Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
கோவிந்த் வல்லப பந்த் மருத்துவமனை டெல்லியில் இருக்கிறது. அரசு மருத்துவமனை. 700-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்டது. 850 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள்; இவர்களில் கிட்டத்தட்ட 400 பேர் மலையாளிகள். எல்லா மலையாளிகளும் செய்கிற ஒரு காரியத்தை இவர்களும் செய்தார்கள். தங்களுக்குள் மலையாளத்தில் பேசிக்கொண்டார்கள். கடந்த சனிக்கிழமை (5.6.21) செவிலியர்களின் கண்காணிப்பாளர் இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்: 'இனிமேல் செவிலியர்கள் இந்தியிலோ ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்'.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனால், ட்விட்டருக்கு விடுமுறை இல்லை. அரசியலர்களும் துறைசார் வல்லுநர்களும் தொழிற்சங்கத்தினரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கடுமையாக எதிர்த்தவர்களில் ராகுல் காந்தியும் சசி தரூரும் இருந்தனர். முன்னவர் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். பின்னவரின் தொகுதி திருவனந்தபுரம். அன்று மாலையே கண்காணிப்பாளரின் அறிக்கையை மீளப் பெற்றது மருத்துவமனை. நிர்வாகத்தின் அனுமதியின்றி அந்த அறிக்கையைக் கண்காணிப்பாளர் சுற்றுக்கு அனுப்பிவிட்டதாக விளக்கம் அளித்தார் மருத்துவமனை இயக்குநர்.
புலம்பெயர்ந்து வாழும், பணியாற்றும் பலருக்கும் நேரும் பிரச்சினைதான் டெல்லிவாழ் கேரளச் செவிலியர்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஆனால், இதைப் பலரும் பலவிதமாக எதிர்கொள்கிறார்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து தொடங்குகிறேன்.
1995-ல் நான் ஹாங்காங்குக்குப் புலம்பெயர்ந்தேன். அப்போது நகரம் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. உள்கட்டமைப்புப் பணிகளில் நிறைய ஆங்கிலேயர்கள் பணியாற்றினார்கள். எல்லா ஆவணங்களும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் (இப்போதும் அப்படித்தான்). கூட்டங்கள் ஆங்கிலத்தில்தான் நடக்கும். 1997-ல் ஹாங்காங் சீனாவுக்குக் கைமாறியது. மெல்ல மெல்ல ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில், சில கூட்டங்களில் நான் மட்டுமே வெளிநாட்டுக்காரனாக இருந்திருக்கிறேன். அப்படியான கூட்டங்கள் மூன்று விதமாக நடந்திருக்கின்றன. முதல் வகை, மொத்தக் கூட்டமும் ஆங்கிலத்தில் நடக்கும். அடுத்த வகை, கூட்டம் முழுமைக்கும் என் பங்களிப்பு தேவையில்லை என்றால், நான் சம்பந்தப்பட்ட விஷயங்களை முதலில் ஆங்கிலத்தில் பேசி, நன்றி கூறி என்னை அனுப்பி வைத்துவிட்டுக் கூட்டத்தைத் தொடர்ந்து சீனத்தில் நடத்துவார்கள். மூன்றாவது வகை, என்னிடம் கேட்டுக்கொண்டு கூட்டத்தைச் சீனத்தில் நடத்துவார்கள், நான் சம்பந்தப்பட்ட அம்சங்களைப் பேசும்போது ஆங்கிலத்துக்குத் தாவிவிடுவார்கள்.
ஒரு முறை, என் மகளின் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்குப் போயிருந்தோம். விருந்தினர்களில் ஒருவர், அரசுச் செயலர், சீனத்தில் பேசத் தொடங்கிவிட்டார். பள்ளி நிர்வாகம் இதை எதிர்பார்க்கவில்லை. சுமார் 100 பெற்றோர்கள் அந்த அரங்கில் இருந்திருப்போம். வெளிநாட்டுப் பெற்றோர் ஏழெட்டுப் பேர் இருக்கலாம். யார் யாரிடம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. வெளிநாட்டுப் பெற்றோர் ஒவ்வொருவரின் பின்னாலும் ஓர் ஆசிரியை வந்து அமர்ந்துகொண்டார்; செயலரின் பேச்சைச் சன்னமான குரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். செயலரின் பேச்சு அப்படியொன்றும் முக்கியமானதாக இல்லை. ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகத்தின் பண்பாடு என்னை வியக்கவைத்தது.
இதற்கு நேர் எதிரான அனுபவம் எனக்கு டெல்லியில் பத்து ஆண்டுகளுக்கு முன் வாய்த்தது. உள்கட்டமைப்புத் திட்டமொன்று தொடர்பான கூட்டம். தலைவர் இந்தியில் பேசத் தொடங்கினார். நான் பணிவான குரலில் எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னேன். கூட்டத்தில் சிலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஆனாலும் ஆங்கிலத்துக்கு மாறிக்கொண்டார்கள். அடுத்த மாதம், அதே கூட்டம், மீண்டும் இந்தியில் தொடங்கினார்கள். நான் மீண்டும் அலைவரிசையை மாற்ற வேண்டியிருந்தது. பல மொழிகள் பேசுகிறவர்களுக்கு இடையில் ஒரு சம நிலையைப் பேணுவது அதிதிகளுக்கு அவசியமானது.
இந்த அனுபவங்கள், சென்னை உள்கட்ட மைப்புத் திட்டமொன்றில் பணியாற்றும்போது எனக்குக் கைகொடுத்தது. திட்டத்தில் பலமாநிலத்தவர்களும் பல நாட்டினரும் பங்காற்றினார்கள். இளம் பொறியாளர்களில் கணிசமான தமிழர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலருக்குத்தமிழில் பேசுவது வசதியாக இருந்தது. பணித்தளத்திலோ அலுவலகத்திலோ கூட்டத்திலோ உரையாடுகிறபோது சுற்றியிருக்கும் அனைவரும் தமிழர்களாக இருந்தால் நானும் அந்த உரையாடலில் தமிழில் கலந்துகொள்வேன். அந்தக் குழுவில் தமிழ் அறியாதவர் ஒருவரேனும் இருந்தால், தமிழில் பேச முற்படும் இளம் பொறியாளர்களை ஆங்கிலத்தில் பேசுமாறு அறிவுறுத்துவேன்.
இந்தப் பிரச்சினையில் கேரளர்களின் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு மலையாளிகள் கேரளத்துக்கு வெளியே சந்தித்துக்கொள்கிற தருணம் அவர்களுக்குப் பெரு மகிழ்வைத் தரக்கூடியது. அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களது உரையாடலில் தவிர்க்க முடியாமல் இடம் பெறுகிற கேள்வி இது: ‘மலையாளியானோ? எவிடெ வீடு?’
தமிழர்களைப் பற்றி அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் திரைப்பட இயக்குநராக முயன்றுகொண்டிருப்பார். அவர் பேசுகிற ஒரு வசனம் பிரபலமானது. இதை அவர் ஆங்கிலத்தில்தான் சொல்வார்: 'நாங்கள் தமிழ்ப் படங்களைப் பார்க்க மாட்டோம். ஆங்கிலப் படங்களை மட்டும்தான் பார்ப்போம்'. நாகேஷைப் போலவே இங்கேயுள்ள நகர வாழ் மேட்டுக்குடித் தமிழர்கள் பலரும் தமக்குள்ளே ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள். அதுதான் பெருமை என்றொரு எண்ணம் அவர்கள் மனதில் ஊறிக்கிடக்கிறது. ஆனால், கேரளத்துக்கு வெளியில் இரண்டு மலையாளிகள் சந்தித்தால், அவர்கள் தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவது அபூர்வம்.
இந்தப் பின்னணியில்தான் டெல்லியில் உள்ள கேரளச் செவிலியர்கள் தங்களுக்குள் மலையாளத்தில் பேசிக்கொண்டதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. அறிவுரையாக அல்ல, ஓர் அனுபவக் கூற்றாக... மலையாளம் உங்கள் தாய்மொழி. அதை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதைப் பேசாதீர்கள் என்று உங்களை யாரும் சொல்லிவிட முடியாது. அதை நீங்கள் அனுமதிக்கவும் மாட்டீர்கள். பணியிடத்தில் உங்களுக்குள் மலையாளத்தில் பேசிக்கொள்வது இயல்பானது. அதே வேளையில், நீங்கள் பணியாற்றுவது டெல்லியில். நீங்கள் மலையாளத்தில் பேசிக்கொள்ளும்போது உங்களுக்கு அருகில் மலையாளம் அறியாத நோயாளியோ, வேறு செவிலியரோ, பணியாளரோ இருந்தால், அவர்கள் உங்கள் உரையாடலில் பங்கெடுக்கவில்லை என்றாலும்கூட, மலையாளத்தில் பேசாதீர்கள். அது ஒருவிதமான பண்பாடு.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT