Published : 10 Dec 2015 08:53 AM
Last Updated : 10 Dec 2015 08:53 AM
பஞ்சாங்கத்தைப் புரட்டினால் அஸ்வினி, பரணி, . . என்று தொடங்கி 27 நட்சத்திரங்களின் பெயர்கள் போடப்பட்டிருக்கும். இந்த 27 நட்சத்திரங்கள்தான் வானில் இருக்கின்றனவா? இரவில் வானைப் பார்த்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிகின்றனவே என்று கேட்கலாம்.
சூரியன் உதித்தது முதல் அஸ்தமிக்கின்ற வரையில் அது தினமும் வானில் பயணிக்கின்ற பாதை என ஒன்று உள்ளது. வானில் இந்தப் பாதையில்தான் குரு (வியாழன்) பெயர்ச்சியும் சனிப் பெயர்ச்சியும் நிகழ்கின்றன. இந்தப் பாதையில்தான் மற்ற கிரகங்கள் நகர்ந்து செல்கின்றன. 12 ராசிகளும்
இந்தப் பாதையில்தான் உள்ளன. அந்தக் காலத்தில் ஜோசிய சாஸ்திர வல்லுநர்கள் அந்தப் பாதையில் இருக்கின்ற நட்சத்திரங்களை மட்டும் கணக்கில்கொண்டு இவ்விதம் 27 நட்சத்திரங்களின் பட்டியலைத் தயாரித்தனர். மற்றபடி வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன.
இரட்டை நட்சத்திரங்கள்
நமது சூரிய மண்டலத்துக்குள் சூரியன் என்கிற ஒரே ஒரு நட்சத்திரம்தான் உள்ளது. நல்ல வேளை. சூரியனுக்குப் பக்கத்திலேயே இன்னொரு நட்சத்திரம் இருந்திருக்குமேயானால் பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் இந்த இரண்டு நட்சத்திரங்களையும் சேர்த்து எப்படிச் சுற்றுவது என்று திண்டாடியிருக்கும்.
வானில் இரட்டை நட்சத்திரங்கள் நிறையவே இருக்கின்றன. உண்மையில் சூரியன் போன்று ஒண்டிக்கட்டை நட்சத்திரங்கள் மிக அபூர்வமே. ஒரு காலத்தில் ஒண்டிக்கட்டை நட்சத்திரத்துக்குத்தான் கிரகங்கள் இருக்கும் என்றும் இரட்டை நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றிராது என்றும் கருதப்பட்டது. ஆனால், தற்போது கிரகங்களைப் பெற்றுள்ள இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் ஒண்டிக்கட்டை நட்சத்திரம்தான் பூமி மாதிரியான கிரகத்தைப் பெற்றிருக்க முடியும்.
பூமி போன்ற கிரகத்தைப் பெற்றுள்ள வேறு ஒண்டிக்கட்டை நட்சத்திரங்கள் எங்கே உள்ளன என்று தேடுவதற்கு வானில் நிறையவே இடம் இருக்கிறது.
சூரிய மண்டலத்தின் எல்லை என்பது சுமார் 1,800 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. அதற்கு அப்பால் உள்ள இடம் அண்டவெளி ஆகும். சூரியன் மாதிரியான நட்சத்திரங்களைத் தேட வேண்டிய பிராந்தியம் இதுதான். அண்டவெளி என்பது என்ன?
கோடானு கோடி கிரகங்கள்
சென்னை நகரில் எண்ணற்ற கட்டிடங்கள் உள்ளன. அது மாதிரியில் எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்டது அண்டம் ஆகும். நமது சூரியன் அடங்கிய அண்டத்துக்கு ஆகாய கங்கை என்று பெயர். ஆகாய கங்கை அண்டத்தில் சூரியன் உட்படக் குறைந்தது 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நமது அண்டத்தில் மட்டும் நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பூமி மாதிரியான கிரகங்களின் எண்ணிக்கை 1,100 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அதாவது, இவை உயிரின வாய்ப்பு கொண்டவை. சிவப்புக் குள்ளன் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டால் பூமி மாதிரி கிரகங்கள் 4,000 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரபஞ்ச வெளியில் நமது அண்டம்போல 10 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி அண்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு அண்டத்திலும் நமது அண்டத்தில் உள்ளதுபோலவே கிரகங்கள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆகவே, நமது பிரபஞ்சம் முழுவதிலும் பூமி போன்று கோடானு கோடி கிரகங்கள் உள்ளன. எனவே, எங்கோ இருக்கின்ற வேறு பூமியில் அல்லது பூமிகளில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம்.
இதற்கிடையே ஆராய்ச்சியாளர்கள் பூமி சைஸில் எங்கோ ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கிரகம் சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தை உகந்த தூரத்தில் அமைந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த சிவப்புக் குள்ளன் நட்சத்திரம் சூரியன் சைஸில் பாதிதான் உள்ளது.
கெப்ளர்–186 எப்
கெப்ளர் எனப்படும் பறக்கும் டெலஸ்கோப் மேற்படி கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. அந்தக் கிரகத்துக்கு கெப்ளர்-186 எப் என்று பெயர் வைத்துள்ளனர். அந்தக் கிரகம் பாறைகளால் ஆனது. அதில் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வானில் பூமி சைஸில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்தக் கிரகம் குறித்து மேற்கொண்டு எந்தத் தகவலும் பெற முடியவில்லை. கெப்ளர் டெலஸ்கோப் கடந்த 2009-ம்
ஆண்டிலிருந்து கிரக வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகும். கெப்ளரின் வேட்டை பற்றி பின்னர் விரிவாகக் கவனிப்போம்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘இன்னொரு பூமி’ விஷயத்தில் உள்ள ஒரு பிரச்சினை, அது பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது என்பதாகும். இங்கு நாம் ஒளியாண்டு என்றால் என்ன என்பதை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.
ஒளியாண்டு தூரம்
ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். சின்ன ஊர்களில் சைக்கிள் கடை எங்கிருக்கிறது என்று கேட்டால் ‘‘இங்கிருந்து கூப்பிடு தூரம்” என்பார்கள். உரக்கக் கூப்பிட்டால் காதில் விழுகிற தூரம் என்பது அதன் பொருள். அதாவது, தூரத்தை நேரமாக மாற்றிக் கூறுவார்கள். ஏதோ ஒரு ஊர் உள்ள தூரத்தைக் குறிப்பிடும்போது ராத்திரி ரயில் ஏறினால் காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பார்கள். இப்படிச் சொல்லும்போது அடுத்தவர் நன்கு புரிந்துகொண்டுவிடுவாரே தவிர, எவ்வளவு தூரம் என்பதை கி.மீட்டரில் சொல்லுங்கள் என்று கேட்க மாட்டார். ஒளியாண்டு அது மாதிரியானதே.
ஒளியானது ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி. மீ. தூரத்தைக் கடந்துவிடும். இதுவே ஒளி வேகம் ஆகும். ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பி ஓராண்டு காலத்துக்குப் பிறகு இன்னோர் இடத்தை அடைவதாக இருந்தால், எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அதுவே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த அளவில் ஒளியாண்டு தொலைவு என்பது சுமார் 9,46,000 கோடி கி.மீ. ஆகும். இதை 500 ஆல் பெருக்கிக்கொள்ளுங்கள். கெப்ளர்-186 எப் கிரகம் அந்த அளவு தூரத்தில் உள்ளது.
மேற்படி கிரகம் உள்ள தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்ல முற்பட்டால் யாருக்கும் புரியாது.
பேண்ட் தைக்க ஜவுளிக் கடையில் துணி எடுக்கும் இளைஞர் இவ்வளவு மீட்டர் வேண்டும் என்று கூறுவார். பிளவுஸ் தைக்கத் துணி எடுக்கும் பெண்மணி எவ்வளவு துணி வேண்டும் என்பதை செ.மீ-ல் கூறுவார். இந்த இருவருமே எவ்வளவு துணி வேண்டும் என்பதை மி.மீ-ல் கூற மாட்டார்கள்.
நட்சத்திரங்கள் அனைத்துமே மிகமிகத் தொலைவில் உள்ளதால் எந்த நட்சத்திரமானாலும் அதற்குள்ள தூரத்தை ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர். பல ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்குக் கிரகங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க இயலுமா என்று கேட்கலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அப்படிக் கண்டுபிடிக்கின்ற கிரகத்துக்குக் காற்று மண்டலம் இருக்கிறதா என்பதையும் விரைவில் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் அந்தக் காற்று மண்டலத்தை இங்கிருந்தபடி ஆராய முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆராய்ச்சித் துறையில் அந்த அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. எல்லாம் சமீப ஆண்டுகளில்தான்.
ஆனால், வேற்றுலகவாசிகள் இருக்கிறார்களா என்ற தேடல் கடந்த நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
(வியாழன்தோறும் தொடர்வோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT