Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM
ஒரு கலைஞர் தன்னுடைய கலையின் மூலமாக ரசிகர்களுடன் பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்தக் கலையின் பல சிறப்பான அம்சங்கள் அந்தக் கலைஞரிடம் ஏதோ ஒரே நாளில் வந்தடைந்த கண்கட்டு வித்தை அல்ல. அதற்குப் பின்னால் நிறைய வலிகள் இருக்கும்... கோபங்கள் இருக்கும்... பயிற்சிகள் இருக்கும்... அவமானங்கள் இருக்கும்... எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்... ஏக்கங்கள் இருக்கும். ‘கலைப் பயணத்தில் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவருக்கான இந்த இடம் எப்படிக் கிடைத்தது?’ என்பதில் இருக்கும் சுவாரஸ்யங்களை ஒரு கலைஞரே தன்னுடைய ரசிகருக்குச் சொல்வது அலாதியான தருணம். அப்படிப்பட்ட தருணம் பெரும்பாலும் கலைஞர்களுக்கு வாய்ப்பதில்லை. கரோனா ஊரடங்கால் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ‘ஆன் தட் நோட்’ என்னும் தன்னுடைய யூடியூப் வலைதளத்தின் மூலம் தன்னுடைய இசை வாழ்வின் சுவையான பக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறார் கர்னாடக இசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியம்.
எளிமையான ஆங்கிலம்; தேவைப்படும்போது தமிழிலும் உரையாடுகிறார். நடுநடுவே இயல்பான நகைச்சுவை மின்னலாய்த் தெறிக்கிறது. உரையாடலின் வழியே தான் சந்தித்த தன்னுடைய குருமார்கள், கலைஞர்களின் ‘உடல்மொழி’யோடு அவர்களின் பேச்சை ‘மிமிக்ரி’யும் செய்கிறார். மூன்று நிமிடக் காணொளியில், ராகத்தின் ஆலாபனை அல்லது பாடலின் ஒரு வரியைப் பாடிவிட்டு, அதற்குப் பின்னணியில் தன்னுடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைச் சடுதியில் சொல்லிவிடுகிறார். சஞ்சய் என்னும் கதைசொல்லியின் நேர்த்தியானது காணொளி நறுக்குகளைப் பளிச்சென்று மனத்தில் பதிய வைக்கிறது.
“35 ஆண்டுகளாக நான் மேடைக் கலைஞன். மேடைக் கச்சேரிகள் செய்வதுதான் என்னுடைய பிரதான தொழிலாக இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டாக அதற்கு வழி இல்லாமல் இருக்கிறது. அதனால், மக்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால், சமூக வலைதளங்களில் என்னுடைய பழைய கச்சேரிகளின் பதிவுகளைப் பதிவிடுவது போன்றவற்றைக் கடந்த ஆண்டிலிருந்து செய்துகொண்டிருந்தோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய மனைவி ஆர்த்தி, நான் பாடும் கச்சேரிகளை அவரே நேரடியாக வீடியோ பதிவுசெய்துவந்தார். அதிலிருந்துதான் மேற்சொன்ன வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றிவந்தோம். அதோடு, டிஜிட்டல் வடிவில் கச்சேரிகளை ‘சஞ்சய் சபா’ என்னும் வலைதளம் வழியாகவும் நடத்திவருகிறேன். தமிழ்ப் புத்தாண்டில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் ‘தமிழன் என்றொரு இனம் உண்டு’ பாடலைப் பாடி, அதை வித்தியாசமான காட்சிப் பதிவுகளுடன் வெளியிட்டோம்” என்கிறார் சஞ்சய்.
இதன் உருவாக்கத்தின்போது அவர் பேசிய இசை தொடர்பான தகவல்களைக் கவனித்த ‘எட்ஜ் டிசைன் ஹவுஸ்’ பார்கவி, இந்த இசைத் துணுக்குகளையே இரண்டு நிமிடக் காணொளியாகப் பதிவேற்றலாம் என்றும், அவை ரசிகர்களிடையே மிகுந்த கவனிப்பைப் பெறும் என்றும் யோசனை சொல்லியிருக்கிறார். “முதலில் கேமராவைப் பார்த்துப் பேசுவதில் எனக்குச் சிறிது தயக்கம் இருந்தது. அதன் பின் பழகிவிட்டது. கரோனா ஊரடங்கு என்னுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை. என்னுடைய இந்தப் புத்தக வாசிப்பில் நான் படித்த விஷயங்கள் சமயத்தில், இந்த வீடியோ பதிவுகளிலும் பொருத்தமான இடங்களில் எட்டிப் பார்க்கின்றன. இதையும் ஒரு மகிழ்ச்சியான விஷயமாகத்தான் பார்க்கிறேன். ஒவ்வொரு ராகத்திலும் ஸ்வரங்கள் இருக்கும். ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் ஒரு நினைவு இருக்கும். அந்த நினைவுக்கு ஒரு கதை இருக்கும். இந்த ‘ஆன் தட் நோட்’ அதுபோன்ற இசைக் கதைகளின் தொகுப்புதான்” என்கிறார் சஞ்சய்.
“நாம் எல்லோருமே கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள். நம் எல்லோருக்குமே கதைகள் கேட்பதற்கு எப்போதும் பிடிக்கும். அந்த அடிப்படையில் உதயமானதுதான் இந்த ‘ஆன் தட் நோட்’ பதிவுகள். சஞ்சய் – ஆர்த்தி மிகவும் நேர்மறையான தம்பதி. அவரிடமிருந்து வெகு இயல்பாக வெளிப்படும் இசைத் துணுக்குகள் ஒரு சிறுகதையாக என்னை வசீகரித்தது. ஒவ்வொரு சம்பவமும் அவரின் இசைப் பயணத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதையும் உணர்ந்தேன். இந்த விஷயங்களெல்லாம் அடுத்துவரும் தலைமுறைக்கு இந்த இசைத் துறையில் சாதிப்பதற்குப் பெரும் உதவியாக இருக்கும். அதனால்தான் இதை மக்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் உரிய வகையில் சுவாரஸ்யமான நறுக்குகளாக வழங்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு தகவலுக்குமான ‘ஸ்டோரி போர்டை’ உண்டாக்குவதுதான் என்னுடைய வேலை. அதோடு பதிவும் செய்கிறேன். கதைசொல்லியாக இருப்பது சஞ்சய் அண்ணாதான்!” என்கிறார் பார்கவி மணி.
நாகசுர வித்வான் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன் குறித்து சஞ்சய் பேசும் காணொளி: https://www.youtube.com/watch?v=4hOzl30NIq8
- வா.ரவிக்குமார், தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT