Published : 24 Jun 2014 06:05 AM
Last Updated : 24 Jun 2014 06:05 AM

விண்ணில் ஒரு பிரம்மாண்டமான ‘கண்

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக மிகப் பெரிய தொலைநோக்கி ஒன்று விண்ணுக்குச் செல்லத் தயாராகிவருகிறது. பூமியில் மட்டுமல்லாமல், விண்ணிலும் தொலைநோக்கிகள் சுற்றிவந்து விண்வெளியைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பிவருகின்றன. 1990-ல் ஏவப்பட்ட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி அவற்றில் மிகப் பெரியது. இது பூமியின் சுற்றுப்பாதையில் வலம்வந்துகொண்டே தனக்கு இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்துவருகிறது. தற்போது, அதைவிடப் பெரிய, துல்லியமான விண்வெளித் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘அட்லாஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கி, வரும் 2030-ல் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த வாரம் பிரிட்டனின் போர்ட்ஸ்மெளத் நகரில் நடைபெறும் தேசிய வானியல் கூட்டத்தில் இந்தத் திட்டம் குறித்த தகவல்களை, ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவரும் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறைப் பேராசிரியருமான மார்ட்டின் பார்ஸ்டோவ் விவரிக்க உள்ளார். இந்த ‘அட்லாஸ்ட்' விண்ணில் 10.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவில், கிட்டத்தட்ட பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தைவிட நான்கு மடங்கு தொலைவில் விண்ணில் அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம், பூமி போன்ற கோள்களைத் துல்லியமாகப் படமெடுக்க முடியும் என்பதுடன் அந்தக் கோள்களின் வளிமண்டலங்கள் குறித்தும் தகவல்களைச் சேகரிக்க முடியும். “30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை இந்தத் தொலைநோக்கியால் காண முடியும். அந்தத் தொலைவுக்குள் காணக்கிடைக்கும் கோடானுகோடி கோள்களில் பூமியைப் போன்ற கோள்கள் குறைந்தபட்சம் 60 இருக்கலாம்” என்று மார்ட்டின் பார்ஸ்டோவ் கூறுகிறார். இதில் பொருத்தப்படும் கண்ணாடியின் விட்டம் மட்டும் 65 அடிக்கும் மேல் இருக்கும். இத்தனை பெரிய கருவியைச் சுமந்துசெல்ல ராக்கெட்டுகளால் முடியாது என்பதால், கட்டுமானப் பொறியியலில் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் இதன் பாகங்களை எடுத்துச் சென்று விண்ணில் அதைப் பொருத்துவார்கள் என்கிறார் மார்ட்டின். உலகம் எத்தனை சிறியது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x