Published : 14 Dec 2015 09:52 AM
Last Updated : 14 Dec 2015 09:52 AM
*
சென்னையில் மழை வெள்ளம் வடிந்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக ‘தி இந்து’ நிவாரண முகாமில் தன் குடும்பத்தை மறந்து நிவாரண முகாம் பணிகளில் மூழ்கியிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ‘ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை காண்…’ என்று மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, நிவாரண முகாமில் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் அதிகம்தான்.
உண்மையான ஜெர்னலிசம்
‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாமில் தரமணி ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக காலை முதல் இரவு வரை தன்னார்வலர்களாக செயல்பட்டனர். அக்கல்லூரியின் ஆராய்ச்சி மாணவி அலமு தலைமையில் வந்த 30-க்கும் மேற்பட்ட ஜர்னலிசம் மாணவர்களில் முக்கால்வாசிப்பேர் வடஇந்தியர்கள். இவர்களுக்கு முழுமையாக தமிழ் பேசத் தெரியாது. பொருட்களைத் தூக்கி வருவது, தரம் பிரிப்பது, கணக்கெடுப்பது, பாக்கெட் போடுவது, கடைசியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே நேரில் சென்று கொடுத்து வருவதென பம்பரமாய் சுற்றி வருகின்றனர்.
ரஷ்மிகா (ஜார்கண்ட்), ஜான் (உத்தரப் பிரதேசம்), விஷ்ணு (கேரளா), இப்ரார், ஆப்ரா (மேற்கு வங்கம்), யஷ்சஸ்வானி (ஹரியாணா) ஆகியோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை வந்து ஜர்னலிசம் படிக்கிறவர்கள்.
“பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மீடியாக்கள் பெரிதும் உதவின. இப்போது நாங்களும் ‘தி இந்து’ வுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதை எங்களின் கடமையாக நினைக்கிறோம். தமிழ்ப் பேச முடியவில்லை என்றாலும் மக்கள் படும் கஷ்டத்தை நிதர்சனமாக உணர்ந்துள்ளோம். சொல்லப்போனால் இப்போதுதான் உண்மையான ஜர்னலிசம் கற்கிறோம்…” என்றனர் நெகிழ்ச்சியுடன்.
புது நம்பிக்கை
ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல உதவி பொது மேலாளர்களான பாலு, கவிதா ஆகியோர் தலைமையில் மேலாளர் சுனில் பட்கே, லட்சுமி, பத்ரி, வினோத், ஆபா உள்ளிட்ட குழுவினர் விடுமுறை நாட்களில் ‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாமுக்கு வந்தனர்.
“பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராமபிரானுக்கு அணில் உதவுவது போல ‘தி இந்து’வுடன் இணைந்து எங்களால் முடிந்தமட்டும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். இம்முகாமுக்கு செல்கிறோம் என்றதுமே, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை நாங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்கிறோம், என்றனர். அந்தளவுக்கு ‘தி இந்து’வின் இந்த மகத்தான பணி சென்னைவாசிகளுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…” என்றனர்.
அன்னமிட்ட கை
மதியம் 2.30 மணி. நிவாரண முகாமில் பசி மறந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் தன்னார் வலர்கள். வேகமாக நிவாரண முகாம் வாசலில் வந்து நிற்கும் வண்டியில் இருந்து இரண்டு பாத்திரம் முழுக்க பிரியாணியோடு வந்திறங் கினார் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் எம்.முஹம்மது சிக்கந்தர்.
“தொண்டர்கள் மொதல்ல சாப்பிட்டுட்டு பிறகு வேலைகளைத் தொடருங்க…” என்றவர், “எங்களது கூட்டமைப்பு மூலமாக மழையால் பாதிக்கப்பட்ட சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள பகுதி களில் வசிக்கும் மக்களுக்கு சேலை, சட்டை, பெட்ஷீட், லுங்கி, பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட் களை இதுவரை 15 ஆயிரம் குடும்பங் களுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.
எம்.எஸ்.சுவாமிநாதன்
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாமுக்கு வருகை தந்து, முகாமில் நடைபெறும் பணிகளைப் பார்வையிட்டதோடு, தன்னார்வ தொண்டர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம், ‘தி இந்து’ குழும இயக்குநர்களில் ஒருவரான விஜயா அருண் ஆகியோரும் வந்திருந்தனர்.
தொடர்ந்து உதவி வரும் உள்ளங்களின் கை தூக்கலில், சென்னை வெகுவிரைவிலேயே மீண்டெழும் என்கிற திடமான நம்பிக்கை மீண்டும் உறுதியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT