Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
கீழடியில் மனித எலும்புக் கூடு, சிவகளையில் முதுமக்கள் தாழி என அடுக்கடுக்காய் அகழாய்வுக் கண்டுபிடிப்புச் செய்திகள் வெளிவருகின்றன. வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு பழைய கண்டுபிடிப்புகளைப் புரட்டி வீசுகிறது. ஆனால், பூம்புகாரில் தொடங்கிய அகழ்வாராய்ச்சி மட்டும் முழுமை பெறாமலே போய்விட்டது.
மனித நாகரிகங்கள் அனைத்தும் நதிகளிலோ நதி கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிகளிலோதான் தோன்றியுள்ளன. நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம், யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையில் சுமேரிய நாகரிகம், சிந்து நதியில் இந்திய நாகரிகம், மஞ்சள் நதியில் சீன நாகரிகம் என்பதுபோல, காவிரியின் கழிமுகத்திலும் பழம்பெரும் நாகரிகத்தின் வரலாற்றுச் சுவடுகள் இருக்கக்கூடும். பூம்புகாரில் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் அதை மெய்ப்பிக்கும் வலுவான சான்றாதாரங்கள் கிடைக்கக்கூடும்.
துவாரகையும் புகாரும்
கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் குஜராத்தில் உள்ள துவாரகையைக் கண்டறிய 1981-ல் கடல் அகழாய்வு நடந்தது. கோவா தேசிய ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்தினர் நவீனக் கருவிகள் மூலம் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது, பூம்புகார் கடல் பகுதியில் 3 மீ உயரத்திற்குக் கூம்பு போன்ற மேடுகள் தெரிகின்றன எனவும் அவை 10 மீ அளவுக்கு அடிப்பரப்பைக் கொண்டுள்ளன எனவும் நீரில் மூழ்க வல்லவர்களை வைத்து இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோவாவின் தேசியக் கடலாய்வு நிறுவன அமைப்பு கூறியிருந்தது.
துவாரகையில் ஆய்வு நடந்த 10 ஆண்டுகள் கழித்து 1991 பிப்ரவரியில் பூம்புகார் ஆய்வு நடந்தது. பூம்புகார் கடலடி அகழாய்வுக்காக தமிழ்நாடு அரசு 1990-91-ல் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது. 1993-95களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுகள் நடந்தன. இந்த ஆய்வின் முடிவுகளிலிருந்து உலகின் நவீன நகர நாகரிகங்களில் பூம்புகாரும் ஒன்றெனத் தெளிவானது. எனினும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வைப் பாதியில் நிறுத்திவிட்டது.
பேசப்படாத நகரம்
தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் தொன்மையின் சின்னங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. எனினும், நமது தொன்மை நகரங்களில் ஒன்றான பூம்புகார் குறித்துப் போதிய அளவில் பேசப்படுவதே இல்லை. காகந்தி, சம்பாபதி, பல்புகழ்மூதூர், மண்ணகத்து வான்மதி, சோழப்பட்டினம், கோலப்பட்டினம், கபேரிஸ் எம்போரியம் என்று எத்தனையோ பெயர்களில் அந்நகரம் அழைக்கப்பட்டிருக்கிறது. சோழர்களின் துறைமுகப் பட்டினமான பூம்புகாரில், உலகின் வாணிபப் பொருட்கள் யாவும் குவித்து வைக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை பேசுகிறது.
கிரேக்கர்கள், ரோமாபுரியினர், சீனத்தவர், அரேபியர், எகிப்தியர் உள்ளிட்டோரைப் புகார் நகரம் வாழ வைத்துள்ளது. பல நாட்டுக் கைவினைஞர்கள் கூடிச்செய்த பசும்பொன் மண்டபம் அங்கு இருந்துள்ளது. புகாரின் நகர அமைப்பு மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தது. செந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளிவீசிய நாட்டியத் தாரகைகளின் தாய்நிலமாக புகார் விளங்கியது.
பாண்டியர்களின் படையெடுப்பு
வரலாறு நெடுகிலும் தரைவழிப் படையெடுப்பு களாலும் இயற்கைப் பேரிடர் சீற்றங்களாலும் புகார் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. மணிபல்லவம் சென்ற மணிமேகலை திரும்பிவந்தபோது, புகாரை உப்புக் கடல் மூழ்கடித்திருந்தது. பூம்புகாரைக் கடல் கொண்டது பற்றி கலித்தொகை, முல்லைக்கலி, சிலப்பதிகாரம் ஆகியவை கூறுகின்றன. கி.பி. 12-13ம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தில் பாண்டியர் ஆதிக்கம் வலுத்தது. சோழர்களின் தலைநகராக இருந்த உறையூர், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், பழையாறை ஆகியவை நிர்மூலமாக்கப்பட்டன. இவற்றை மெய்க்கீர்த்திகளாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
மாறவர்மன் சுந்தர பாண்டியனின் படையெடுப்பின்போது பூம்புகாரும் தரைமட்டமாக்கப்பட்டது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் கரிகாலனிடம் பரிசாகப் பெற்ற 16 கால் மண்டபத்தை அழிக்க மனமின்றி, அதை மட்டும் விட்டுவைத்ததாக திருவெள்ளறைக் கல்வெட்டு கூறுகிறது. கடைசியில், புகார் ஒரு சிற்றூராகச் சுருங்கியது. சாயாவனத்து மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு புகாரை நாங்கூர் நாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் எனச் சிற்றூராக அறிமுகம் செய்கிறது. சோழநாட்டின் துறைமுக நகரம் உருத்தெரியாமல் போய்விட்டது.
மானுடத்தின் அடையாளம்
லண்டனை பூம்புகார் எப்போதோ விஞ்சிவிட்டதாக டி.வி.சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்கிறார். 19-ம் நூற்றாண்டில் தெரிந்த லண்டனின் அழகைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதலாக 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் திகழ்ந்ததாக அவர் எழுதியுள்ளார். மனித குலத் தொன்மை என்பது ஒரு நிலத்துக்கும், ஒரு இனத்துக்கும் மட்டும் சொந்தமானதல்ல. அது மானுடத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
தமிழக நிலப்பரப்பில் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மதுரை இப்போது இருக்கும் இடத்தில் சங்க காலத்தின் மதுரை இல்லை. இப்போதைய அரியலூர் அப்போது கடல் பகுதியாக இருந்தது எனப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் புவி அறிவியல் துறை, சீர்காழியைக் கடலில் இருந்து விலகிய நிலப் பகுதி என்றும் புகாரைக் கடலில் மூழ்கிய நிலம் என்றும் கூறியுள்ளது. புவியியல் மாற்றங்களால் நிகழ்ந்த மாற்றங்களை அகழ்வாராய்ச்சிகளின் துணையோடுதான் அறிந்துகொள்ள முடியும்.
ஆதிச்சநல்லூர் ஆய்வின் அனுபவங்கள் பூம்புகாரில் மீண்டும் நிகழக் கூடாது. 1876-ல் ஜெர்மானியக் குழுவினால் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2004-ல்தான் மீண்டும் நடந்தது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகளும்கூட உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் தலையீட்டின் காரணமாகவே 17 ஆண்டுகள் கழித்து 2021-ல் வெளியிடப்பட்டுள்ளன.
கடலில் மூழ்கிய புகார் நகரின் எஞ்சிய அடையாளங்களை நிலத்திலும் நீரிலுமிருந்து மீட்க வேண்டும். தொல்பொருள் அகழ்வாராய்ச்சி இப்போது புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தியும், சோலார் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தியும் பூம்புகாரில் அகழாய்வுகளைச் செய்ய வேண்டும். இதற்காக ஐநா அமைப்பின் உலகக் கடலடி ஆணையத்தின் உதவியையும்கூடப் பெறலாம். கண்ணகி பிறந்து வளர்ந்த நகருக்கு நீதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
- வெ.ஜீவகுமார்,
வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர்,
தொடர்புக்கு: vjeeva63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT