Published : 14 Dec 2015 09:01 AM
Last Updated : 14 Dec 2015 09:01 AM
நிவாரணப் பணிகள் சில நாட்களில் முடிந்துவிடும். மறுகட்டமைப்பு பல வருடங்கள் எடுக்கும்
“வீட்டில் முழங்கால் அளவு தண்ணீர். கதவுகளெல் லாம் ஊதிப்போய்விட்டன. கட்டில்கால்களுக்கு யானைக்கால் வியாதி. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் பிழைத்துவிட்டன. சேதம் அதிகம் இல்லை.”
“எவ்வளவு இருக்கும்?”
“இரண்டு லட்சத்துக்குக் குறையாது.”
இது எனது நெருங்கிய உறவினருடன் சென்ற வாரம் நிகழ்த்திய உரையாடலின் சுருக்கம். அவர் இருப்பது அண்ணா நகரின் மிக முக்கியமான தெரு ஒன்றில். கூப்பிடு தூரத்தில் கூவம் இருக்கிறது. அது வீட்டுக்கு அழைக்காத விருந்தாளியாக வந்ததால் நேர்ந்த இழப்பு.
அவர் வீட்டில் வேலை செய்பவர்கள் கை நீட்டினால் தொடும் அளவுக்கு ஆற்றோடு நெருக்கமானவர்கள். அவர்கள் இருந்த குடிசைகள் முழுவதுமாக அடித்துக் கொண்டு போய்விட்டன. அவர்களுடன் ஆற்றோரத்தில் வசித்துக்கொண்டிருந்த சிலருக்கு இருக்க மறு இடம் இருக்கிறது. பலருக்கு இல்லை.
இழப்புகள்
இது போன்ற உரையாடல்கள் கணக்கற்ற தடவை சென்னையில் சென்ற வாரம் நிகழ்த்தப்பட்டிருக்கும். அரசின் புள்ளிவிவரங்களின்படியே சுமார் 18 லட்சம் பேர் வீடிழந்து அரசு ஏற்பாடு செய்த இருப்பிடங்களில் தங்கியிருக்கிறார்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் நம் வீட்டிலேயே தங்கிவிடுவோம் என்ற முடிவெடுத்துத் தங்கியிருப்பவர்கள் இவர்களைவிடக் குறைந்தது இரண்டு மடங்காவது இருப்பார்கள். எனவே, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் 55 லட்சம் பேராவது இருப்பார்கள். இவர்களைத் தவிர, மேல்தளங்களில் இருப்பவர்களின் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களின் பழுதுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 55 லட்சம் பேருக்கு மட்டும் பெருந்துன்பம் என்று வைத்துக்கொண்டாலும், அது சிங்கப்பூர் நாட்டின் மொத்த ஜனத்தொகை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகின் சுமார் 60 நாடுகளின் ஜனத்தொகை இதைவிடக் குறைவு.
குறைந்தது 12 லட்சம் குடும்பங்கள் பொருளிழப்பைச் சந்தித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு இழப்பு ஒரு லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொண்டால் மக்கள் உடைமைகளின் இழப்பு மட்டும் 12,000 கோடி ரூபாய் வருகிறது. இதைத் தவிர, கட்டமைப்பு இழப்புகள் பல்லாயிரம் கோடிகள் இருக்கும்.
பெருவெள்ளங்கள்
இவ்வளவுக்கும் இதைப் பெருவெள்ளம் என்று சொல்ல முடியாது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தேவசகாயம் சொன்னார்: ‘மழையை நாம் ஒவ்வொரு வருடமும் கேட்கிறோம். இந்த ஆண்டு நாம் கேட்டதை விடக் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்துவிட்டான் ஆண்டவன். அவ்வளவுதான்’ உதாரணமாக, செம்பரம் பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து திறந்துவிட்ட தண்ணீர் டிசம்பர் ஒன்று, இரண்டாம் தேதிகளில் அதிகபட்சம் நொடிக்கு 30,000 கன அடி இருக்கும். சீன வெள்ளங்களில் திறந்துவிடப்படும் நீரின் அளவு இதைவிட 50 மடங்குகளாவது அதிகம் இருக்கும். இந்தியாவிலேயே சென்னையைப் போல சூரத் நகரமும் கடலோரத்தில் இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய நதிகளின் ஒன்றான தப்தி, சூரத் நகர் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. நகரத்துக்கு 90 கி.மீ. தொலைவில் இருக்கும் உக்காய் அணைக்கட்டிலிருந்து வெள்ள ஆண்டுகளில் நொடிக்கு மூன்றிலிருந்து நான்கு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 2006-ல் சூரத் நகர் பெரு வெள்ளத்தைச் சந்தித்தது. 2013-ல் கூடவெள்ளம் வந்தது. ஆனாலும் மக்கள் சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், சென்னை வெள்ளம் வித்தியாசமானது. ஏன்?
இழப்பின் பரிணாமங்கள்
2015-ல் மட்டும் சீனா முழுவதும் வெள்ளத்தால் சுமார் 13,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 29 பிரதேசங்களில், ஐந்து கோடிப் பேருக்கு மிகப் பெரிய நிலப்பரப்பில் நேர்ந்த இழப்பு இது. இதற்கு கிட்டத்தட்ட ஈடான இழப்பு ஒரு மிகச் சிறிய நிலப்பரப்பில் 55 லட்சம் மக்களுக்கு மட்டும் நிகழ்ந்திருக்கிறது. இந்த இழப்பைத் தவிர, கட்டுமான இழப்புகள், தொழிற்சாலைகளுக்கு நேர்ந்த இழப்புகள், 10 நாட்களாக முழு நகரமே முடங்கிக் கிடந்ததால் நேர்ந்த இழப்புகள் இவை அனைத்தையும் கணக்கில்கொண்டால், சென்னைக்கு நிகழ்ந்திருக்கும் இழப்பின் பரிணாமங்கள் மலைக்க வைப்பவை என்பது நமக்கு விளங்கும். வெள்ளம் இரு நாட்களில் வடிந்துவிட்டது. அதன் விளைவால் சென்னை யும் தமிழகமும் சந்திக்க இருக்கும் பொருளாதாரப் பேரிடர் பல ஆண்டுகளுக்கு நமது முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளலாம். அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். நிவாரணப் பணிகள் தற்காலிகமானவை. சில நாட்களில் முடிந்து விடும். மறுகட்டமைப்பு பல வருடங்கள் எடுக்கும்.
பொருளாதாரப் பேரிடர்
சென்னையின் பொருளாதார வளர்ச்சி முக்கியமாக மூன்று தொழில்களைச் சார்ந்திருக்கிறது ரியல் எஸ்டேட், இரு, நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி மற்றும் அவற்றின் உபரி பாகங்கள், தகவல் தொழில்நுட்பம். இவற்றில் ரியல் எஸ்டேட் கடுமை யான பிரச்சினைகளைச் சந்திக்க இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பல மாடிக் கட்டிடத் தீவுகளில் வசிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஏற்கெனவே இறங்குமுகத்தில் இருந்த இந்தத் தொழில் சென்னையில் பெருவீழ்ச்சியை எதிர்கொள்ளலாம். ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வெள்ளவடிகால்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை இப்போது தொழில் அதிபர்கள் புரிந்துகொண்டார்கள். டிசிஎஸ் நிறுவனம் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை 65,000 பணியாளர்கள் அநேகமாக முற்றிலும் செயலிழந்துவிட்டதால் ஏற்பட்ட இழப்பு கணிசமாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. டிசிஎஸ்ஸுக்கு ஏற்பட்டதுதான் பல தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, சென்னையில் முதலீடு செய்யத் தொழிலதிபர்கள் மிகவும் யோசிப்பார்கள். முடிந்தால் மாநிலத்தை விட்டு வெளியேறத்தான் பார்ப்பார்கள். இது நடந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் விபரீதமாக இருக்கும். இதைத் தடுக்க அரசு உடனடியாக பெருந்தொழிலதிபர்களுடன் கலந் தாலோசிக்க வேண்டும். அரசு அதிகாரிகளையும் தொழிலதிபர்களையும் கொண்ட குழுக்களை அமைத்து மறுகட்டமைப்பைத் தீவிரப்படுத்தும் வழிமுறை களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக லஞ்சத்துக்கு நிரந்தர விடுமுறை கொடுக்கிறோம் என்று அறிவித்து, அதைச் செயல்படுத்தவும் வேண்டும்.
மறுகட்டமைப்பு
மறுகட்டமைப்புக்குத் தேவையான நிதி தமிழக அரசிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. தமிழக அரசுக்கு ஏற்கெனவே சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு களில் அது 92% அதிகரித்து, மிக வேகமாகக் கடன் வாங்கும் மாநிலங்களில் முதன்மையானது என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு தமிழன் மீதும் சுமார் 30,000 ரூபாய் கடன் சுமை ஏற்கெனவே இருக்கிறது. மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்றாலும் பெருஞ்சுமையை மாநில அரசு ஏற்றுத்தான் ஆக வேண்டும். வரும் தேர்தலுக்கு முன்னால் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டால் அரசுக்கு வரக்கூடிய வருமானத்தில் குறைந்தது 26,000 கோடி ரூபாய் துண்டு விழும். இதைத் தவிர, காத்திருக்கும் பூதம் ஒன்று இருக்கிறது. ஏழாவது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். அதற்குப் பல ஆயிரம் கோடிகள் வேண்டும்.
எப்படிச் சமாளிப்பது?
தமிழக அரசு மொத்தத் தமிழர்களின் அரசாகச் செயல்பட்டால் எந்த இடரையும் நிச்சயம் சமாளிக்க முடியும்.
பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT