Last Updated : 02 Jun, 2021 03:12 AM

5  

Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

தளர்வுகள் அவசியம்!

‘இன்று நீ – நாளை நான்’ இது பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்போது கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும்போது, மனது இதையே சொல்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொற்று தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சாதாரண மக்களைக் கணக்கில் கொண்டதாகவும் அமைய வேண்டும். மக்களைப் பெருந்தொற்றிலிருந்து காக்கத்தான் இப்படி முடிவெடுக்கிறார்கள் என்றாலும், அவற்றில் காணப்படும் முரண்களைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

மருந்து-மாத்திரைகளுக்காக மருந்துக் கடைகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளையும் திறக்க அனுமதித்தவர்கள் சக்கர நாற்காலிகள், தள்ளுவண்டிகள், நோயாளிகளுக்கான சிறப்புப் படுக்கைகள் என மருத்துவச் சாதனங்கள் விற்கும் கடைகளைத் திறக்க ஏன் அனுமதிக்கவில்லை? வீடுகளைத் தூய்மைப்படுத்த உதவும் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏன் விதிவிலக்கு தரவில்லை? மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் அல்லாத வாகனங்களில் செல்ல முடிந்தவர்களுக்காக டாக்ஸிகளையும் ஆட்டோக்களையும் அனுப்பலாம் என்று ஏன் தீர்மானிக்கவில்லை? பெரும்பாலானவர்கள் இந்தப் பற்றாக்குறையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்; சாதாரண மக்கள் ஏன் தேவையில்லாமல் மருத்துவமனைக்குச் செல்லவே ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டும்? சில ஆட்டோக்கள் ஆம்புலன்ஸாகப் பயன்படுத்தப்படும்போது, சாத்தியமுள்ள பிற வாகனங்களுக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்தால் கட்டணமும் பாதிப்புகளும் குறையும்தானே?

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர, பிற வகை நோயாளிகளும் திண்டாடுகிறார்கள். ரொட்டி, பன், பிஸ்கட் விற்கும் பேக்கரிகளுக்கு ஏன் தடை? ஹோட்டல்கள் பூட்டியிருப்பதால் பன்-பட்டர்-ஜாம் 15 ரூபாய்க்குச் சாப்பிட்டு ஒரு டீயோடு ஒருவேளை உணவைச் சுருக்கமாக முடித்துக்கொள்வார்களே சாமானிய ஏழைகள், அவர்களை ஏன் பட்டினி போட வேண்டும்? அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் எல்லோருக்கும் உணவு அளித்துவிட முடியுமா?

சலவையகங்கள், முடிதிருத்தகங்கள், நகை செய்யும் பட்டறைகள், தச்சர்கள், கொல்லர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் போன்றோருக்கும் சுகாதார நடைமுறைகளில் பயிற்சி அளித்துத் தொழில்களைத் தொடங்குமாறு ஊக்குவிக்க வேண்டும். முடக்கம் பலருடைய குடும்பங்களை நிரந்தரமாக முடக்கிவிடும். அரசு ஊழியர்களைப் போல மாதக்கணக்காக வேலையில்லாவிட்டாலும் உயிர் வாழ அவர்களால் முடியாது. அரசு தரும் உதவித்தொகை கொஞ்சம்கூடப் போதாது. அச்சத்தை விதைக்காமல், நம்பிக்கையை விதையுங்கள்.

மின்சாதனம் பழுதுபார்ப்போர், குடிநீர்க் குழாய் தொடர்பான வேலைகளைச் செய்வோர், கணினி-மடிக்கணினி பழுதுபார்ப்போர், செல்பேசி விற்பனை செய்வோர், இதர பழுதுபார்ப்போர் ஆகியோருக்கு இப்போது தேவை மிகுந்துவருகிறது. இந்தச் சேவையாளர்களை முடக்குவதன் மூலம் நோயாளிகள் உட்படப் பலரும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். பிள்ளைகளை விட்டுத் தனியாகப் பிரிந்திருக்கும் வயதான பெற்றோர்களுக்கு இவர்களுடைய தேவை அவசியமாகிறது.

பெட்ரோல் பங்குகள் திறந்திருந்தாலும் காற்றுப் பிடிக்கவும் பஞ்சர் ஒட்டவும் டயர் மாற்றவும் முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பலர் உயிர் காக்கப் போராடும் தன்னார்வலர்கள், நோயாளிகளின் உறவினர்கள். எல்லாவற்றுக்கும் காவல் துறையையே அழைத்துத் தொல்லை தர முடியாது. வீடுகளுக்கு நேரடியாகப் பால் கறந்து தரும் பால்காரர்கள் மாடுகளுக்குப் பொட்டு, பிண்ணாக்கு, தவிடு போன்றவை தீர்ந்துவிட்டதால் அவதிப்படுகிறார்கள். கால்நடைகளுக்கான உணவுத் தேவைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்க முடியாமல், அழுகிய பிறகு அழுதுகொண்டே கொட்டும் நிலை தொடர்கிறது. வேளாண் விளைபொருட்களை அந்தந்தப் பருவத்தில்தான் பெற முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். இவற்றை வீணாக்காமல் பயன்படுத்த பெருந்திட்டம் அவசியம். ஒருபுறம் பற்றாக்குறை, மறுபுறம் தேவைகள் நிறைவேறாமை தொடரக் கூடாது. இது இரட்டை இழப்பு.

ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நீளும் நிலையில், அதில் மேலும் தளர்வுகள் அவசியம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், துயரங்கள் மேலும் தொடரவே செய்யும். அரசு நிபுணர்கள் அனைவரும் பெருந்தொற்றையே இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். ஆகவே, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், அதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது. நிபுணர்களின் எந்தவொரு முடிவும் கீழே இருப்பவர்களை மனதில்கொண்டே எடுக்கப்பட வேண்டும்.

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.தொடர்புக்கு: vrangachari57@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x