Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

அலோபதி மருத்துவம் மீது ஏன் இந்த அச்சம்?

கரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், இந்த இக்கட்டான காலத்திலும்கூட, பலரும் அறிவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட நவீன – அலோபதி மருத்துவ முறையில் தீர்வுபெற நினைக்காமல், மற்ற மருத்துவ முறைகளை ஏன் நாடிச் செல்கிறார்கள்? அல்லது அலோபதி மருத்துவத்தை நம்புவதிலிருந்து எது அவர்களைத் தடுக்கிறது/ அச்சம் கொள்ள வைக்கிறது என்கிற கேள்விகள் முக்கியமானவை.

புதியனவற்றை அல்லது வெளியிலிருந்து வந்தவற்றை ஏற்பதில் தயக்கம் அல்லது அவற்றைக் குறித்த சந்தேகம் என்பது எல்லா சமூகங்களிலுமே நிலவக்கூடிய ஒன்றுதான். தங்கள் பாரம்பரிய முறை சிறந்தது என்று வழிவழியாக வந்த நம்பிக்கை, இந்த விலக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதாரண நோய்கள், பருவகால நோய்களுக்கு மற்ற மருத்துவ முறைகளை நாடும்போது, அவை பலனளித்தால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடும். பலனளிக்காவிட்டால், வேறொரு மருத்துவ முறையைத் தேடிச் செல்ல முடியும். இதில் திடீரென்று உயிருக்கு ஆபத்து நேர்வதற்கு அதிக சாத்தியமில்லை. கரோனா இரண்டாம் அலையில் சட்டென்று நோய் தீவிரமடைவது, அறிகுறிகள் தென்பட்டு ஒரு வாரத்துக்குள் உயிரிழப்பு போன்றவை அதிகமாக இருந்தன. இந்த இழப்புகளும்கூட அலோபதி மருத்துவம் நோக்கி மக்களைத் திருப்பத் தவறிவிட்டனவா?

நெருக்கமாக இருந்த மருத்துவர்கள்

சற்றே பின்னோக்கிப் போவோம். நோயாளர்கள் தரும் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தார்கள். பல ஊர்களில் ‘5 ரூபாய் டாக்டர்’, ‘10 ரூபாய் டாக்டர்’ எனப் பலரைப் பற்றி இப்போதும் கேள்விப்படுகிறோம்.

ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுணர்களாக விளங்கிய மூத்த மருத்துவர்களும் இருந்தார்கள். நெஞ்சகநோய் என்றால் செ.நெ.தெய்வநாயகம், தோல்நோய் என்றால் தம்பையா, ஒவ்வாமை நோய்களுக்கு கே.வி.திருவேங்கடம் எனப் பலர் புகழ்பெற்று விளங்கினார்கள். தங்களை நாடிவந்த நோயாளர்களிடம் இவர்கள் அதிகக் கட்டணம் வசூலித்ததில்லை. மருத்துவ சிகிச்சை அளிப்பதை சமூகக் கடமையாகவே அவர்கள் கருதினார்கள். மக்களுக்கு நவீன மருத்துவம் குறித்த ஆழமான புரிதல் இல்லாவிட்டாலும், இந்த மருத்துவர்களைப் பெரிதும் நம்பினார்கள்.

அதேபோல் புத்தாயிரம் ஆண்டுவரை பல குடும்பங்களுக்குத் தனி குடும்ப மருத்துவர்கள்/ பொது மருத்துவர்கள் அதிகம் இருந்தார்கள். குடும்ப விவகாரங்களை இயல்பாக விசாரித்துக்கொண்டே உடல் அறிகுறிகளையும் கேட்டறிந்து சிகிச்சை அளித்தார்கள். இன்றைய இளம் மருத்துவர்கள் தனியாக ‘கிளினிக்’ வைப்பதைவிட, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதையே பெரிதும் விரும்புவதாகத் தெரிகிறது. அதேபோல் பொது மருத்துவர்கள் குறைந்து, எங்கு திரும்பினாலும் நிபுணர்களே நிறைந்திருக்கிறார்கள்.

ஏன் இந்த ஒவ்வாமை?

சில பத்தாண்டுகளுக்கு முன்னர்வரை தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவர்களில் பலர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக, துறைத் தலைவர்களாக இருந்தவர்கள். இருந்தும் அரசு மருத்துவமனைக்குச் செல்வதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒருவித ஒவ்வாமை, அசூயை இருக்கிறது. அந்த மருத்துவமனைகள் சுத்தமாக இருக்காது, மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்கிற கற்பிதங்களுடன், எல்லாத் தரப்பு மக்களும் அங்கு வருவதுகூட அரசு மருத்துவமனைகளை அவர்கள் தவிர்ப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். அரசு மருத்துவமனைகளிலிருந்து விலகி நிற்கும் இந்தப் பார்வை காரணமாக, மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டுமென்றால், தனியார் மருத்துவமனையையே நடுத்தர மக்கள் இன்றைக்கு நாட வேண்டியுள்ளது. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளுக்கோ - பிரபல மருத்துவர்களிடமோ சென்றால் செலவு அதிகமாகும், அதனால் போக வேண்டாம் என்கிற மனப்பான்மையும் பலரிடமும் இருக்கிறது.

மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாவதும், அரசு மருத்துவத் துறையின் மீது நம்பிக்கை இல்லாததும்தான் அலோபதி மருத்துவத் துறை மீதான விலகல் மக்களிடையே அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றன.

ஏன் புரிவதில்லை?

இவையெல்லாம் முக்கியக் காரணங்கள் என்றாலும், நவீன மருத்துவ அறிவியல் குறித்த புரிதல் மக்களிடையே பரவலாக இல்லை அல்லது போதிய அளவில் புரிதலை ஏற்படுத்த நவீன மருத்துவத் துறையினரும் அரசும் தவறிவிட்டதும் குறிப்பிடத்தக்க காரணமே. அறிவியலுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி குறித்து, கல்வியாளர் கிருஷ்ணகுமார் ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறார். நம் பாடத்திட்டங்களில் எல்லாம் இருக்கிறது. பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள், செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் செயல்பாடுகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களோ ஆசிரியர்களோ ஈடுபடுத்தப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் மாசுபட்ட நீர் சேரும்போது கொசு பெருகுகிறது, அதனால் நோய் அதிகரிக்கிறது என்பது பற்றிக் கற்பிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அந்தப் பிரச்சினையை ஒருவர் எதிர்கொண்டால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மாணவர்களும் சமூகமும் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான தூண்டுதல் இல்லை. இந்த இடைவெளி பாரதூரமாக இருக்கிறது. ஏட்டுக்கல்வி என்கிற அளவிலேயே பெரும்பாலான விஷயங்கள் தேங்கிவிடுகின்றன. பிரச்சினைகளைக் களைவதற்கான நடைமுறைகளையே அறிவியல்ரீதியாகப் படித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்த்துதல் நம் கல்வி முறையின் உள்ளார்ந்த இயல்பாக இல்லை. அனைத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் உள்ளார்ந்த தொடர்பு உணர்த்தப்படுவதில்லை.

ஒரு அறிவியல் பாடத்தைப் படித்து, அதிக மதிப்பெண் வாங்கிவிடும் ஒரு மாணவர், நடைமுறையில் எந்தப் பிரச்சினையையும் அறிவியல் சிந்தனையுடன் தீர்க்க முயல்வதில்லை. அல்லது அதற்கான உந்துதலோ நெருக்கடியோ அவருக்கு ஏற்படுவதேயில்லை. அறிவியல், மருத்துவ அறிவியல் சார்ந்த புரிதலின்மைக்கும் இதே காரணங்கள் பொருந்தும்.

இந்தப் புரிதலின்மையையும் அலோபதி மருத்துவர்கள்-நிபுணர்கள் மீது நோயாளர்களுக்கு உள்ள சந்தேகத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். குறிப்பிட்ட பரிசோதனை எதற்கு அவசியம், நோய் குறித்து அது தரும் புரிதல் போன்றவற்றை நோயாளருக்கும், பொதுமக்களுக்கும் பரவலாக விளக்கப்படும்போது, அதன் பின்னாலுள்ள அறிவியலை சமூகம் புரிந்துகொள்ளும். மாறாக, பரம்பரை மருத்துவர்கள் மருந்து பெயரைச் சொல்லாமல், பொட்டணங்களில் மருந்தை மடித்துத் தருவதைப் போல், கட்டணம் அதிகமுள்ள பரிசோதனைகள் குறித்து அலோபதி மருத்துவர்கள் ரகசியம் காப்பது சந்தேகத்துக்கே வழிவகுக்கிறது. பரிசோதனை மையங்களுக்கும் அவர்களுக்கும் மறைமுகத் தொடர்பு இருக்கிறது என்கிற கருத்துக்கு வலுசேர்ப்பதுபோல் அமைந்துவிடுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பிரச்சினைகளைத் தாண்டி, கரோனா தொற்றுப்பரவல் காலத்தில் கோவிட்-19 நோயாளிகளைக் கண்டறிதல், தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற பல வகைகளில் தனியார் மருத்துவமனைகள் பங்களித்துள்ளன. அதேநேரம், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டில் அரசு மருத்துவத் துறை இல்லையென்றால், நோய்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி, அரசுப் பொது மருத்துவமனைகள்வரை அடுக்குமுறையிலான சுகாதாரக் கட்டமைப்பும் நோய் கண்காணிப்பும் இருப்பதால்தான், தற்போதுள்ள நிலைக்காவது நம் நாட்டில் சுகாதாரம் பேணப்படுகிறது. கரோனா தொற்றைக் கையாள்வதில், உடல்நிலை மோசமடைந்த கரோனா நோயாளிகளை மீட்டெடுத்ததில் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை பொதுமக்கள் தரப்பில் துளிர்த்திருக்கிறது.

இந்தக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில், திட்டங்களை வகுத்து அரசு செயல்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ‘மினி கிளினிக்’ தொடங்கி அரசுப் பொது மருத்துவமனை வரையிலான மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அலோபதி மருத்துவத் துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதில் அரசு மட்டுமல்லாமல், அலோபதி மருத்துவத் துறையும் கைகோத்துச் செயல்பட்டாக வேண்டும். அப்படியில்லாதபோது, கரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் பெருமளவு மனித உயிர்களைக் காப்பாற்றுவதில், மக்களின் நம்பிக்கையின்மை மிகப் பெரிய தடைக்கல்லை ஏற்படுத்திவிடும்.

- ஆதி வள்ளியப்பன், valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x