Published : 07 Dec 2015 09:30 AM
Last Updated : 07 Dec 2015 09:30 AM

ஒட்டகம், டாக்ஸி அல்லது ஐஎஸ்

முஸ்லிம் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் தீர்மானிப்பது அவர்களுடைய வாழ்க்கைச் சூழல்

பாரீஸ் தாக்குதலைப் பற்றிப் பேச விரும்புகிறேன். ஆனால், அதற்கு முன்னதாக இரண்டு புதிய விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது. ஒருவேளை அவை உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம்.

ஒன்று, துபாயிலிருக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்தில் குளோனிங் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு ஒட்டகம் பிரசவித்திருக்கும் கன்று பற்றியது. இரண்டாவது, அரேபிய நாடுகளில் தொடங்கப்பட்டிருக்கும் ‘உபர்’ டாக்ஸி சேவை. சம்பந்தமே இல்லாமல் அரேபியாவில் குளோனிங் செய்யப்பட்ட ஒட்டகத்தையும் தெருக்களில் ஓடும் டாக்ஸிகளையும் நான் பாரீஸுடன் தொடர்பு படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். என்னைக் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

குளோனிங் ஒட்டகம்

“உலகின் முதல் குளோனிங் ஒட்டகமான ‘இன்ஜாஸ்’ முதன் முறையாக ஒரு பெண் ஒட்டகக் குட்டியை நவம்பர் 2 அன்று ஈன்றெடுத்துள்ளது. 2009-ல் இறந்துபோன ஒரு ஒட்டகத்தின் கருப்பையிலிருந்து குளோனிங் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘இன்ஜாஸ்’. அரபு மொழியில் இன்ஜாஸ் என்றால் சாதனை என்று பொருள்.

முன்னதாக இது தொடர்பாக வெளியான வேறொரு தகவலையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். “இயற்கை யான ஒட்டகங்களைப் போலவே குளோனிங்கினால் உருவாக்கப்பட்ட ஒட்டகங்களும் கருவுற்று ஈன்றெடுக்க முடியும் என்பதை இது நிரூபிக்கும்” என இன்ஜாஸ் ஒட்டகம் கருவுற்றபோது இந்த மையத்தின் அறிவியல் இயக்குநரான மருத்துவர் நிசார் தெரிவித்தார்.

அடுத்து, செல்பேசி ஆப்ஸ் மூலமாகவே டாக்ஸியை முன்பதிவுசெய்யும் வசதியை ‘உபர்’ நிறுவனம் அரேபியாவிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது, கரீம்.காம் (Careem.com) என்ற பெயரில். இந்தப் புதிய தொழில்நுட்ப வசதி சார்ந்த கால் டாக்ஸி சேவை மூலமாக ஒரே வாரத்தில் இந்த நிறுவனம் ரூ.6 கோடி சம்பாதித்துவிட்டது. சவூதி அரேபியாவில் கால் டாக்ஸியின் வெற்றிக்கான காரணம், அங்கு பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி மறுக்கப்படுவது. ஆகையால், பெண்களும் குழந்தைகளும் வேறிடத்துக்குப் பயணிக்க அவர்களுக்கு நிச்சயமாக ஒரு ஓட்டுநர் தேவை. அதை இந்த டாக்ஸி சேவை பூர்த்திசெய்கிறது.

ஆக, ஈரான், சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஜிகாதிகள் தொழில்நுட்பத்தின் மூலமாக மிகப் பயங்கரமான நாசம் ஏற்படுத்துகின்றனர். வேறொரு அரேபிய நாட்டிலோ சில முஸ்லிம்களும் பிற மதத்தினரும் இணைந்து ஒட்டகங்கள் மற்றும் டாக்ஸிகளின் உலகை புரட்டிப்போடத் தொடங்கிவிட்டனர். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

வாழ்க்கைச் சூழலே தீர்மானிக்கிறது

அரேபியர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை யைப் பெரிதும் தீர்மானிப்பது அவர்களுடைய வாழ்க் கைச் சூழல். பல சமயங்களில் அவர்கள் எஸ்ஐஎஸ்ஐ அல்லது ஐஎஸ்ஐஎஸ் என ஏதோ ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்தாக வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருபுறம் எந்தவிதமான மாற்றுக் கருத்துகளுக்கும் இடம்கொடுக்காத எகிப்தின் அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிஸி. மறுபுறம் அரேபிய முஸ்லிம் உலகை பின்னோக்கி இழுத்துச் செல்வது மட்டுமே முன்னேறுவதற்கான ஒரே வழி என வெறிபிடித்து இயங்கும் ஐஸ் பயங்கரவாதிகள். அதிர்ஷ்டவசமாக மூன்றாவது மாற்று வழி ஒன்று உள்ளது. எதேச்சதிகாரத்தின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் ஏகாதிபத்தியத்தின் துர்நாற் றத்தை அப்புறப்படுத்தவும், பலவீனமான ஜனநாயகத்தை உதறித்தள்ளவும் முடிவெடுத்த முஸ்லிம் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

துனீசியா, ஜோர்டான், லெபனான், குர்திஸ்தான், குவைத், மொரோக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் முஸ்லிம் இளைஞர்கள் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுகிறார்கள். தங்களுடைய ஆற்றலை ஒட்டகத்தையும் கால் டாக்ஸியின் இயல்பையும் தலைகீழாகப் புரட்டிப்போடப் பயன்படுத்துகிறார்களே தவிர, பாரீஸையும், பெய்ரூட்டையும் சூறையாட அல்ல.

என்ன அணுகுமுறை தேவை?

இராக்கிலும் சிரியாவிலும் வேரூன்றியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சன்னி தீவுபோல அருமையான இடமாக அதை மாற்ற எத்தகைய அணுகுமுறை தேவை என்பதுதான் என் முன்னால் தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேள்வி. அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முதலில் பிரச்சினையை நான் நேர்மையாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

“உங்களுடைய சுதந்திரத்தை நான் பறித்துக் கொள்ளப் போகிறேன். அதற்குப் பதிலாக சிறந்த கல்வியையும், நீங்கள் உற்பத்தி செய்பவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கான பொருளாதாரத்தையும் உள்கட்டமைப்பையும் அமைத்துத் தருவேன். அடுத்த அரை நூற்றாண்டில் வளர்ந்து எழப்போகும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீங்கள் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்கும்” - சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் ஆசியாவை ஆண்ட சர்வாதிகாரிகள் இப்படித்தான் செயல்பட்டனர். அதே 60 ஆண்டுகளுக்கு முன்னால் அரேபிய மக்களை ஆட்சி செய்த சர்வாதிகாரிகளோ, “உங்களுடைய சுதந்திரத்தைப் பிரித்துக்கொண்டு அதற்குப் பதிலாக அரேபியர் , இஸ்ரேலியர் மோதலைப் பரிசளிக்கிறேன். இந்தக் கலவரத்தில் சிக்கிய பிறகு உங்களால் நான் செய்யும் ஊழலையும் சுரண்டலையும் கவனிக்க முடியாது” என்று செயல்பட்டனர்.

இப்போது ஆசிய நாடுகள் கண்டிருக்கும் வளர்ச்சியையும் ஏமன், லிபியா, சிரியா, இராக் உள்ளிட்ட அரேபிய நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், நான் சொல்வதில் உள்ள உண்மை விளங்கும்.

பொக்கிஷம்

இந்தப் பின்புலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சிலவற்றை மனதில் நிறுத்தி முன்னோக்கிச் செயல்பட வேண்டும். முதலாவதாக, ஒரு விதமான ஒழுங்கு தேவை என்றுதான் நான் நம்புகிறேன். ஒழுங்குபடுத்துதல் இல்லாமல் நன்மை விளைய வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு, அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிஸியின் ஆட்சியை எடுத்துக்கொண்டால், அங்கு ஒழுங்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது இன்னும் பண்பார்ந்த முறையில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், அதைச் செய்ய அதிபர் அப்தெல் தவறுகிறார். ஒழுங்கு என்பதைச் சட்டதிட்டமாக மட்டுமே பார்க்கிறாரே தவிர, நேர்மறையாக மாற்றத் தெரியவில்லை.

அடுத்து, ஐக்கிய அரபு நாடுகள், ஜோர்டான், குர்திஸ் தான் ஆகிய நாடுகள் அடுத்த வளர்ச்சி கண்டிருக்கின்றன. அவர்கள் இன்னும் பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அரசியலமைப் பையும் மேம்படுத்தினால் நன்மை விளையும். அரசியலமைப்பில் முன்னுதாரணமாகத் திகழும் துனீசியாவும் அதை பொக்கிஷம் போலப் பாதுகாக்க வேண்டும்.

குண்டு மட்டும் போதாது

ஐஎஸ்ஸை ஒழிக்கக் குண்டுகள் போடுவதில் தவறில்லை. ஆனால், அப்படியொரு நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னால் சிலவற்றைக் கட்டாயம் செய்ய வேண்டும். கொடிய ஐஎஸ் சன்னிகளை வீழ்த்துவதற்கு முன்பாக ஐஎஸ் அல்லாத நல்ல சன்னிகளை அடையாளம் கண்டு, அவர்களை மீட்டெடுத்துப் பாதுகாப்பான சூழலுக்கு இடம் மாற்ற வேண்டும். அண்டை நாடுகள் அனைத்தும் இந்தச் செயலில் கைகோத்துச் செயல்பட வேண்டும்.

ஆனால் இப்போது, குர்த் மக்களை வீழ்த்துவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொண்டிருக்கிறது துருக்கி. சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஒரே நோக்கம், ஒட்டுமொத்த இரானையும் ஈராக், ஏமன், சிரியா ஆகிய நாடுகளில் இரானுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் தவிடுபொடியாக்குவது மட்டுமே. கத்தார் அரசு சிரியாவின் முஸ்லிம்களைத் தூண்டிவிடுகிறது. மறுபுறம் சவூதியைச் சீண்டிக்கொண்டே இருக்கிறது. இராக் மற்றும் சிரியாவின் ஷியா மக்களை மட்டுமே கண்ணும் கருத்துமாய் பாதுகாக்க ஈரான் எத்தனிக்கிறது. ஆனால், அப்பாவி சன்னிக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முயற்சிக்கவில்லை. ஐஎஸ் பயங்கரவாதிகள் அல்லாத பல முஸ்லிம்கள் இன்னும் சிரியாவிலும் இராக்கிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நியாயத் தராசில் எடை போடுவது எப்படி? எனக்குத் தெரியாது. அதைக் கண்டறியும்வரை இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கையைத் தாண்டி எதையும் எடுக்க நான் துணிய மாட்டேன். பாரீஸ் நகரம் இன்று தலைகீழாக மாறிப்போயிருக்கலாம். ஆனால், மத்தியக் கிழக்கு மாறவில்லையே!

தமிழில்: ம. சுசித்ரா

© 'திநியூயார்க் டைம்ஸ்'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x