Published : 18 Jun 2014 08:00 AM
Last Updated : 18 Jun 2014 08:00 AM

விடைபெற்ற நான்கு வார்த்தைகள்!

அந்தரங்கம், உள்ளூர், சராசரி, பிறகு - நான்குமே வழக்கொழிந்துவிட்டன.

நாள்தோறும் செய்திகளைப் படிக்கப் படிக்க, நான்கு வார்த்தைகள் அர்த்தமிழந்துவருவதாகத் தோன்றுகிறது. அவற்றை அகராதியிலிருந்தே நீக்கிவிட்டால் என்ன என்றுகூடத் தோன்றுகிறது. அந்த வார்த்தைகள் அந்தரங்கம், உள்ளூர், சராசரி மற்றும் பிறகு!

தங்கள் உண்மையான மதிப்பை இழந்துவிடும் அளவுக்கு, எண்ணற்ற முறை பத்திரிகைகளில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சலீஸ் கிளிப்பர்ஸ் (கூடைப்பந்துக் கழகம்) உரிமையாளர் டொனால்டு ஸ்டெர்லிங் மீது எனக்குத் துளிகூட அனுதாபம் கிடையாது என்பது கடவுளுக்கே தெரியும். “என்னுடைய விருந்துக்குக் கருப்பர்கள் யாரையும் கூட்டி வராதே” என்று அவர் அந்தரங்கமாகக் கூறியதை அவருடைய தோழி(!), அவருக்குத் தெரியாமல் ஒலிநாடாவில் பதிவுசெய்து, பிறகு வெளியிட்டு அவரை உலக அளவில் அம்பலப்படுத்தினார்.

இப்போது யார் வேண்டுமானாலும் பேச்சை, உரையாடலைப் பதிவுசெய்யலாம், புகைப்படம் எடுக்கலாம், மறைத்து வைத்துள்ள கேமராவில் நெடும்படமாகக்கூடப் படம்பிடித்துவிடலாம். எனவே, நாம் பேசியது, சொன்னதெல்லாம் ரகசியமாகத்தான் இருக்கும் என்று இனியும் நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம். அதனால்தான் இப்போதெல்லாம் என்னைச் சந்திக்கும் சாதாரண மக்கள்கூட - அரசு உயர் அதிகாரிகள் அல்ல - ‘இது அதிகாரபூர்வமற்ற தகவல்' என்ற பூர்வபீடிகையுடன் ஆரம்பிக்கின்றனர். “அதிகாரபூர்வமற்ற தகவலா, நீர் என்ன அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரா?” என்று கேட்கத் தோன்றுகிறது.

டொனால்டு ஸ்டெர்லிங் தனது தோழியிடம் நட்புமுறையில் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்; அவருக்கே தெரியாமல் அதைத் தன்னுடைய செல் போனில் பதிவுசெய்த அந்தத் தோழி, பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி தன்னுடைய நெருங்கிய தோழிக்கு டிஜிட்டல் வடிவில் அனுப்பிவைத்தார். அது நடக்குமா என்ன? ஊர் வம்பைக் கொட்டி அளக்கும் ‘டி.எம்.இசட்’ என்ற இணையதளத்துக்கு அதை அனுப்பிவைத்துப் புண்ணியம் கட்டிக்கொண்டார் அந்த உற்ற தோழி.

தொலைக்காட்சியில் ‘ரியல் டைம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் பில் மஹேர், மே 9-ம் தேதி குறும்பாக இதுபற்றிக் குறிப்பிட்டார். “அரசாங்கம் தங்களுடைய பேச்சை ஒட்டுக்கேட்பது குறித்து அமெரிக்கர்கள் இப்போது விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். விளைவாக, அவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் உளவுபார்க்க ஆரம்பித்துவிட்டனர்” என்றார். ‘பெரிய அண்ணன்’தான் (அரசு) எப்போதும் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது ‘பெரிய அக்கா’வும் அதில் சேர்ந்துவிட்டார்.

எங்கு பார்த்தாலும் ரகசிய கேமரா, எங்கு திரும்பினாலும் ரகசிய செல்போன் அல்லது ரெக்கார்டர். இந்த நிலையில், ஒரு ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? கேத்லீன் பார்க்கர், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எளிதாக அந்த வழியைக் கற்றுக் கொடுத்துவிட்டார்! “உங்களுடைய ரகசியமான பேச்சு பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ அம்பலமாகாமல் இருக்க வேண்டும் என்றால், ஒரே வழிதான். அதைப் பேசாமல் இருந்துவிடுங்கள்.”

‘உள்ளூர்’ என்று எதுவுமில்லை

‘உள்ளூர்' என்ற வார்த்தையையும் அதே காரணத்துக்காகத்தான் நீக்கக் கோருகிறேன். சர்ச்சைக்கிடமான வகையில் நீங்கள் எதைப் பற்றியும் அல்லது எல்லாவற்றைப் பற்றியும் பேசினால், அது உடனடியாக இணையதளம், முகநூல், தொலைக்காட்சி என்று உலகம் முழுக்கப் பரவிவிடுகிறது. அமெரிக்கப் பாடகி பியான்சியின் தங்கை சொலாங்கி நோவல்ஸும் நல்ல பாடகி, கவிஞர். பியான்சி, அவருடைய கணவர் ஜே இசட், சொலாங்கி மூவரும் ஒரு நட்சத்திர ஹோட்டலின் மின்தூக்கியில் சென்றபோது, திடீரென ஜே இசட்டை, சொலாங்கி அடித்து உதைக்க ஆரம்பித்தார். அத்துடன் அவரைக் கடித்தும்விட்டார். நல்ல வேளையாக அவர்களுடன் வந்த மெய்க்காவலர் ஒருவர் தடுத்ததால் ஜே இசட் மேற்கொண்டு சேதம் அடையாமல் வெளியே வந்தார். சொலாங்கி ஏன் அடித்தார், ஜே இசட் என்ன சில்மிஷம் செய்தார், கணவரைத் தன்னுடைய தங்கை அடித்தபோது பியான்சி ஏன் தடுக்கவில்லை என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், மின்தூக்கியில் இருந்த கேமராவில் பதிவான இந்தக் கண்கொள்ளாக் காட்சி உலகம் முழுக்கப் பரவிவிட்டது.

இதைப் போல அடிப்பதற்கு நீங்களும் சொலாங்கி போலப் பிரபலமானவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நல்ல புதிய கேமராவாக இருந்து நன்றாகப் படம் பிடித்திருந்தால் ‘புதுமுகம்’ நடித்த வீடியோகூட உலகம் முழுக்கத் தீயாகப் பரவிவிடும்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு தாய், தன்னுடைய மகளை எப்போதும் பின்தொடர்ந்த ஒரு பையனைப் பிடித்து அடி பின்னியெடுத்துவிட்டார். வெறும் உள்ளூர் செய்தியாகப் போயிருக்க வேண்டிய இந்தச் சம்பவம், கூகுள் மூலம் வெளி யிடப்பட்டதால் உலகம் முழுக்கப் பரவியது. வேகாஸ் நகரில் நடப்பது வேகாஸ் நகருக்குள்தான் தெரியும் என்று யாராவது இனி உங்களிடம் கூறினால், அவர் உங்களைக் கிண்டல் செய்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

‘சராசரி'க்கும் வந்தது ஆபத்து

எல்லா முதலாளிகளுக்கும் மலிவான, எளிதான, விரைவான மென்பொருள் கிடைத்துவிட்டால் தானி யங்கிச் சாதனங்கள், ரோபாட்டுகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆகியவற்றின் மூலம் ‘சராசரி'க்கும் அதிகமான வேலைத்திறன் உள்ளவர்களை எளிதில் பிடித்துவிட முடியும். இன்னும் டிஜிட்டல்மயமாகாத வேலையாக இருந்தால் தொடர்ந்து திறமையைக் கூட்டிக்கொண்டு, தகவமைத்துக்கொண்டு, முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும்.

நியூயார்க் டைம்ஸில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள். “ நியூயார்க் நகரில் உள்ள பண்ணைகளில் இப்போதெல்லாம் வினோதம் நடக்கிறது. பசு மாடுகள் தாங்களாகவே பால்கறந்துகொள்கின்றன. மாடுகளின் மடிகளைக் காக்கப் புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. பண்ணையாள் என்று ஒரு ஜீவனும் இல்லாவிட்டாலும்கூட எல்லா மாடுகளின் மடிகளையும் பதவிசாகப் பிடித்து சொட்டுப்பால் மிச்சமிராமல் ஒட்டக் கறக்க ரோபாட்டுகள் வந்து விட்டன” என்கிறது அந்தச் செய்தி.

மாட்டின் காம்பைப் பிடித்துப் பால் கறப்பது எப்படி என்று மட்டுமே தெரிந்துவைத்திருந்த பண்ணையாள், இப்போது கம்ப்யூட்டர் புரோகிராமிங் படித்து, ரோபாட்டுகள் மூலம் மாடுகளிடம் பால் கறக்கக் கற்றுக்கொண்டால்தான் வேலை நிலைக்கும். இது ‘சராசரி'க்கும் மேற்பட்ட வேலைத் திறனாகும். எனவேதான் சொல்கிறேன், இனி ‘சராசரி'க்கும் மதிப்பு இல்லை.

பிறகு என்பதும் இனி இல்லை

மேற்கு அண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிப்பாளம் கீழே சரிந்து, தொடர்ந்து உருகி வருகிறது. பனிப்பாளம் உருகுவது தடுக்க இயலாத ஒன்றாக இருக்கிறது என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி தெரிவிக்கிறது. இனி, பழைய நிலைக்கு மீளவே மீளாது என்ற நிலைக்குச் சென்றுவிட்டது என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எரிக் ரிக்நாட்டும் தெரிவிக்கிறார்.

நாங்கள் எல்லாம் சிறுவர்களாக இருந்தபோது ‘பிறகு' எங்கள் ஊருக்குச் சென்று அதே நிலப்பரப்பில் விளையாடினோம், ‘பிறகு' அதே பிராணிகளைப் பார்த்து மகிழ்ந்தோம், ‘பிறகு' அதே ஆற்றில் மீன் பிடித்தோம், ‘பிறகு' அதே அண்டார்டிகாவைப் பார்த்து மகிழ்ந்தோம், ‘பிறகு' அதே பருவ நிலையை அனுபவித்தோம் என்று இனி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஊரும் பழைய நிலையில் இல்லை. தாவரங்களும், செடி கொடிகளும், பிராணிகளும், பருவநிலைகளும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாத அளவுக்கு மாறிவிட்டன. எனவேதான் சொன்னேன், ‘பிறகு' என்ற வார்த்தையும் அர்த்தமிழந்துவிட்டது.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x