Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM
இயற்கைப் பேரிடர்கள், யுத்தங்கள், பஞ்சங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள், உலகை உலுக்கும் பெரிய மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் செய்தியாக அனைத்து மக்களிடமும் தெரிவிப்பதற்கு இந்த நூற்றாண்டிலும் ஒளிப்படங்களே சக்திவாய்ந்த ஊடகங்களாகத் திகழ்கின்றன. ஆப்கானிஸ்தான் படையினருக்கும் தாலிபான் பயங்கரவாதி களுக்கும் இடையே நடைபெற்ற போரைப் படம்பிடிக்கச் சென்று, களத்திலேயே பலியான, புலிட்சர் விருது பெற்ற ஒளிப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக்கியின் புகைப்படங்கள் சமீபத்தில் இந்தியாவையும் உலகத்தையும் உலுக்கிய எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வரலாற்றுச் சாட்சியாக இருந்தவை. ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி, ஹாங்காங் மக்கள் போராட்டங்கள், நேபாள நிலநடுக்கம், அமெரிக்க அதிபர் வருகையின்போது டெல்லியில் நடந்த கலவரம் எனத் தினமும் செய்தித்தாள்களில் நம் கண்ணையும் கருத்தையும் ஈர்த்த, தொந்தரவு செய்த முக்கியமான ஒளிப்படங்களை எடுத்தவர் டேனிஷ் சித்திக்கி.
1983-ல் புதுடெல்லியில் பிறந்த டேனிஷ், இளமையும் ஆற்றலும் உச்சமாகத் திகழும் பருவத்தில் - 38 வயதில் - இறந்திருக்கிறார். அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மாறிய உலகத்துக்குள் நுழைந்த ஒரு தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதி அவர். ஜனநாயகரீதியான கருத்துப் பரிமாற்றங்கள், போராட்டங்கள் தீவிரமாக ஒடுக்கப்படத் தொடங்கிய அதேவேளையில் மதரீதியான, இனரீதியான அடையாளங்கள் கூர்மையடைந்து பரஸ்பரம் மோதிக்கொண்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்ந்து செய்திப் புகைப்படங்களை எடுத்துத்தள்ள வேண்டிய பரபரப்பிலும் செய்திக்குப் பின்னால் இருக்கும் மனித அம்சத்துக்குக் கவனம் அளித்தவர் டேனிஷ் சித்திக்கி. ரோஹிங்கியா அகதிகள் சந்தித்த கொடூரங்கள், சென்ற ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்த கலவரம், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்கள், கரோனா இரண்டாம் அலை போன்றவை தொடர்பான ஒளிப்படங்கள் நினைவுகூரத்தக்கவை. ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அவர் எடுத்த ஒளிப்படங்கள்தான் அவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத்தந்தன.
2010-ல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் இணைந்த டேனிஷ் சித்திக்கி, ஒளிப்படங்கள் எடுத்ததோடு செய்திக் கட்டுரைகளையும் எழுதியவர்; மேற்கு ஆசியா, ஐரோப்பா எனப் பயணித்து, முக்கியமான நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தியவர். ஈராக் யுத்தத்தையும் ஹாங்காங்கில் நடந்த மக்கள் போராட்டங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த கலவரத்தில், சாலையில் மண்டியிட்டுக் குனிந்திருக்கும் இஸ்லாமியரை ஒரு கும்பல் சேர்ந்து தாக்கும், டேனிஷ் எடுத்த ஒளிப்படம்தான் சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. ஒரு கட்டத்தில், டேனிஷ் மீது சந்தேகப்பட்டு அவரது அடையாள அட்டையைக் கேட்டு அந்தக் கும்பல் மிரட்ட, அவர் உயிர் தப்புவதற்காக ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடந்த போராட்டத்தில், துப்பாக்கியோடு புகுந்து அச்சுறுத்திய இளைஞரை ஒளிப்படம் எடுத்தவரும் இவர்தான். இதுபோன்ற ஒளிப்படங்களுக்காக, அவரின் இஸ்லாமிய அடையாளம் காரணமாக, வலதுசாரிகளின் மிரட்டலுக்கும் அவமதிப்புக்கும் இணையம் வழியாக உள்ளானவர் டேனிஷ்.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை, சுனாமிப் பேரலைபோல சாதி, மதம், வர்க்க பேதமின்றி அடித்துத் தாக்கிய அவலத்தை ஒளிப்படங்கள்தான் உலகம் முழுக்க எடுத்துச் சென்றன. வடமாநிலங்களின் சுடுகாடுகளில் இடமின்றி, இரவு பகலாகச் சடலங்கள் எரிக்கப்பட்டதை ஒளிப்படங்கள் வழியாக அழியாச் சித்திரங்களாக மாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் டேனிஷ் சித்திக்கி. இந்தியாவிலும் உலகெங்கிலும் இனவாதமும் வகுப்புவாதமும் வன்முறைகளும் அதிகரித்த ஒரு காலகட்டத்தின் ஓர்மையோடு தனது ஒளிப்படங்களை எடுத்திருக்கிறார் டேனிஷ். ரோஹிங்கியாவில் சிறுபான்மையாக முஸ்லிம்கள் சந்தித்த அவலத்தைப் பார்த்திருக்கிறார். ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சூழலில் சந்தித்த யுத்தத்தையும் படமெடுத்திருக்கிறார். டேனிஷைப் பலிகொண்ட ஆப்கானிஸ்தானும் அதுபோன்ற சூழலில் உள்ள நாடே. இரண்டு சூழல்களுமே அவருக்கு அபாயத்தையும் அச்சுறுத்தலையும்தான் பரிசாக அளித்திருந்திருக்கின்றன. டேனிஷ் அடைந்திருக்கும் மரணத்துக்கும் அவரது அடையாளத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வெறுப்பும் கும்பல்வாதமும் மோதல்களும் நடக்கும் இடங்களை நோக்கித் தொடர்ந்து அச்சமின்றிப் பயணித்துக்கொண்டிருந்தவர் டேனிஷ். பொறுப்புமிக்க கலைஞராக, மனிதராக, வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு மேம்பட்ட தளத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அகாலத்தில் டேனிஷ் மரித்திருக்கிறார்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT