Published : 15 Jun 2014 10:00 AM
Last Updated : 15 Jun 2014 10:00 AM
சீனத்தின் ‘ஆன்-லைன்’ வர்த்தக இணையதளமான டௌபௌ 2003 மே 10-ம் நாள் வியாபாரத்தைத் தொடங்கியது. ஜேக்மாவின் அலிபாபா குழுமம்தான் இந்த வர்த்தக இணையதளத்தை உருவாக்கியது.
நுகர்வோரிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது - வர்த்தகர்களிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது என்று இருவித வியாபாரத்தையும் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறது. 2013-ல் 50 கோடிப் பேர் அதனிடம் பதிவுசெய்துகொண்டுள்ளனர். தினமும் 6 கோடிப் பேர் அதனுடன் தொடர்புகொள்கின்றனர். 80 கோடிக்கும் மேற்பட்ட பொருட்களை அது பட்டியலில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 48,000 பொருட்களை விற்கிறது. நுகர்வோரிடமிருந்து நுகர்வோருக்கு விற்கும் விற்பனையில் சீனத்திலேயே 80% டௌபௌ மூலம்தான் நடக்கிறது.
வீடு தேடி வரும் சரக்கு
மா’வின் வர்த்தக சாம்ராஜ்யம் சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகிறது. வீட்டைவிட்டு வெளியே போகாமலேயே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல, வழக்கமான சில்லறை வியாபாரத்தைவிட விலை குறைவாக இருப்பதுதான் வியாபாரம் பெருக முக்கியக் காரணம். சீன நகரங்கள் அனைத்திலும், அடுக்ககங்கள் எல்லாவற்றின் முன்பும் டெலிவரிப் பையன்கள் சரக்குகளைக் கொண்டுவந்து இறக்குவதும் பணம் வாங்கிக்கொண்டு திரும்புவதுமான காட்சிகளைத் தினந்தோறும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மிகவும் வியப்பான காட்சி எதுவென்றால், பல்கலைக்கழக மைதானங்களில் காண்பதுதான். மதிய நேரம் விளையாட்டு மைதானங்களுக்கு அருகில் டௌபௌ பணியாளர்கள் பொருட்களைக் கொண்டுவந்து மலைபோலக் குவித்து விடுகின்றனர். விளையாட்டுக்குத் தேவையான பந்து, கையுறைகள், கால்காப்புகள், காலணிகள், டி-ஷர்ட்டுகள், மட்டைகள், வளைகோல்கள், உடற்பயிற்சிச் சாதனங்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், குடிநீர் போத்தல்கள் என்று கணக்கற்றவை அதிலிருக்கின்றன. கடைப் பையன்கள் அந்தப் பொருட்களுக்கு ஆர்டர் செய்த மாணவர்களின் பெயர்களைவிட, அவர்களுடைய செல்போன்களின் கடைசி நான்கு இலக்க எண்களைச் சொல்லிக் கூவுவது கண்கொள்ளாக் காட்சி. அதைக் கேட்டு அந்தந்த மாணவர்கள் அந்தந்த டெலிவரிப் பையன்களிடம் சென்று தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்கிறார்கள்.
கெட்டிக்கார யுவதிகள்
மிகப் பெரிய வணிக வளாகங்களுக்கு நவநாகரிகத்தில் ஆர்வமுள்ள பெண்கள் சென்று அந்தக் கடைகளில் விற்கும் நவீன ஆடைகளை அணிந்து பார்க்கின்றனர். அதன் விலை, ரகம், அளவு ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு, அந்தக் கடைக்காரரிடம் அப்படியே திருப்பிக்கொடுத்துவிட்டு, டௌபௌவின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு கடையைவிடக் குறைந்த விலையில் இருக்கிறதா என்று சரிபார்த்து ஆர்டர் செய்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வேண்டுமென்ற பொருட்களைப் ‘பார்த்துப் பார்த்து’ வாங்குகின்றனர்.
டௌபௌ வெற்றிகரமான நிறுவனமாகத் திகழ்ந்தாலும் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகிறது. டௌபௌ விற்பவற்றில் போலிகள், மட்டரகமானவை, திருட்டுச் சாமான்கள் இருக்கின்றன என்பவை அந்தக் குற்றச்சாட்டுகள். “போலிகளை நாங்கள் மட்டும்தான் விற்கிறோம் என்றால், எங்கள் கடைகளை இன்று இரவிலிருந்தே மூடிவிடத் தயார். சந்தையிலிருந்து போலிகள் ஒழிந்துவிடுமா?” என்று கேட்கிறார் டௌபௌ உரிமையாளர். டௌபௌ கடைகளில் மட்டும்தான் என்றில்லை, சீனத்தின் எல்லா சில்லறைக் கடைகளிலுமே இப்படிப் போலிச் சாமான்களே மலிந்துகிடப்பதால் நுகர்வோர் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் விலையை மட்டும்தான்.
நம்பிக்கையைப் பெற்றது எப்படி?
அங்கிங்கெனாதபடி எங்கும் போலிகளே விற்பனையாவது சீனத்தில் இப்போது பெரிய பிரச்சினையாகிவருகிறது. சீனப் பொருட்கள் என்றால் நம்பகத்தன்மையற்றவை என்றாகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை டௌபௌ பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அதன் உரிமையாளருடைய அலிபாபா நிறுவனம், ‘அலி-பே ஆன்-லைன் பணப்பட்டுவாடா சேவை’யை 2004-ல் தொடங்கியது. அது ‘மூன்றாவது நபர் பணப்பட்டுவாடா’ முறை. டௌபௌவில் பொருள் வாங்கினால் அலி-பே நிறுவனத்திடம் பணம் செலுத்தலாம். வாங்கிய பொருளை வீட்டில் பயன்படுத்தி திருப்தி இருந்தால், வாடிக்கையாளர் தந்த பணம் சரக்கைக் கொடுத்த நிறுவனத்திடம் தரப்படும். திருப்தி இல்லாவிட்டால், பணம் வாடிக்கையாளரிடமே திருப்பித் தரப்படும். பொருளை டௌபௌ நிறுவனம் திரும்ப எடுத்துக்கொண்டுவிடும். இந்த ஒரு நடவடிக்கையால்தான் அந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
30 கோடி வாடிக்கையாளர்கள்
அலி-பே நிறுவனத்துக்கு மட்டும் 30 கோடி வாக்காளர்கள் கணக்கு இருக்கிறது. சீனத்தின் மொத்த இணையவழி விலைசெலுத்தல் கணக்குகளில் சரிபாதி அலி-பே நிறுவனத்திடம் இருக்கிறது. இணைய நிறுவனங்களில் பொருட்கள் வாங்கினால் எப்படி இருக்குமோ, தரமாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தைப் போக்கி வியாபாரத்தை வளர்த்துக்கொண்டது அலிபாபா நிறுவனம். அதற்கு உதவியது அலி-பே.
சீன அரசின் சாமர்த்தியம்
போலிச் சரக்குகள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்குத் தங்களுடைய கொள்கைகள் காரணமல்ல, மக்களுடைய நடத்தைதான் காரணம் என்கிறது சீன அரசு.
தரக்குறைவான சாதனங்கள், போலிச் சாமான்கள் சந்தைக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையைச் செய்யத் தவறியதால், சீனச் சரக்குகள் மீது மட்டுமல்ல… சீன மக்கள் மீதும் மற்றவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே இதை அரசு தடுத்திருக்க வேண்டும். இப்போதும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது. இதனால், சீன அரசின் மீதான நம்பகத்தன்மையும் குலைந்துவிட்டது.
பொருளாதார வளர்ச்சி ஒன்றே குறி என்று கண்மூடித்தனமாகச் செயல்பட்டது அரசு. இப்போது சீன நகரங்கள் அனைத்துமே சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. இதுநாள்வரை இதைத் தடுக்காமல் கண்மூடியிருந்துவிட்டு, இப்போது தொழிற்சாலைகளைக் குற்றம்சாட்டுகிறது அரசு. தன்னுடைய கடமை, பொறுப்பு என்ன என்று வாய்திறக்காமல் இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக சீனத்தில் நடப்பவற்றைப் பார்த்தால், சீன அரசு தொடர்ச்சியாக தன்னுடைய நிலைகளை மாற்றிக்கொண்டே வந்திருப்பது நன்கு புலனாகும். நேற்றைக்கு எதை ஊக்குவிக்கிறதோ அதை இன்று இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. இன்றைக்கு எதை அடக்குகிறதோ அதை நாளை ஊக்குவிக்கவும் கூடும். இதை சீன மக்கள் இணையத்தில் விஷமமாக விமர்சித்துள்ளனர். “முதலில் சீன அரசு பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறது. அது முற்றிய பிறகு, பாலியல் தொழிலைத் தடுப்பதை ஊக்குவிக்கிறது” என்று கூறியுள்ளனர்.
இதையொட்டி எனக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது: “சீன அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை நான் அலி-பே மூலமே செலுத்துவேன். அரசின் செயல்கள் மேம்பட்டு அதில் திருப்தி ஏற்பட்டால் அந்த வரியை அரசிடம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். இல்லாவிட்டால், நான் கட்டிய வரியை என்னிடமே திருப்பித்தந்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்வேன்.”
© தி நியூயார்க டைம்ஸ், தமிழில்: சாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT