான். செல்வாக்கு மிகுந்த சில தனியார் கைகளில் ஒப்படைப்பது அல்ல.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தியே தீருவது என்று அரசு உறுதியாக இருந்தால் அதை எப்படி எதிர்க்க உத்தேசித்திருக்கிறீர்கள்?

அரசுத் துறை நிறுவனங்கள் அனைத்துடனும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் பொது மேடையை உருவாக்கியிருக்கிறோம். மக்களிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டுசெல்கிறோம்பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றுவோம் என்பதே எங்கள் ஒரே முழக்கம்!

© ஃப்ரண்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x