Last Updated : 07 Jun, 2021 03:12 AM

33  

Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

எழுத்தாளர்களுக்கென கிராமங்களை உருவாக்குவோம்!

நெ ல்லையில் 2020-ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற திருநெல்வேலி எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மரியாதை செய்யப்பட்டது. உயிருடன் இல்லாத எழுத்தாளர் என்றாலும், அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளர்களைப் பற்றிய காணொளிக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மேடைக்கு வந்து புத்தாடை அளித்து நினைவுப் பரிசு வழங்கினார். இதோடு வாசிப்பு, ரசனை, நூல்நயம், இலக்கிய விசாரணை எனச் செயல்படும் பலரும் மேடையேற்றப்பட்டார்கள். அந்த வகையில், நெல்லை புத்தகத் திருவிழாவானது இலக்கியர்களின் கொண்டாட்டமாக மாறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் என்ற வகையில் அப்போது நானும் மேடையேறினேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் நிரம்பிய இந்த மாவட்டத்தில் ‘எழுத்தாளர் கிராமம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். நெல்லை புத்தகத் திருவிழா நடந்த விதம் பற்றிப் பாராட்டித் தலையங்கம் எழுதிய ‘இந்து தமிழ்’ நாளிதழ், அதில் எனது கோரிக்கையையும் குறிப்பிட்டு அப்போதைய அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றது.

‘எழுத்தாளர் கிராமம்’

நமது அரசுகள் விளையாட்டு வீரர்களை உருவாக்கத் தேவையான அடிப்படை வசதிகளோடு விடுதிகளை நடத்துகின்றன; மைதானங்களை உருவாக்குகின்றன. இதுபோல, எழுத்தாளர்களை உருவாக்கும் ஆதரிக்கும் வளர்த்தெடுக்கும் அமைப்பாக ‘எழுத்தாளர் கிராமம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அங்கே தங்கி எழுதவரும் எழுத்தாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் அமைதியான சூழலும் இருக்க வேண்டும். எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்பும் வாசகர்களுடன் உரையாடுவதற்கும் இடவசதியை உருவாக்கித் தரலாம். இதெல்லாம் பல நாடுகளில் ஏற்கெனவே உள்ள வழக்கம்தான்.

தமிழ் எழுத்தாளர்களில் ஒருசிலர் உலக அளவில் ‘எழுத்தாளர் முகாம்க’ளுக்குச் சென்று, தங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்திவருகிறார்கள். அப்படியொரு ‘எழுத்தாளர் முகாம்’ நடத்தக்கூடிய இடமாக ‘எழுத்தாளர் கிராமம்’ அமைய வேண்டும். அப்படி ஓரிடத்தைத் தாமிரபரணிக் கரையில் உருவாக்க முடியும். அந்தக் கிராமத்தில் இலக்கியத் திருவிழாவை (Literary Festival ) நடத்தலாம். போபாலில் இப்படியொரு இடம் இருக்கிறது. உலக அளவிலான இலக்கிய விழாவை கேரளம் நடத்துகிறது. சாந்திநிகேதனிலும் இப்படியொரு சூழல் இருந்ததாக வாசித்திருக்கிறேன். மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துத் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கினால், ‘சாகித்ய அகாடமி’ போன்ற பண்பாட்டு அமைப்புகள் உதவக்கூடும். பண்பாட்டு நடவடிக்கைகள் மீது அக்கறை காட்டும் தனியார் நிறுவனங்களும் நிதியுதவி வழங்குவார்கள்.

பாரதி வேண்டிய காணிநிலம்

இப்படியொரு தேவையைத்தானே பாரதி தனது ‘காணிநிலம்’ கவிதையில் வேண்டினான்? ‘காணிநிலம்’ என்ற பெயரிலேயேகூட அந்தக் கிராமம் அமையலாம். ஓவியர்களுக்கான சோழமண்டல கிராமம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இவ்வாறு அமைக்கப்பட்டதுதான்!

இந்தப் பொருண்மையில், மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி, “இயல், இசை, நாடகம் சார்ந்து மூன்று மூன்று பேருக்கு ஐந்து லட்சம் விருதுத் தொகையுடன் கூடிய ‘இலக்கிய மாமணி’ விருதுகள் வழங்கப்படும். நாட்டளவிலும் உலகளவிலும் விருதுகள் பெறும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்திலேயே வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வரவேற்கத்தக்க, பாராட்டுதலுக்குரிய அறிவிப்பு இது. இந்த அறிவிப்பானது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், ‘தங்களின் ஆட்சியையும் கருத்தையும் ஆதரித்து எழுதும் எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் வீடுகளையும் தரும் திட்டம் இது’ என்பன போன்ற விமர்சனங்களும் எழத் தொடங்கிவிட்டன. அப்படியான பேச்சுகளுக்குத் தடைபோட முடியாது. ஆனால், முன்னெடுப்புகள் மூலமாகவும் செயல்பாடுகள் மூலமாகவும் இத்தகைய விமர்சனங்களைப் பொய்யாக்க முடியும்.

எப்படி அது சாத்தியம்?

தமிழ்நாட்டளவில் கலை, இலக்கியர்களுக்கு வழங்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதுகள் எந்தவிதத் தேர்வு அடிப்படைகளும் இல்லாமல் வழங்கப்பட்டன எனும் விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இயல் இசை நாடகமன்றப் பொறுப்பாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே அந்தப் பட்டியல்கள் இருந்தன என்றும் பேசப்பட்டது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும். வழங்கப்படும் விருதுக்கான தரமானது பெறும் நபரைப் பொறுத்தே உறுதியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளிப்படைத்தன்மை மட்டுமே இதைச் சாதிப்பதற்கான ஒரே வழி.

எனவே, ‘இலக்கிய மாமணி’ விருதுகளுக்கான தேர்வு முறையை முன்னரே அறிவிக்க வேண்டும். ‘சாகித்ய அகாடமி’ பின்பற்றும் நடைமுறையைவிடச் சிறப்பானதும் வெளிப்படையானதுமான முறையைப் பின்பற்ற வழிவகுக்க வேண்டும். முதல் சுற்றில் இடம்பெறும் எழுத்தாளர்களிலிருந்து குறும் பட்டியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், அதிலிருந்து கடைசி மூன்று எழுத்தாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும் மறைக்க வேண்டியதில்லை. தேர்வுக் குழுவினரின் பெயர்களை ரகசியமாக வைக்காமல், அவர்களைப் பொறுப்பாக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தேர்வுக் குழுவினரிடமிருந்து பெற்று வெளியிடலாம். இந்த நடைமுறையைச் செய்யும்போது ‘அரசின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்ற பேச்சு காணாமல்போய்விடும்.

சில கோரிக்கைகள்

‘சாகித்ய அகாடமி’, ‘ஞானபீடம்’ விருதுபெற்ற இலக்கியவாதிகளுக்கான ‘கனவு வீடு’ வரவேற்க வேண்டிய நல்ல திட்டம். அந்தத் திட்டத்துக்குள் மாநில அரசு வழங்கப்போகும் ‘இலக்கிய மாமணி’ விருதுகளையும் உள்ளடக்க வேண்டும். எழுத்தாளர்கள் விரும்பும் மாவட்டத்தில் வீடு கட்டித் தரும் திட்டத்தோடு எழுத்தாளர்களுக்கான கிராமம் அமைப்பது குறித்தும் அரசு திட்டமிட வேண்டும். எழுத்தாளர் கிராமத்தில் தங்குபவர்களுக்கு இலவச மருத்துவ வசதியையும், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்குச் சென்றுவர சலுகையுடன் கூடிய பயணத் திட்டத்தையும் உருவாக்கலாம். விருதாளரின் மனைவி அல்லது கணவருக்கு வாழ்நாள் வரை ஓய்வூதியம் வழங்கலாம்.

ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் ‘எழுத்தாளர் கிராமங்கள்’ உருவாக்கப்படுவது இயலாத ஒன்று. எனவே, ஆண்டுக்கு ஒன்று எனத் திட்டமிட்டால் முதல் ஐந்து ஆண்டுகளில் ஐந்து எழுத்தாளர் கிராமங்கள் உருவாகிவிடும். இவையெல்லாம் செய்யப்பட்டால் ‘கனவு வீடு’ என்ற திட்டம் எழுத்தாளர்களுக்கான ‘கனவுக் கிராம’த்துக்கான உருவாக்கமாக அமையும்!

- அ.ராமசாமி, தமிழ்த் துறைப் பேராசிரியர்.

தொடர்புக்கு: ramasamytamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x