Published : 10 Dec 2015 09:16 AM
Last Updated : 10 Dec 2015 09:16 AM
*
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பர்களே. நாளுக்கு நாள் நாலாபுறமும் இருந்து உதவிகள் குவிகின்றன. சேப்பாக்கம் வழியாக சாலைகளில் செல்வோர் எல்லாம் முகாமை பார்த்துவிட்டு வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்துவிட்டுப் போகிறார்கள்.
முகாமுக்கு போன் செய்து, “சார் பெயர் எல்லாம் வேண்டாம், என்ன அனுப்ப வேண்டும் உங்களுக்கு” என்று நெகிழ வைக்கிறார்கள். மழை கொடுத்த நட்புகள் இவை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வாக்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘தி இந்து’வின் வாசகர்கள்.
கைகோர்த்த பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா
நேற்றைய தினம் ‘தி இந்து’வுடன் கைகோத்தது ‘பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு. அதன் மாநிலப் பொதுச்செயலாளர் முஹம்மது சேக் அன்சாரி கூறும்போது, “இதுவரை நாங்கள் சுமார் 83 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் அளித்துள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ‘தி இந்து’ குழுமம் சிறப்பான முறையில் உதவிகளை செய்து வருவதை அறிகிறோம்.
எனவே, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் உங்களோடு இணைந்து பணியாற்றும் விதமாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பாய், போர்வை, தலையணை, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம். எங்கள் செயல்வீரர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
சேவை இல்லை, கடமை!
நிவாரண பணியில் பங்கேற்றிருக்கிற எவரிடமும் சேவை செய்கிறோம் என்ற உணர்வில்லை. தன்னை இத்தனை காலமாகச் சுமந்த சென்னைக்கும், உறவாக இருந்த மக்களுக்கும் நாம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணி இது என்கிற உணர்வு மட்டுமே உள்ளது.
திருவல்லிக்கேணியில் பழக்கடை வைத்திருக்கும் சந்திரன் கடந்த ஒரு வாரமாக தன்னிடமிருக்கும் டாடா ஏஸி வண்டி மூலமாக நிவாரணப் பொருட்களை சென்னை நகரின் பாதிக்கப்பட்ட பகுதிகளெங்கும் கொண்டுபோய் சேர்த்து வருகிறார். டீசல் செலவைக்கூட கேட்பதில்லை.
“வெள்ளத்தில என்னோட வீடு பாதிக்கப்படலேன்னு நான் நினைக்கலே. பாதிக்கப்பட்டது எல்லாமே என்னோட குடும்பமா நினைக்கிறேன். என்னால முடிஞ்சது இது. தினமும் இங்க வந்து இந்த வேலைகளைச் செஞ்சிட்டுப் போனாத்தான் மனசுக்கு நிம்மதி வருது…” என்று சந்திரன் சொல்லும்போதே மனதின் ஈரம் கண்களில் வடிகிறது.
ஆயிரமாய் நீளும் உதவிக் கரங்கள்
தன் மனைவியோடு வந்த பெயர் குறிப்பிட விரும்பாத சுங்கத்துறை அதிகாரி ஒருவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்ப உடனடியான தேவை என்னன்னு சொல்லுங்க. என்னோட பங்களிப்பா ரூ.25 ஆயிரத்துக்கான பொருட்களை நானே வாங்கித் தந்துட்டுப் போறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கேயே அமர்கிறார்.
அண்ணா நகர் மேற்கில் வசிக்கும் 84 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே துறை அதிகாரி சி.ஜி.ரத்னம் இரு கைகளிலும் பைகளைச் சுமந்து வருகிறார். “பாதிக்கப்பட்ட மக்களுக்கான என்னோட பங்களிப்பு…” என்று கூறியபடி இரண்டு பைகளையும் தந்தவர், “எங்க ஏரியாவில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வசிக்கிறாங்க. நான் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு பொருட்கள் கொடுக்கப் போறேன்னு சொன்னவுடனே, அவங்க அம்மாவோட பிறந்த நாளுக்கு வாங்கின மொத்த புதுத் துணியையும் கொடுத்துவிட்டாங்க” என்று இன்னொரு பையையும் சேர்த்துத் தருகிறார்.
நெகிழ்ந்த நன்றியோடு…
கையில் ‘தி இந்து’வுக்கான நன்றி அட்டையோடும், கொஞ்சம் புகைப் படங்களோடும் உள்ளே வருகிறார் பிரசாத் சிங் (66). குடிசை மாற்று வாரிய முன்னாள் உறுப்பினர். “என்னோட சொந்த ஊரு திருவாலங்காட்டில உள்ள ஜாகீர்மங்கலம் கிராமம். அந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கிற 5 பஞ்சாயத்துல சுமார் 3,500 வீடுகள் இருக்கு. அந்தப் பகுதி மொத்தமும் வெள்ளத்தில் மூழ்கிடுச்சு.
இதை டிசம்பர் 6-ம் தேதி ‘தி இந்து’ நிவாரண முகாம்ல வந்து சொன்னேன். உடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பாய், பிரெட், ரஸ்க், ஸ்டவ்ன்னு கொடுத்தாங்க. அதையெல்லாம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்திலேயும், ஊர் லைப்ரரியிலேயும் தங்கியிருக்கிற மக்கள்கிட்டே கொடுத்தேன். ரொம்ப நன்றி” என்றவர், தான் மக்களுக்கு விநியோகித்த பொருட்களை படம் எடுத்து ஆல்பமாக்கி கொண்டு வந்து கொடுத்தார்.
நோய் நாடி உயிர்நாடி…
தினமும் நிவாரண முகாமுக்கு வந்து விடுகிறார் டாக்டர் மகாதீர் முகமது (25). சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்கிறார். “என் தம்பியோட நண்பர்கள் மூலமா கேள்விப்பட்டுத்தான் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு வந்தேன்.
நிவாரண உதவிகளோட சேர்த்து சுகாதாரப் பணிகளையும் செய்ய வேண்டியது ரொம்ப அவசியம். தினமும் இங்க வர்றவங்களுக்கு மருத்துவம் பார்ப்பதோடு, நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் தடுப்பூசிகள் போடுகிறேன்” என்கிறார்.
தொய்வின்றி தொடரும் உதவிகள்…
நிவாரண முகாமுக்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, ஞானசேகரன் ஆகியோர் பாய், பால் பவுடர் உள்ளிட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் தந்துவிட்டு, “இது நாங்களும், எங்கள் துறையின் இணை ஆணையர் ஜெகன்னாதன், துணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் விஜயா ஆகியோர் அளிக்கும் எளிய பங்களிப்பு” என்றார்கள்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான போர்வைகள், டவல் ஆகியவற்றை தேவகோட்டை கே.பி.என். டிராவல்ஸ் மூலமாக ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு அனுப்பியுள்ளனர்.
என்.டி.எல். டிராவல்ஸ் நிறுவனத்தினர் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள 2 கார்களை அனுப்பியுள்ளனர். ஏர்செல் நிறுவனம், முகாமுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்பவர்களுக்காக 2 பிரத்தியேக அலை பேசி இணைப்புகளை (99418 22222, 9941733333) இலவசமாக அளித்துள்ளனர்.
சென்னை மகரிஷி பள்ளி நிர்வாகத் தினர் நிவாரணப் பணிகளுக்கு பயன் படுத்திக்கொள்ள 2 பள்ளி வேன்களை அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலும் ‘தி இந்து’ கள நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கனிவான வேண்டுகோள்
அன்புள்ள வாசகர்களே, தாங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக் கும் உதவி பொருட்கள் மனதை நெகிழச் செய்கின்றன. நன்றி. அதே சமயம், பழைய துணிகள் அனுப்பு வதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.
மேலும், தண்ணீர் பாக்கெட்டுகள் தேவைக்கும் அதிகமாக குவிந்து விட்டதாலும், அவற்றை அனுப்ப உங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் என்பதாலும் தண்ணீர் பாக்கெட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கைதட்டி உற்சாகப்படுத்திய ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்
இதுவரை நமது முகாமில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் முகாமுக்கு வந்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தினார்.
முகாமில் முதல் நாளில் இருந்து ஓய்வின்றி உழைத்து வரும் தன்னார்வலர் ஸ்டெபியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டியவர், அர்ஜூன், அசோக், ஆறுமுகம் ஆகிய சிறுவர்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்து தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த நிவாரண முகாம் முடிந்தததும் நீங்கள் மூவரும் கண்டிப்பாக படிக்கப் போக வேண்டும் என்றும் அவர்களை அறிவுறுத்தினார்.
‘கேஜியெஸ் ரெசிடன்சி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் சார்பில் துணைத் தலைவர் டேனியன், பொதுமேலாளர் அனந்தராமன் ஆகியோர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 550 மண்ணெண்ணெய் ஸ்டவ்களை ‘தி இந்து’ இணையதள பிரிவு ஆசிரியர் பாரதி தமிழனிடம் வழங்கினர். உடன் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT