Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM
மனித குலத்தைப் பறவைகள் ஆதியிலிருந்தே வியக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. பறவைகளிடம் நமக்கு அதிகம் பிடிப்பது அவற்றின் பறக்கும் திறனும், இனிமையான குரலொலியுமே! பறவைகளைச் சரியாக அவதானிக்கும் பழக்கமும் ஆர்வமும் இல்லாதவர்களையும்கூட ஈர்ப்பது அவற்றின்குரலொலி. மனித குலம் முதன்முதலில் ரசித்த இசையானது பறவைகளுடையதாகத்தான் இருக்க வேண்டும். அப்போதிருந்தே பறவைகள் மனிதர்களின் எண்ணங்களையும் கற்பனைகளையும் ஆட்கொண்டு அவற்றைப் பற்றி இலக்கியங்களில், இசையில், நடனத்தில், ஓவியங்களில் எனப் பல்வேறு கலை வடிவங்களில் பதிவுசெய்யத் தூண்டுகோலாய் இருந்திருக்கின்றன.
தமிழ் செவ்விலக்கியங்களில், குறிப்பாகப் பாடல்களிலும் கவிதைகளிலும் செங்கால் நாரை, கானமயில், சிட்டுக்குருவி எனப் பல பறவைகள் இடம்பெற்றிருக்கும். நாட்டுப்புறப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும்கூடப் பல பறவைகள் இடம்பெற்றிருக்கும். ஆயினும், இவை யாவும் உவமைகளாகவோ உருவகங்களாகவோ சிறு குறிப்புகளாகவோ அல்லது மிஞ்சிப்போனால் ஓரிரு முழுப் பாடல்களாகவோ மட்டுமே இருக்கும். பறவைகளைப் பற்றி மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட வகைப் பறவையைப் பற்றி மட்டும் புகழ்பாடும் கவிதைகளும் பாடல்களும் அரிதே.
மாறாக, ஆங்கிலத்தில் பறவைகளுக்காகவே எழுதப்பட்ட கவிதைகளை அதிக அளவில் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஜான் கீட்ஸ் எழுதிய நைட்டிங்கேல் எனும் அழகாகப் பாடும் பறவையைப் பற்றிய ‘ஓட் டூ எ நைட்டிங்கேல்’ (Ode to a Nightingale) எனும் கவிதை, வானம்பாடி குறித்த ‘டூ எ ஸ்கைலார்க்’ (To a Skylark) எனும் ஷெல்லியின் கவிதை. இன்னும் பல பறவைகளைப் பற்றிய கவிதைகளை பில்லி காலின்ஸ் ‘பிரைட் விங்ஸ்’ (Bright Wings) நூலிலும், சிமோன் ஆர்மிட்டேஜ் – டிம் டீ தொகுத்த ‘தி பொயட்ரி ஆஃப் பேர்ட்ஸ்’ (The Poetry of Birds) நூலிலும் காணலாம்.
ஆங்கிலத்தில் இருக்கும் அளவுக்கு இல்லை என்றாலும், அண்மைக் காலங்களில் தமிழிலும், செல்வமணி அரங்கநாதனின் ‘மாட்டுவண்டியும், மகிழுந்தும்...’ (பொன்னுலகம் பதிப்பகம்), அவைநாயகனின் ‘காடுறை உலகம்’ (ஓசை வெளியீடு), ம.இலெ.தங்கப்பாவின் ‘உயிர்ப்பின் அதிர்வுகள்’ (தமிழினி பதிப்பகம்) முதலிய நூல்களில் இயற்கை குறித்தும், பறவைகள் குறித்தும் பல கவிதைகளைக் காணலாம். தேவதேவனின் கவிதைகளிலும் பறவைகள் இடம்பிடித்திருக்கின்றன. பறவைகளை மட்டுமே கொண்ட கவிதைத் தொகுப்பு ஆசையின் ‘கொண்டலாத்தி’(க்ரியா வெளியீடு).
தமிழ் சினிமாப் பாடல்களில் சில இடங்களில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளும் வரும். சில காலத்துக்கு முன் சிட்டுக்குருவி எத்தனை சினிமாப் பாடல் வரிகளில் வருகிறது எனக் கணக்கிட்டதில் சுமார் 20 பாடல்களைப் பட்டியலிட முடிந்தது. எதுகை மோனையாக அமைய வேண்டும் என்பதற்காகவே சிட்டு எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்கள். சிட்டுக்குப் பிறகு தொட்டு, பட்டு, மெட்டு போன்ற வார்த்தைகளையும், குருவிக்கு அடுத்ததாக அருவியும் இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் இடம்பெற்ற ‘புள்ளினங்காள்’ பாடல் முழுவதும் பறவையைப் பற்றியது.
பறவைகள் பற்றிய கவிதைகள் இருந்தாலும் தமிழில் அவற்றை இதுவரை யாரும் இசையமைத்துப் பாடியது இல்லை. அந்தக் குறையை எழுத்தாளர் பெருமாள்முருகனும், கர்னாடக சங்கீதப் பாடகர்கள் டி.எம்.கிருஷ்ணாவும் சங்கீதா சிவக்குமாரும் போக்கியிருக்கிறார்கள். இந்த அருமையான முன்னெடுப்பில் சிட்டுக்குருவி, ஆந்தை, காகம், பனங்காடை, குயில் ஆகிய பறவைகள் பாடல் பெற்றிருக்கின்றன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் டி.எம்.கிருஷ்ணாவின் யூடியுப் சேனலில் பார்க்கலாம் (https://www.youtube.com/playlist?list=PLqO4IxQaExl7YiDZvPfHG3hCPf69-AsOl).
பெருமாள் முருகனின் படைப்புகளில் இயற்கையை நுட்பமாக அவதானித்து எழுதப்பட்ட பல செய்திகளையும் குறிப்புகளையும், உயிரினங்களின் வட்டாரப் பெயர்களையும் காணலாம். தமிழில் பசுமை எழுத்தின் முன்னோடியான மா.கிருஷ்ணன், கலைக்களஞ்சியத்தில் எழுதிய பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும், வேடந்தாங்கல் பற்றிய குறுநூலையும் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ எனும் நூலாகத் தொகுத்தவர் பெருமாள் முருகன். இப்போது பறவைக் கீர்த்தனைகளுடன் வந்திருக்கிறார். பறவைகளின் பண்புகளை உற்றுநோக்கி அறிந்த, அவற்றின் சரியான பெயர்களையும் அறிந்த ஒருவர் இது போன்ற கீர்த்தனைகளை எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது.
கீர்த்தனை என்றாலே கடவுள் சார்ந்தது எனும் எண்ணத்தை மாற்றி இயற்கைக்கும் அதை உரித்தாக்கிய சங்கீதா சிவக்குமார் - டி.எம்.கிருஷ்ணா தம்பதியரும் அவரது குழுவினரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். இந்தப் பாடல்களை ரசிக்க கர்னாடக சங்கீத ஞானம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பறவைகளையும் இயற்கையின் கூறுகளையும் கொண்ட எந்த ஒரு கலைப் படைப்பும் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியுறச் செய்யும்.
இயற்கையையும் பறவைகளையும் போற்றி, வர்ணித்து மட்டும் எழுதாமல் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றைப் பாதுகாக்க நாம் அனைவரும் செய்ய வேண்டியவை குறித்தும் பாடல்கள் அதிகம் வர வேண்டும். எண்ணூர் கழிமுகம் குறித்து டி.எம்.கிருஷ்ணா பாடிய ‘புறம்போக்கு’ பாடலைப் போல பறவைகளுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் பாடல்கள் வர வேண்டும். பறவைகளோடு இல்லாமல், வண்ணத்துப்பூச்சி, தட்டான்கள், மரங்கள் எனப் பல்வேறு உயிரினங்கள் குறித்தும் இது போன்ற பாடல்கள் வர வேண்டும். பெருமாள் முருகன் – டி.எம்.கிருஷ்ணா தொகுப்பில் நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் ஆகிய இயற்கையின் அங்கங்களைப் பற்றியும், பனை மரத்தைப் பற்றியும்கூட கீர்த்தனைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு, கலைத் துறையில் இயற்கையின் மீது, இயற்கைப் பாதுகாப்பின் மீது ஆர்வம் உள்ள அனைவரும் இது போன்ற பல முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் தீட்சிதா வெங்கடேசனும் அருணும் பாடிய, அண்மையில் நாம் அனைவரையும் கவர்ந்த, மற்றுமொரு பாடல் ‘எஞ்சாயி எஞ்சாமி’. இதுபோல இயற்கை சார்ந்த ராப் பாடல்கள், கானா பாடல்கள் எல்லாம் வர வேண்டும்.
கலையின் எல்லா வகைகளிலும் வடிவங்களிலும் இயற்கையைப் போற்றவும் பாதுகாக்கவும் படைப்புகள் பலவும் படைக்கப்பட வேண்டும். அந்தந்தத் துறைசார் வல்லுனர்களின் கூட்டணிகள் பல உருவாக வேண்டும். இதற்குப் பறவைக் கீர்த்தனைகள் ஒரு முன்னோடியாகத் திகழும் என நம்புவோம்!
-ப.ஜெகநாதன், பறவையியலாளர், ‘பறவைகள்: அறிமுகக் கையேடு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jegan@ncf-india.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT