Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்கப்படவிருக்கிறது. சென்ற ஆண்டில், வழக்கமான அளவை விடவும் காவிரிப் படுகையில் குறுவை சாகுபடியின் பரப்பு 37% அதிகரித்ததற்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் ஒரு முக்கியக் காரணம்.
இவ்வளவுக்கும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை விடவும் குறைவான அளவில்தான் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு நீர்ப் பங்கீட்டைச் செய்தது. ஜூனில் 9.19 டிஎம்சி குறைவாகவும் ஜூலையில் 31.25 டிஎம்சி குறைவாகவும் காவிரி நீரை கர்நாடகம் வழங்கியது. அதற்கிடையில், கொட்டித் தீர்த்த தென்மேற்குப் பருவ மழையால் கர்நாடக அணைகள் கொள்ளளவை எட்டியதாலேயே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வந்துசேர்ந்தது. ஆனாலும்கூட, தமிழ்நாட்டில் ஏராளமான உபரி நீர் இருப்பதைப் போன்ற ஒரு மாயையை முந்தைய அரசு ஏற்படுத்திவிட்டது.
தமிழகத்தில் பயிர் செய்திட ஏற்ற நிலப்பரப்பு 83,33,583 ஹெக்டேர் என்றும் அதில் பாசனம் செய்யப்படும் நிலப்பரப்பு 28,73,197 ஹெக்டேர் மட்டுமே என்றும் ஒரு கணக்கீடு கூறுகிறது. மீதமுள்ள 54,60,386 ஹெக்டேர் நிலம் மானாவாரியாக, தரிசாக, மேய்ச்சல் தரையாக பாசன வசதியின்றி உள்ளது. ஏற்கெனவே உள்ள இந்த நிலப்பரப்புக்கே தண்ணீர் இல்லை என்ற சூழலில், புதிதாக 100 ஏரிகளை வெட்டி 4,238 ஏக்கருக்குப் பாசன வசதி செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாசனப்பரப்பை உருவாக்குவதில் ஆய்வு, திட்டமிடல், வடிவமைத்தல், செயலாக்கம் ஆகியவை அடிப்படை அம்சங்களாகும். முதல் மூன்றும் இருந்தால்தானே நிறைவேற்றுதல் என்கிற செயல்திட்டத்துக்குப் போக முடியும்?
1924-ல் மைசூர், சென்னை அரசுகளிடையே காவிரிப் பாசனம் குறித்து ஒப்பந்தம் உருவானது. அதன்படி மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது. ஒப்பந்தப்படி கல்லணைக் கால்வாயின் நீர்ப் பாசனப் பகுதி 3,01,000 ஏக்கர். கல்லணையிலிருந்து 2,56,000 ஏக்கர் பாசனப் பரப்பை ஏற்படுத்த முடிந்தது. எஞ்சிய 45,000 ஏக்கருக்குப் புதிய பாசனப் பரப்பு தேடப்பட்டது. சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் வாய்க்கால் எடுத்து அதன் கிழக்கு, மேற்குக் கரைகளில் கிளை வாய்க்கால்களை உருவாக்கிப் பாசனப் பரப்பு ஏற்படுத்தப்பட்டது. இவற்றுக்கு ஆகஸ்ட்டில் தண்ணீர் திறந்து டிசம்பர் 15 வரை தண்ணீர் விடும் முறை பின்பற்றப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. கடைமடைக்குத் தண்ணீர் கிடைக்காவிடினும் இப்பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கச் சிறப்பு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன.
உள்ளிருந்து புகையும் நெருப்பு
நூறு ஏரிகளை இணைக்கும் காவிரி சரபங்கா திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால் அது சேலம், ஈரோடு மாவட்டங்களை நெற்களஞ்சியங்களாக மாற்றுவதுபோல் தெரியும். ஆனால், களநிலவரம் அதுவல்ல என்பதை அங்கிருந்து புகையும் எதிர்ப்புகளே காட்டுகின்றன. சேலம் மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில் 33 ஊராட்சிகள் இந்தத் திட்டத்தில் பயனடையும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டாலும் கடைசியில் பயன்பெறும் 4,238 ஏக்கரில் 2,663 ஏக்கர் நிலம் இரண்டு ஒன்றியங்களை மட்டுமே சேர்ந்தவை. இது உபரி நீர்த் திட்டம் அல்ல, பெருவிவசாயிகள் சிலரின் நிலங்களுக்கு நீரேற்றும் திட்டம் என்றும் விவசாயிகளால் ஆட்சேபிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்கும் கன்னப்பள்ளி கிராமத்தைத் தவிர்த்துவிட்டு, அக்கிராமத்தின் வழியே அருகிலுள்ள கிராமங்களுக்கு அதிக குதிரைத் திறனுள்ள மின்மோட்டார்கள் மூலமாகவும் 16 அங்குலம் விட்டம் உடைய பெரிய குழாய்களை நிலத்தில் பதித்தும் காவிரி நீர் கொண்டுசெல்லப்படுவதாக அவ்வூர் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். கடைமடைக்கும் மேலேயே ஒரு ‘சூப்பர் கர்நாடக’ பாசனத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற கேள்விதான் கடைசியில் எழுகிறது. இது தமிழக பாசன மரபுக்கு எதிரானது. “காலுக்கு மேல் கால் கல்லலாகாது” என்கிறது ஸ்ரீ வல்லப பாண்டியனின் குருவித்துறைப் பெருமாள் கோயில் கல்வெட்டு. ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல்பகுதியில் புதிதாக வாய்க்கால் வெட்டக் கூடாது என்பது இதன் பொருள்.
பலனளிக்காத அறிவிப்புகள்
காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தாலும்கூட விளைநிலங்களின் மண் வளத்துக்குக் கேடுதரும் இதர தொழில்களுக்கான அனுமதி தொடரவே செய்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் பூமிக்கு அடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் எரிவாயுவுடன் சிலிக்கான் மணலை மூலப்பொருளாகக் கொண்டு சோடியம் சிலிகேட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயங்குகின்றன. இவற்றால் காற்றில் பரவும் நச்சு கலந்த ரசாயனங்கள், நெல் உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பாதிக்கிறது. வேளாண் மண்டலத்துக்கு வெளியிலும்கூட இந்தத் தொழிலை நடத்தலாம். ஆனால், எல்லா இடங்களிலும் நெல்லை விளைய வைக்க முடியாது அல்லவா?
காவிரியில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. சந்தேகமே இல்லை. ஆனால், எல்லா ஆண்டுகளிலும் இதே நிலையை எதிர்பார்க்க முடியாது. ஜூன் 12-ல் மேட்டூரில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாதபோது, ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பித்தான் விவசாயிகள் நெல் சாகுபடியைத் தொடங்க வேண்டும். ஆனால், ஆற்றங்கரையோரம் உள்ள ஆழ்குழாய்களில் மின்மோட்டார் அமைப்பதற்கு அனுமதி பெற முடியாத நிலையே இன்னும் நீடிக்கிறது. தமிழக அரசின் அரசாணை எண் 2522, பொதுப்பணித்துறை 04.09.65 என்பது ஆற்றிலிருந்து 2 பர்லாங் கடந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கு மட்டுமே மின்மோட்டார்களை அனுமதிக்கிறது.
உண்மையில், கடைமடையில் ஓடுகிற காவிரி ஆறு என்பது வாய்க்கால்தான். அதிலிருந்து கிளைபிரிந்து ஓடும் கிளைவாய்க்காலையும்கூட ஆறு என்று சொல்லி மின்மோட்டார்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தவிர, அனுமதிக்கப்பட்ட தொலைவுக்குள் மின்மோட்டார் வசதியைப் பெறுவதற்கும்கூட கிராம அலுவலர் சான்று, பொதுப் பணித் துறையின் தடையில்லாச் சான்று, மின்சார வாரிய அதிகாரிகளின் அனுமதி என ஒவ்வொரு நிலையையும் கடப்பதற்குக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மின்மோட்டார் அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பில் நீர் வளம் மற்றும் உழவர் நலத் துறை உடனடிக் கவனம் கொடுக்க வேண்டும்.
- வெ. ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT