Published : 19 Dec 2015 10:39 AM
Last Updated : 19 Dec 2015 10:39 AM
தமிழகத்தின் நதிகளை இணைக்க வேண்டும் என்பது நமது நீண்ட கால நிறைவேறாத கோரிக்கை. காவிரி - குண்டாறு, தாமிரபரணி - கரு மேனியாறு - நம்பியாறு, தென்பெண்ணை - செய்யாறு ஆகிய இணைப்புத் திட்டங்கள் எல்லாம் தொங்கலில் நிற்கின்றன. எவ்வ ளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ராட்சத ரோபோக்கள், நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போதுமான நிதியும் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் நதிகளை இணைக்க முடியவில்லை. குறைந்தபட்சம் நம்மால் ஒரு ஏரியைக் கூட தூர் வார திராணியில்லை.
ஆனால், எந்த நவீன தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத 9-ம் நூற்றாண்டி லேயே நதி நீர் இணைப்பை சாத்தியப் படுத்தினார்கள் பாண்டியர்கள். அநேகமாக அதுதான் நம் நாட்டில் நடந்த முதல் நதி நீர் இணைப்பாக இருக்கலாம் என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை யின் மகேந்திரகிரி தென் பகுதியில் பறலையாறு உற்பத்தியாகிறது. இது கோதை ஆற்றுடன் இணைந்து அரபிக் கடலில் கலக்கிறது. அதே மலையின் இன்னொரு பக்கத்தில் உற்பத்தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடி தேங் காய்ப்பட்டணத்தில் கடலில் கலக்கிறது பழையாறு. பறலை ஆற்றுடன் ஒப்பிட் டால் பழையாறு மிகவும் சிறியது. நீர் வளம் குறைந்தது. கோடை காலங்களில் வறண்டுபோனது. இதனால் தோவாளை, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட நாஞ்சில் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு இல்லாமல் தவித்தனர்.
அதேசமயம் கொஞ்சம் தொலைவில் இருந்த பறலை ஆற்றில் ஆண்டு முழு வதும் தண்ணீர் ஓடி, ஏராளமான நீர் கடலில் கலந்தது. இதனால், நாஞ்சில் நாட்டு மக்கள் பறலை ஆற்று தண் ணீரை பழையாற்றுக்கு திருப்பி பாசனத் துக்கு உதவும்படி பாண்டிய மன்னன் இரண்டாம் ராஜசிம்ஹனிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கி.பி.900-ல் பழையாற்றின் குறுக்கே 20 அடி உயரத் தில் நீண்ட மலைப் பாறைகளைக் கொண்டு அணை கட்டப்பட்டது. அதே போல உயரமான பாறைக் குன்றுகளைக் குடைந்து சுமார் 2 மைல் நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டது.
இந்தக் கால்வாய் மூலம் பறலை ஆற்றில் இருந்து பழையாற்றுக்குத் தண்ணீர் வந்து சேர்ந்தது. இன்றும் வருகிறது. ஒரு ஆற்று வழி நீர் நிலப்பரப்பில் இருந்து மற்றொரு ஆற்று வழி நீர் நிலப்பரப்புக்கு நீர் பரிமாற்றம் (Inter basin transfer of water) செய்யப்பட்ட முதல் திட்டம் இது. திருவிதாங்கூர் ஆவண அறிக்கையில் இதுகுறித்த குறிப்பு கள் இருக்கின்றன. இந்த நதிகளை இணைத்தப் பின்புதான் நாஞ்சில் நாடு செழித்தது.
நாஞ்சில் நாடு செழித்ததைக் கண்ட விளவங்கோடு, கல்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கும் இப்படி ஒரு புதிய அணை வேண்டும் என்று திருவிதாங்கூர் மன்னர் முதலாம் மார்த்தாண்ட வர்மனிடம் கேட்ட னர். அதன்படி கி.பி.1750-ம் ஆண்டு பாண்டியன் அணைக்குக் கீழே 460 மீட்டர் தள்ளி சரிவான பகுதியில் ஆற்றில் குறுக்கே 6 அடி முதல் 30 அடி வரை கற்சுவர்கள் எழுப்பப்பட்டு புதிய அணை கட்டப்பட்டது. அதுதான் புத்தன் (புதிய) அணை. இன்னும் சிலர் அங்கிருந்த பாண்டியன் அணையின் தடுப்பணை ஒன்றை மேம்படுத்திக் கட்டப்பட்டதுதான் புத்தன் அணை என்றும் கூறுகின்றனர்.
புத்தன் அணையில் இருந்து பத்ம நாபபுரம் - புத்தனாறு கால்வாய் 19 மைல் தூரம் வெட்டப்பட்டது. தொழில்நுட்பச் சிறப்புவாய்ந்தக் கால்வாய் இது. நீரியல் நிபுணர்களான ச.மா.ரத்தினவேல் மற்றும் கள்ளபிரான் ஆகியோர் இதைப் பற்றி குறிப்பிடும்போது, “கடினமானதும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டது மான இந்த மனித முயற்சி ஆச்சர்யம் தருகிறது. சில இடங்களில் இந்தக் கால் வாயின் தரைமட்டம் அங்குள்ள பூமியின் மட்டத்தை விட 10 அடி உயரமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவைப்படும் உயரத்துக்கு மண் கரை எழுப்பி அதில் கால்வாய் எடுத்துச் செல்லப்படுகிறது” என்கின்றனர்.
தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பாசனப் பொறியாளராக பணியாற்றிவர் ஹார்ஸ்லி. ஆங்கிலேயரான இவர் மேற்கண்ட பாசனக் கட்டமைப்புகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கட்டமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, “மற்ற நாடு களிலும் இந்தியாவிலும் பெரும் பாசனத் திட்டங்களை உருவாக்கும் பொறி யாளர்கள், தாங்கள் அமைத்த கட்டு மானங்கள் வெற்றி பெற்றதற்கு தங்களது திறமையும் விடாமுயற்சியும் தான் காரணம் என்று பெருமைப்படு வார்கள். ஆனால், நான் தயக்கமின்றிச் சொல்வேன், பாண்டியன் வாய்க் கால், பத்மநாபபுரம், புத்தனார் வாய்க் கால்களை உருவாக்கியவர்களின் தொழில்நுட்பம் பிரமிக்க வைக்கிறது. தொழில்நுட்பத்தில் அவர்கள் வழியை பின்பற்றுவது கலப்பில்லாத மகிழ்ச் சியைத் தருகிறது. இவர்களே எனது பாசனத் தொழில்நுட்ப ஆசான்கள். இவர்களின் பாசனக் கட்டமைப்புகளில் நான் வேலை செய்வதில் மனநிறைவு கொள்கிறேன்” என்று பதிவு செய்கிறார் (திருவிதாங்கூர் இரண்டாம் பாகம், ஏ.அப்பாதுரை).
இந்த அணைகளைத் தொடர்ந்து பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் வேணாடு மன்னர்கள் காலத்திலும் பழை யாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. விளாவடிக்கால் அணைக்கட்டுக்கு கீழே வீரப்புலி அணைக்கட்டு, குட்டி அணைக் கட்டு, பள்ளிகொண்டான் அணைக் கட்டு, சாட்டுப்புதூர் அணைக் கட்டு, செட்டித்தோப்பு அணைக்கட்டு, வீர நாராயணமங்கலம் அணைக்கட்டு, சபரி அணைக்கட்டு, குமரி அணைக்கட்டு, சோழந்திட்டை அணைக்கட்டு, பிள்ளை பெத்தான் அணைக்கட்டு, மிஷன் அணைக்கட்டு, மணக்குடி காயல் அணைக்கட்டு உட்பட 13 தடுப்பணை கள் கட்டப்பட்டன. இன்றும் குமரி மாவட்டத்தின் பாசனத்துக்குக் குடிநீர் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக் கின்றன அந்த அணைகள். இந்த அணைகள் அத்தனையுமே பெரும் கற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அமைக்கப்பட்டன. பாறைகளை இணைப்புப் பகுதியில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்டது. மன்னர்கள் காலங்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த அணைகளில் கொல்லர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்கள் என் கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய் வாளர் அ.கா.பெருமாள்.
சமீபத்தில் இந்தத் தடுப்பணை களுக்குச் சென்றபோது “30 வருஷமா இந்தக் காட்டு வெள்ளத்துல தனியாளா வேலை பாக்குறேன். சம்பளமும் ஏத்தலை, பர்மனென்டும் பண்ணலை” என்கிறார் பொதுப்பணித்துறையின் பணியாளர் ஒருவர். நீர்நிலைகள் மீது அரசு காட்டும் அக்கறைக்கு ஓர் உதாரணம் அவர்!
(நீர் அடிக்கும்)
தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் குறித்த சரியான கல்வெட்டு குறிப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அவை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அந்தத் தடுப்பணைகள் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிவிக்கிறார் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மருதூர் அணையின் பாசன உரிமைதாரருமான அ.வியனரசு.
அவர் கூறும்போது, “ஆராய்ச்சிப் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் எழுதிய ‘பாண்டியர் வரலாறு’, பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணி எழுதிய ‘பாண்டியர் வரலாறு’, கு.செந்தில் மள்ளர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ ஆகிய மூன்று நூல்களின் குறிப்புகளின்படி கி.பி.1352 முதல் கி.பி.1748 வரை தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு பிற்காலப் பாண்டியர்கள் 14 பேர் ஆட்சி புரிந்தார்கள்.
தாமிரபரணி ஆற்றில் அரியநாயகபுரம் அணை மட்டுமே பாண்டியர்களால் கட்டப்படவில்லை. மற்ற அணைகள் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பராக்கிரம குலசேகரப் பாண்டியன், ஆகவராமப் பாண்டியன், சடையவர்மன் சிவல்லப் பாண்டியன் அல்லது சடையவர்மன் பராக்கிரம குலசேகரப் பாண்டியன் ஆகியோரால் கட்டப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT