Published : 18 Dec 2015 09:55 AM
Last Updated : 18 Dec 2015 09:55 AM
நவீன இந்திய இதழி யலின் மாற்று முகம் ‘அவுட் லுக்’ என்றால், வெகுஜன முகம் ‘இந்தியா டுடே’. அதேநேரம் இந்திய வார இதழியலின் பொற்காலம் ‘இந்தியா டுடே’யின் வருகைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
புகழ்பெற்ற அமெரிக்க வார இதழான ‘டைம்’-ஐ பல வகைகளில் அடியொற்றி வெளியா னாலும், நவீன இந்திய இதழியலைப் பொறுத்தவரை ‘இந்தியா டுடே’ எடுத்த வைத்த பல அடிகள், முன்னோடியாக அமைந்து புதிய பாதையை வகுத்தன.
இதழ் வடிவமைப்பிலும், அழகான காட்சிப்படுத்து தலிலும் பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்தியது ‘இந்தியா டுடே’. ‘பேக் ஆஃப் தி புக்’ என்று அழைக்கப்படும் சமூகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் சார்ந்த இதழியலின் வளர்ச்சிக்கு ‘இந்தியா டுடே’ மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறது.
ஒரு பக்கம் ஆண்டு இறுதிச் சிறப்பிதழ்களால் புகழ்பெற்ற ‘இந்தியா டுடே’, செக்ஸ் சிறப்பிதழ்க ளுக்காகச் சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறது. ‘இட ஒதுக்கீடு’ போன்ற நாடு தழுவிய பிரச்சினைகளிலும், வி.பி. சிங் போன்ற ஒருசில அரசியல் தலைவர்கள் சார்ந்தும் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுத்ததற்காக விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி ஏற்றஇறக்கங்கள் நிரம்பிய ‘இந்தியா டுடே’ இதழின் 40-வது ஆண்டு சிறப்பிதழ் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதழைப் பிரித்தவுடன் நம்மை ஆச்சரியப்படுத்துவது அதில் பங்களித்துள்ள இதழியல் ஆளுமைகள்தான். அதன் இரண்டு தலைமுறைப் பயணத்தில், நவீன இந்திய இதழியலின் ஆளுமைகள் பலரும் அங்கே உருவாகியிருக்கிறார்கள் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குப் பங்களித்திருக்கிறார்கள்.
அந்தப் பெரிய பட்டியலில் குறிப்பிடத் தக்கவர்கள்: வீர் சங்க்வி (‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ முன்னாள் ஆசிரியர்), பிரபு சாவ்லா (‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் குழு இயக்குநர்), சேகர் குப்தா (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ முன்னாள் தலைமை ஆசிரியர்), எம்.ஜே. அக்பர் (‘ஏசியன் ஏஜ்’ முன்னாள் ஆசிரியர்), தருண் தேஜ்பால் (‘டெஹல்கா’ நிறுவனர்), காவேரி பம்ஸாய் (‘இந்தியா டுடே’ குழும ஆசிரியர்), ராஜ் செங்கப்பா (‘இந்தியா டுடே’ தற்போதைய ஆசிரியர்).
கடந்த 40 ஆண்டு காலத்தில் நாட்டில் திருப்பு முனையாகத் திகழ்ந்த அம்சங்களை, ‘இந்தியா டுடே’ குழுமத்தில் பங்களித்த பத்திரிகை ஆளுமைகள் விரிவான கட்டுரைகள் மூலம் இந்தச் சிறப்பிதழில் பதிவு செய்திருக்கிறார்கள். பொதுவாகவே அரசியலுக்கு இணையாகச் சமூகத்தின் மற்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘இந்தியா டுடே’, 40-வது ஆண்டு சிறப்பிதழில் அரசியலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பது சற்றே ஏமாற்றத்தைத் தருகிறது.
அதேநேரம் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ரகு ராய் எடுத்த அபூர்வமான இந்திரா காந்தியின் ஒளிப்படங்கள், ‘இந்தியா டுடே’ ஆசிரியர் குழுவினரைப் பற்றி அஜித் நைனனின் கேலிச்சித்திரங்கள், ரவிசங்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கேலிச்சித்திரங்கள் அந்த ஏமாற்றத்தைத் தூர விரட்டிவிடுகின்றன.
இந்த 350 பக்கச் சிறப்பிதழுக்கு ஒரு பதம்: காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி எப்படிக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்பதை அற்புதமாகச் சித்தரிக்கும் கறுப்பு வெள்ளைப் படங்கள்.
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT