Published : 09 Dec 2015 10:32 AM
Last Updated : 09 Dec 2015 10:32 AM
*
ஓய்வெடுக்கத் தொடங்கியிருக்கிறது மழை. மீண்டு எழுத் தொடங்கியிருக்கிறது சென்னை. மழையை திட்டியது போதும். அதன் மறுபக்கத்தைப் பார்ப்போம். மனித நேயத்தை விதைத்துச் சென்றிருக்கிறது மழை. மமதையை அழித்துச் சென்றிருக்கிறது மழை. மதங்களை பிணைத்துச் சென்றிருக்கிறது மழை. மழையில் நாம் நனைந்ததைவிட மனிதத்தில் நனைந்ததே அதிகம். மொத்ததில் கனமான பாடத்தை கற்பித்துச் சென்றிருக்கிறது மழை.
இதனை ‘தி இந்து’ நிவாரண முகாமில் கண்கூடாக பார்க்க முடிகிறது. இங்கே அழைக்காமல் வந்தவர்கள்தான் அதிகம். காலை 9 மணிக்கு முகாமுக்கு வந்தார் ம.திவாகரன். செம்மஞ்சேரியை சேர்ந்த பொறியாளர். முகமெங்கும் அடர்த்தியான சோகம். “எங்க பகுதி முழுக்க மழை வெள்ளமா கிடக்கு. எங்க வீடுகள் எல்லாம் மூழ்கிப்போச்சு. நேத்துதான் வீட்டுல வெள்ளம் வடிஞ்சது. ஓரளவு வசதியான எனக்கே இந்த நிலைன்னா மத்தவங்க நிலை எப்படி இருக்கும்னு நெனைச்சுப் பார்த்தேன். டிவி-யில் பார்க்க, பார்க்க கண்ணீர் வருது. வீட்டை நீங்க பார்த்துக்கோங்கன்னு குடும்பத்துல சொல்லிட்டு இங்கே கிளம்பி வந்துட்டேன்.” என்கிறார் கண் கலங்க. சேலத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் வந்து நிற்கிறது கே.பி.என். டிராவல்ஸ் லாரி. ஓடிப்போய் லாரியில் ஏறி பொருட்களை இறக்குகிறார்.
நிஜ நாயகர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம்
காலில் சக்கரத்தைக் கட்டியதுபோல சுற்றிச்சுழல்கிறார்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம். மூவருமே சிறுவர்கள். அசோக் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அர்ஜுனும் ஆறுமுகமும் ஐந்தாவது படிக்கிறார்கள். “தம்பிங்களா நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். ஓரமா உட்காருங்க” என்று சொன்னாலும் கேட்பதாக இல்லை. “அண்ணே எங்களுக்காக எங்கிருந்தோ எல்லாம் வந்து வேலை செய்யறாங்க. நாங்களும் செய்யறோம்ண்ணே” என்கிறார்கள். பட்டியலைப் பார்த்து பகுதி வாரியாக தேவைப்படும் பொருட்களை அசோக் வாசிக்கிறான். அவற்றை அர்ஜுனும் ஆறுமுகமும் அட்டைப் பெட்டிகளில் எண்ணி அடுக்குகிறார்கள். ஆனால், மூவரின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. மூவரின் வீடுகளுமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. வத்தலகுண்டுவிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த குடும்பம் இவர்களுடையது. மூவரின் குடிசைகளும் சேப்பாக்கம் ரயில் பாலத்துக்கு கீழே கூவம் கால்வாய்க்கு ஒட்டியே இருந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் அத்தனையும் அடித்துச் சென்றுவிட்டது. இப்போது சில சணல் பை தடுப்புகள் ஒரு டிஜிட்டல் பேனரும்தான் இவர்களின் தற்காலிக வசிப்படமாக இருக்கிறது. ஆனால், அந்த சோகம் கொஞ்சமும் இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள் சிறுவர்கள். “அய்யோ அண்ணா, அன்னைக்கு பயங்கரமான மழைன்னா. தூங்கிட்டிருந்தப்ப குடிசையோட தண்ணி இழுத்துட்டுப் போயிடுச்சு. அடிச்சுப் புடிச்சி நீந்தி வந்தோம். இங்க கொடுத்த பாயும் போர்வையும் ரெண்டு நாளா உதவியா இருக்கு” என்கிறார்கள் சிறுவர்கள்.
கை கொடுத்த சட்டப் பல்கலைக்கழகம்!
கடந்த இரு நாட்களாக நமது வெள்ள நிவாரண முகாம் பணிகளில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பங்கு மெச்சத்தக்கது. காலையிலேயே சுமார் 50 இளைஞர்களுடன் வந்து சேர்ந்தார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.வணங்காமுடி. கூடவே பேராசிரியர்கள் சிலரும் வந்துவிட்டார்கள். “நடந்திருக்கிறது பெரிய இழப்புதான். எல்லாரும் ஒண்ணு சேர்ந்தாதான் ஓரளவாவது மக்களை துன்பத்திலிருந்து விடுவிக்க முடியும். நேற்று கல்குட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட பொருட்களை கொடுத்தோம். இன்னைக்கு எங்கே போகணும்னு சொல்லுங்க” என்று பரபரக்கிறார் வணங்காமுடி.
மயிலாப்பூரிலிருந்து தனது மனைவி லட்சுமியுடன் வந்திருக்கிறார் 68 வயதான ஆர்.பாலசுப்பிரமணியன். இருவர் கைகளிலும் தலா 2 பெரிய பைகள். தலையில் ஒரு மூட்டை. எல்லாம் புதிய புடவைகள், வேட்டிகள், துண்டுகள், போர்வைகள். “எங்க வீட்டை சுத்தம் பண்ணியாச்சு. ஊரை சுத்தம் பண்ணணும் இல்லையா” என்று பரபரவென வேலை பார்க்கத் தொடங்குகிறார்கள் அந்த வயதான தம்பதியர்.
கடந்த 3 நாட்களாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இளைஞர் குழு செய்து வரும் சேவையை வார்த்தைகளில் சொல்ல இயலாது. சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் பெயர் என்ன என்பதைக் கூட குறிப்பிடாமல் வேலையே கதியாக கிடந்தார்கள். “எங்களுக்கு பணம், பொருள் கொடுக்குற அளவுக்கு வசதி இல்லை. ஆனா, எவ்வளவு வேலைன்னாலும் செய்யுற அளவுக்கு உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு” என்கிறார்கள். லாரிகளில் பெரும் மூட்டைகளை ஏற்றி இறக்குவது எல்லாம் இவர்கள் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது.
கடலோர காவல் படையுடன் ‘தி இந்து’!
‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாம் குழுவினர் எந்த அளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பல இடங்களில் பொருட்களை விநியோகித்தனர். ஆனால், அதையும் விட வெள்ளம் வடியாத பல பகுதிகள் இருக்கின்றன. அங்கிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், படகுகளும் பற்றாக்குறையாகிவிட்ட நிலையில் அங்கு செல்ல முடியாமல் தவித்தோம். இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தோம். உடனே ஹெலிகாப்டருடன் வந்து சேர்ந்தது கடலோர காவல் படை. தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு தரமணி, செம்மஞ்சேரி, வேளச்சேரி, கோவிலம்பாக்கம், ஆதனூர், லாத்தூர், பெரம்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று உதவிகள் வழங்கப்பட்டன. கடலோர காவல் படைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
இப்படியாக நேற்றைய தினம் மட்டும் அத்திப்பட்டு, அமைந்தகரை, பழைய மகாபலிபுரம் சாலை, வியாசர்பாடி, கல்யாணபுரம், மிண்ட் ஸ்டான்லி மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகள், பள்ளிக்கரணை, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், ஆடம்ஸ் சாலை, அயனப்பாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 18,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தனுஷ் தாராளம்..
நேற்றைய தினம் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 200 புதிய சேலைகள், 500 தண்ணீர் பாட்டில்கள், 30 போர்வைகள், ரொட்டிகள் உள்ளிட்டவற்றை ஒரு கார் நிறைய அனுப்பி வைத்தார். நமது நிவாரண குழுவினரை தனது அலுவலகத்துக்கு அழைத்த தனுஷ், ‘உள்ளே இருக்கிறது அத்தனையும் உங்களுக்குதான். எவ்வளவு வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். நடிகர்கள் சித்தார்த், தனுஷ், ஆர்.ஜே.பாலாஜி, பாடகர் சின்மயி ஆகியோர் திரட்டிய நிவாரணப் பொருட்கள் அவை. 300 போர்வைகள், 5 மூட்டை அரிசி, நாப்கின் 5 பெட்டிகள், ஆண்களுக்கான ஆடைகள் ஒரு மூட்டை, குழந்தைகளுக்கான ஆடைகள் ஒரு மூட்டை, மெழுகுவர்த்தி, கொசு விரட்டி, பற்பசை, ரொட்டிப் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அள்ளிக் கொடுத்தார் தனுஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT