Published : 09 Jun 2014 10:00 AM
Last Updated : 09 Jun 2014 10:00 AM

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

முதலாம் பீட்டர் (1672-1725) ரஷ்யாவை ஆட்சி செய்த மன்னர்களில் முக்கியமானவர். தனது 10 வயதிலேயே மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், ஆட்சியில் அவரது சகோதரி, உறவினர்கள், தாயார் ஆகியோரின் குறுக்கீடுகள் இருந்தன. அவரது அம்மா மறைந்த பின்னர்தான் முழுமையான அதிகாரம் அவர் கைக்கு வந்தது.

ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்கும் இடையே ஓர் அரசியல் அணி ஏற்படுத்துவதற்காகப் பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றார். அங்கே, ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்துக்குக் காரணமான பல நவீன விஷயங்களைக் கற்றுக்கொண்டார். புதிய நண்பர்களையும் பெற்றார்.

ஐரோப்பாவைப் போல ரஷ்யாவையும் நவீனமாக்க வேண்டும் என்ற உணர்வுகொண்ட முதலாம் பீட்டர், முதல் வேலையாக ராணுவத்தை நவீனமாக்கினார். கடற்படையைப் பலப்படுத்தினார்.

பிறகு அரசு அதிகாரிகள், ராணுவத்தினர், மக்கள் யாரும் தாடி வைக்கக் கூடாது எனத் தடை விதித்தார். மறுத்தவர்களுக்கு மாதம் 100 ரூபிள் தாடி வரியும் விதிக்கப்பட்டது. மக்கள் நவீன உடைகளைத்தான் உடுத்த வேண்டும் என உத்தரவு போட்டார். பிரபுக்கள் குடும்பங்களில் பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடந்தன. அவற்றைத் தடை செய்தார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களால் குடும்ப வன்முறைகள் நடப்பதாக அறிவித்தார். ரஷ்யா முழுவதும் சிறப்புமிக்க கட்டிடங்களை எழுப்பினார்.

300 கோடி ஏக்கர் பரப்பளவுகொண்டதாக நாட்டை விரிவுபடுத்தினார். இதன்மூலம் ஐரோப்பாவின் முக்கிய வல்லரசாக ரஷ்யப் பேரரசு உருவெடுத்தது.

ஆறு அடி எட்டு அங்குலம் உயரம்கொண்ட பிரம்மாண்டமான மனிதர் அவர். இரண்டு மனைவிகள் மூலம் அவருக்கு 14 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் மூன்று பேரைத் தவிர, அனைவரும் சிறுவயதிலேயே இறந்தனர். அவரது மூத்த மகன் அலெக்ஸி, தனது தந்தைக்கு எதிராகச் சதிசெய்ததாகக் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே மாண்டார். தனது 52 வயதில் பீட்டர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x