Last Updated : 18 Jul, 2021 03:14 AM

1  

Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

ஜெஃப் பெஸோஸ்: விண்ணளாவும் செல்வந்தர்

முன்பெல்லாம் சென்னையின் அடையாளங்களுள் லேண்ட்மார்க் புத்தகக் கடைகளும் உள்ளடங்கும். கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்த காலத்திலிருந்து அந்தக் கடைகள் மூடப்படுவது வரை அடிக்கடி அங்கே செல்வதுண்டு. குறிப்பாக, அண்ணா சாலையின் ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் அமைந்திருந்த கடைக்கு. ஆரம்பத்தில் புத்தகம் வாங்க வசதியில்லை என்றாலும் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் இன்பத்துக்காகவே அங்கே போவது உண்டு. வருடங்கள் செல்லச் செல்ல லேண்ட்மார்க் தனது சோபையை இழந்து, ஒரு கட்டத்தில் மூடப்பட்டது. தன் வீட்டுக் கொல்லைக் கிணறு வற்றிப்போனதைப் பற்றி முகுந்த் நாகராஜன் எழுதிய கவிதை ஒன்று இங்கே பொருத்தமாக இருக்கும்: ‘என் கிணறு வற்றிப்போனதை விடவும் வருத்தம் தந்தது/ யார் யாரோ எங்கிருந்தோ என் கிணற்றை/ வற்ற வைத்துவிட முடியும் என்பது!’. லேண்ட்மார்க் போன்ற புத்தகக் கடைகளை எங்கிருந்தோ வற்றவைத்தது ஒருசில பகாசுர நிறுவனங்கள். அவற்றுள் ஒன்று அமேஸான் டாட் காம். அதன் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்.

அமேஸானை நிறுவியதிலிருந்து அதன் தலைமைச் செயல் அலுவலராக இருந்த ஜெஃப் பெஸோஸ் ஜூலை 5 அன்று அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார். இனி செயல் தலைவராக (Executive Chairman) மட்டுமே அந்த நிறுவனத்தில் அவர் நீடிப்பார். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கையில் அவர் தலையிட மாட்டார். இனிமேல், தனது விண்வெளிக் கனவுகளின் மீது மட்டும் தன் அக்கறையை அவர் செலுத்துவார் என்று தெரிகிறது.

பெஸோஸின் சொத்து இந்திய மதிப்பின்படி சுமார் ரூ. 15 லட்சம் கோடி (15,00,000,00,00,000). உலகின் மிகப் பெரிய பணக்காரர் இவர்தான் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. அமேஸான் தொடங்கப்பட்ட ஆண்டான 1995-ல் அதன் ஒட்டுமொத்த விற்பனையின் மதிப்பு ரூ. 3.80 கோடி. 2018-ல் அமேஸானின் ஒட்டுமொத்த விற்பனை ரூ. 17.40 லட்சம் கோடிக்கும் மேல். கரோனாவால் உலகெங்கும் ஒட்டுமொத்தத் தொழில்துறையும் முடங்கிக் கிடக்க, அமேஸானுக்கோ நெருக்கடியான சூழலும் வாய்ப்புகளைக் கொட்டித்தந்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் வெளியே சென்று பொருட்களை வாங்குவதற்கு அஞ்சியவர்கள் அமேஸானையே நாடினார்கள். இதனால் அந்த நிறுவனம் 2020-ல் சாதனை அளவாக ரூ. 28.83 லட்சம் கோடிக்கும் மேல் விற்பனை அளவை எட்டியது. இதற்கெல்லாம் பின்னே லட்சக்கணக்கான மூளைகளும் கைகளும் இயங்கினாலும் அவற்றை ஆட்டுவித்தது பெஸோஸ் என்னும் மனிதர்.

1964-ல் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் அல்பகர்கி நகரத்தில் பிறந்தவர் ஜெஃப் பெஸோஸ். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியலிலும் கணினி அறிவியலிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றார். அதன் பிறகு, பல இடங்களிலும் வேலை பார்த்துவிட்டு, 1990-ல் நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு முதலீட்டு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே, உயர் பதவிகள் அவரைத் தேடி வந்தன. முக்கியமாக, அதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, அதிதீவிர வளர்ச்சி பெற்றுவந்த இணையத்தின் சாத்தியங்கள் குறித்து அங்கே கண்டறிந்தார். 1994-ல் அந்த வேலையை விட்டு விலகினார். சியாட்டில் நகரத்தில் உள்ள தனது கார் நிறுத்தும் கொட்டகையில் 1995-ல் சொந்தமாக ஓர் இணையப் புத்தகக் கடையைத் தொடங்கினார். அதுதான் அமேஸான் டாட் காம். அமேஸான் 1998-ல் குறுந்தகடுகளை விற்க ஆரம்பித்தது. தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான பொருட்கள், காலணிகள், அழகு சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள், ஆடைகள், கழிப்பறைக் காகிதம் என்று ஆரம்பித்து, அமேஸான் விற்காத பொருளே சூரியனுக்குக் கீழ் இல்லை என்று ஆனது. அமேஸான் நிறுவனத்தால், ஒரு ஆண்டில் வெளியிடப்படும் கரிம உமிழ்வு, நார்வே நாடு ஒரு ஆண்டில் வெளியிடும் கரிம உமிழ்வுக்கு இணையானது என்றால், அந்நிறுவனம் எவ்வளவு பெரியது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

அமேஸானை ஆரம்பிக்கும்போது யோசித்த பெயர்களுள் ஒன்று கடாபரா (cadabra). இது மந்திரவாதிகளும் மாயாஜால வித்தைக்காரர்களும் சொல்லும் ஆப்ரகடாபரா என்ற சொல்லின் பாதி. பொருட்களை ஆர்டர் செய்வோருக்கு மந்திரம் போட்டதுபோல் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெஸோஸ் யோசித்த சொல் அது. ‘கடாவர்’ (cadaver – பிணம்) என்ற சொல்லை இது ஒத்திருப்பதால், அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. என்றாலும் மந்திரம் போட்டதுபோல்தான் அமேஸானில் ஆர்டர் செய்யும் பொருட்கள் விரைந்து நம் கைக்கு வந்து சேர்கின்றன. ஆனால், அதன் பின்னுள்ள தொழிலாளர்களின் உழைப்பு மந்திரத்தால் வந்ததல்ல.

அமேஸானின் பிரம்மாண்டமான கிடங்குகளில் பொருட்களைக் கட்டுவது, தனித்தனியே பிரிப்பது, விநியோகத்துக்கு அனுப்புவது என்று பல்வேறு நிலையிலும் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழலின் அவலத்தை நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, சார்லி சாப்ளின் நடித்த ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கும். அந்தப் படத்தில் தொழிலாளர்கள் உணவு உண்ணும் நேரத்தால் உற்பத்தி குறைகிறது என்று கவலைப்படும் முதலாளி ஒருவர், ஒரு பரிசோதனை முயற்சி செய்வார். தொழிலாளர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஒரு ரோபாட்டிக் இயந்திரம் அவருக்கு உணவு ஊட்டும். இந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிடும். அதுபோல், அமேஸான் ஒரு சாதனத்துக்கு 2016-ல் காப்புரிமை வாங்கியது. கூண்டுபோல் அந்த சாதனம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனுள் தொழிலாளர்கள் இருந்துகொண்டு, தானியங்கி இயந்திரங்கள் நிரம்பிய பகுதிகளுக்குள் சென்று வேலை பார்க்கலாம். இந்த சாதனத்தைப் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. நல்லவேளை, இந்த சாதனம் அமலுக்கு வரவில்லை.

நுகர்வோரைப் பரவசப்படுத்துதல்தான் அமேஸானின் லட்சியம். இதன் காரணமாகத் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டுதான் ஆக வேண்டும். அமெரிக்காவில் உள்ள சில கிடங்குகளில் அவர்கள் எவ்வளவு வேகமாக வேலை பார்க்கிறார்கள் என்பதை அவர்களின் உடலில் பொருத்தப்பட்ட சாதனங்கள் கண்காணிக்கின்றன. வேகம் குறைந்தால் கேள்வி கேட்கப்படுவார்கள்; வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்டுஷைர் கிடங்கில், கழிப்பறைக்குச் சென்றால் உற்பத்தி குறையும் என்று அஞ்சி, தொழிலாளர்கள் புட்டிகளில் சிறுநீர் கழிக்கும் உண்மை வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது. நவீன வரலாற்றில் யாருமே கற்பனை செய்து பார்த்திராத அளவுக்குப் பணம் சம்பாதித்துக் களைத்துப்போய் ஜெஃப் பெஸோஸ் தற்போது ஓய்வுபெற்றிருக்கிறார். அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட தெரிவுகள் இல்லை; உடலில் தெம்பு இருக்கும் வரை உழைத்துதான் ஆக வேண்டும். மாபெரும் பணக்காரர்களுக்கே உரித்தான வகையில் ஜெஃப் பெஸோஸ் நற்காரியங்கள், அறிவியல் வளர்ச்சி போன்றவற்றுக்குப் பெரும் பணத்தை வழங்கியிருக்கிறார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 ஆயிரம் கோடி வழங்கியிருக்கிறார். என்றாலும், அவரது பிரதானக் கனவு விண்வெளிப் பயணம்தான். இதற்காக, 2000-ல் ஜெஃப் பெஸோஸ் ‘ப்ளூ ஆரிஜின்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் வணிகரீதியிலான பயணங்கள் தொடங்கவிருக்கின்றன.

ஜூலை 20 அன்று தன் சகோதரர் உள்ளிட்ட மூவருடன் ஜெஃப் பெஸோஸ் விண்வெளியில் பறக்கவிருக்கிறார். எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்ஸன் போன்றோரின் விண்வெளிப் பயண நிறுவனங்களுடனான போட்டியின் விளைவு இது. இந்தப் போட்டியில் சமீபத்தில் ரிச்சர்டு பிரான்ஸன் முந்திக்கொண்டார். ஜெஃப் பெஸோஸுடன் பறக்கவிருப்பவர்களில் ஒருவர், அதற்கான பயணச் சீட்டை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 210 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது. ஜெஃப் பெஸோஸ் தனது உல்லாச விண்வெளிப் பயணத்தில் உலாவரும்போது அமேஸான் ஊழியர் ஒருவர், வேகாத வெயிலில் முதுகில் பெரிய பையுடன் பைக்கில் வந்து, நீங்கள் ஆர்டர் செய்திருந்த லேப்டாப்பையோ ஐஃபோனையோ தரும்போது அவரது நெற்றியில் வழிந்துகொண்டிருக்கும் வியர்வையைப் பார்க்க வேண்டும். அதை சூரியன் மிச்சம் வைத்தாலும் ஜெஃப் பெஸோஸ் உருவாக்கிய அமேஸான் நிச்சயம் உறிஞ்சிவிடும்.

எவ்வளவுதான் விமர்சனம் இருந்தாலும் ஜெஃப் பெஸோஸ் என்ற மனிதரின் வளர்ச்சி அசாத்தியமானதுதான். இந்த வளர்ச்சியில் நமக்கும் பங்கு உண்டு. சிறு கடைகளைவிடக் குறைந்த விலை, வீடு தேடி வரும் பொருள், ஒரு கடைக்குள் காணக் கிடைக்காத வகைகள் என்று நம் பொருள் தேட்டத்தின் அடையாளம்தான் அமேஸானின் வளர்ச்சி.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x