Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM
மனித குலத்தின் சாத்தியங்களை அதிக அளவில் வெளிப்படுத்துபவையாகப் போரும் விளையாட்டும்தான் இருக் கின்றன. முந்தையது அழிவை ஏற்படுத்துவது; பிந்தையது ஆக்கபூர்வமானது. அது மட்டுமல்லாமல் பசி, பஞ்சம், போர்கள், பிரிவினைகள், நோய்கள் என்று ஏராளமான இன்னல்களால் பீடிக்கப்பட்டிருக்கும் மனித குலத்துக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதும் அவற்றைக் கண்டுகளிப்பதும் பெரும் ஆசுவாசத்தையும் பொழுதுபோக்கையும் தருகின்றன. அதனால்தான், ஒலிம்பிக் போட்டிகள் போன்றவை மிகவும் முக்கியமானவையாகின்றன.
பண்டைய ஒலிம்பிக்
பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு கி.மு. 776-ல் தொடங்குகிறது. கிரேக்கத்தின் அப்போதைய நகர அரசுகளுள் ஒன்றான எலிஸ் அரசால் ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. வரலாற்று ஆவணங்களின்படி முதல் சாம்பியன் எலிஸ் நகரத்தைச் சேர்ந்த சமையற்காரரான கரோபஸ். இவர் கி.மு. 776-ல் நடந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றார்.
பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே ஆண்கள்தான். இவர்கள் அனைவரும் ஆடையின்றியே போட்டிகளில் கலந்துகொண்டனர். ஓட்டப் பந்தயம், வட்டு எறிதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தாண்டுதல் ஆகிய விளையாட்டுகள் மட்டும் இடம்பெற்றன. பிற்பாடு குதிரைப் பந்தயம், குதிரை வண்டிப் பந்தயம் போன்றவை சேர்க்கப்பட்டன. போட்டிகளில் பெண்கள் கலந்துகொள்ள முடியாது என்றாலும் பெண்கள் வைத்திருக்கும் குதிரை வண்டிகள் கலந்துகொள்ளலாம். விதிமுறைகளின்படி போட்டியில் வென்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களே வெற்றியாளர் என்று கருதப்பட்டதால், பெண்கள் வெற்றிபெற்றது பற்றிய பதிவுகளும் வரலாற்றில் உண்டு. ஒலிம்பிக் போட்டிகளின் புகழ் உச்சத்தில் இருந்தபோது அந்தப் போட்டிகள் நடைபெற்ற அரங்கில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததாக வரலாறு சொல்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கமானது ரோமானிய அரசிடம் வீழ்ந்த பிறகு, ஒலிம்பிக்கின் மவுசு குறைய ஆரம்பித்தது. ஒலிம்பிக் போட்டிகள் பாகன் மதங்களுடன் தொடர்புடையவை என்று ரோமானியப் பேரரசர் தியோடோஸியஸ் கி.பி. 400 வாக்கில் அவற்றைத் தடைசெய்தார்.
நவீன ஒலிம்பிக்கின் வரலாறு
நவீன ஒலிம்பிக்கை மீட்டெடுத்தவராக பிரான்ஸைச் சேர்ந்த பியர் தெ கூபர்தின் கருதப்படுகிறார். 1894-ல் கூபர்தினும் கிரேக்கத்தைச் சேர்ந்த திமித்ரியோஸ் விகேலஸும் இணைந்து சர்வதேச ஒலிம்பிக் குழுவைத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து 1896-ல் ஏதென்ஸ் நகரத்தில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. முதல் ஒலிம்பிக்கில் மொத்தம் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்துகொண்டார்கள். அமெரிக்காவைத் தவிர, ஏனையவை ஐரோப்பிய நாடுகள்.
1896-லிருந்து நான்காண்டுகள் இடைவெளியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 1924-லிருந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. இதுவரை கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் 28 முறைகளும், குளிர் கால ஒலிம்பிக் 23 முறைகளும் நடைபெற்றிருக்கின்றன. முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகிய காலகட்டங்களில் போட்டிகள் நடைபெறவில்லை. இதுவரையிலான போட்டிகளில் அமெரிக்கா 2,542, ரஷ்யா 1,010, பிரிட்டன் 867 என்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இந்தியா இதுவரை 28 பதக்கங்களை மட்டுமே வென்றிருக்கிறது. இந்தியாவுக்காக முதல் பதக்கத்தைப் பெற்றவர் நார்மன் ப்ரிட்சார்டு என்ற ஆங்கிலேயர். இந்திய ஹாக்கி அணி மட்டும் 8 தங்கப் பதக்கங்கள் உட்பட இதுவரை 11 பதக்கங்களை வென்றிருக்கிறது. எனினும், பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் நாடுகளைப் பார்க்கும்போது இந்தியா செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்று தோன்றுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் உலக ஒற்றுமை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை போன்றவற்றுக்கு அடையாளமாக இருந்தாலும் அவற்றை யொட்டிப் பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சினைகளும் கடந்த காலத்தில் உருவாகியிருக்கின்றன. 1936-ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் தனது நாஜி பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த முயன்றார். மெக்ஸிகோ நகரத்தில் 1968-ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, அந்நாடு பொருளாதாரரீதியாகத் தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், அந்தப் போட்டிகள் தேவையா என்று கேள்வி கேட்டு, மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் மீது மெக்ஸிகோவின் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1972 ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக்கின்போது பயங்கரவாதிகளால் இரண்டு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவற்றைத் தவிர லஞ்சக் குற்றச்சாட்டு, ஊக்க மருந்து சர்ச்சைகள், ஒலிம்பிக்கை வணிகமயமாக்கிவிட்டார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
தற்போதைய ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டே டோக்கியோவில் நடந்து முடிந்திருக்க வேண்டியது. கரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிப்போனதையொட்டி ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன. எனினும் மனித குலம் எந்தவொரு துயரத்திலும் மூழ்கித் தன்னை இழந்ததில்லை; எப்போதும் மீண்டெழுந்தே வந்திருக்கிறது. அந்த மீளுதலின் அடையாளங்களுள் ஒன்றாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் இருக்கட்டும். மானுட சமுதாயம் தன் உடலின் சாத்தியங்களை அறிவின் சாத்தியங் களோடு ஒன்றிணைத்து வெளிப்படுத் தட்டும்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT