Last Updated : 23 May, 2021 06:14 AM

7  

Published : 23 May 2021 06:14 AM
Last Updated : 23 May 2021 06:14 AM

பெர்ட்ரண்ட் ரஸல்: கலகக்காரச் சிந்தனையாளர்

தத்துவ அறிஞர், தர்க்கவியலாளர், கணிதவியலாளர், கல்வியாளர், அரசியலர், பொருளியலாளர், எழுத்தாளர் என்று தனது பன்முக ஆளுமையால் 20-ம் நூற்றாண்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸல் (1872-1970). அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்கியங்கள் இன்றளவும் தொடர்ந்து மேற்கோள்காட்டப்படுகின்றன. அவர் எழுதிய ‘மேலைநாட்டுத் தத்துவ வரலாறு’ தத்துவ மாணவர்களின் முதன்மையான பாடநூல்களில் ஒன்று. அவர் கையாண்ட பகுப்பாய்வு முறைகள் இன்றைய ஆய்வுலகத்தை வழிநடத்துகின்றன. சமயத்திலிருந்து தத்துவத்தை விடுவித்த நவீனச் சிந்தனையாளர்களில் ரஸலும் ஒருவர். நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களில்கூட தர்க்க அறிவு பயன்படும் என்று கருதுவது பெரும் பிழை என்று சுட்டிக்காட்டியவர். சமயத் தலைவர்களின் அதிகார வேட்கையைக் கேள்விக்கு உட்படுத்தியவர்.

ரஸலின் குடும்பத்தினர் பிரிட்டனில் முற்போக்குச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்டவர்கள். அவரின் பாட்டனார் ஏர்ல் ரஸல் பிரிட்டிஷ் அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது 1832-ல் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்தச் சட்ட முன்வடிவுதான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற இயக்கத்துக்கான முதல் புள்ளி. பின்பு, அவர் இரண்டு முறை பிரிட்டிஷ் பிரதமராகவும் பதவி வகித்தார். ரஸலின் பெற்றோர்கள் பெண்ணுரிமைக்காகவும் குழந்தைக் கட்டுப்பாட்டு உரிமைக்காகவும் போராடியவர்கள். ஆனால், ரஸல் நான்கு வயதை அடைவதற்கு முன்பே அவர்கள் இருவரும் காலமாகிவிட்டனர். பாட்டியின் பராமரிப்பில்தான் வளர்ந்தார் ரஸல். பெற்றோர்களின் சிந்தனைகள் எதுவும் குழந்தைக்கு வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்த பாட்டிக்கு, பேரனையும் தாத்தாவைப் போல பிரிட்டிஷ் பிரதமராக்கிவிட வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. ஆனால், பதின்பருவத்திலேயே ஜான் ஸ்டூவர்ட் மில்லைப் படித்து முடித்துவிட்ட ரஸல், ஒரு கலகக்காரராகத்தான் உருவெடுத்தார்.

இலக்கிய நோபல் பரிசு

1950-ல் ரஸலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயக் கருத்துகளையும் சுதந்திரச் சிந்தனைகளையும் கொண்ட பல்துறை சார்ந்த குறிப்பிடத்தக்க எழுத்துப் பணிகளைப் பாராட்டி அந்தப் பரிசு வழங்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் பிபிசியில் தொடர்ந்து வெளிவந்த வானொலிப் பேட்டிகள் அவரை மென்மேலும் பிரபலமாக்கின. ஆனால், இந்த உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்குள் அவர் தனது வாழ்க்கையில் படாதபாடு பட வேண்டியிருந்தது. உலகின் முக்கியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் விரிவுரையாற்றும் வாய்ப்புகளைப் பெற்றவர் என்றபோதும் ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்புகளுக்காக அவர் அலைக்கழியவும் நேர்ந்தது.

கல்லூரிப் படிப்பில் கணிதமும் தத்துவமும் அவரது பாடங்களாக இருந்தன. ஆய்வுப் படிப்பில் தனது சக மாணவரும் தன்னைவிடவும் ஐந்து வயது மூத்தவருமான ஆலீஸைக் காதலித்து 21 வயதில் மணந்துகொண்டார். இருவரும் தேனிலவு முடிந்தவுடன் பொருளாதாரத்தில் ஒரு ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க பெர்லின் பல்கலைக்கழகத்தின் விரிவுரை வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஜெர்மனி சமுதாய ஜனநாயகக் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டனர். ஐரோப்பாவிலேயே மிகவும் புரட்சிகரமானவர்களாகக் கருதப்பட்ட அந்த அமைப்பினரோடு மற்றவர்கள் நெருங்கிப் பழக அஞ்சிய காலம் அது.

1917-ல் ரஷ்யப் புரட்சியைப் பாராட்டி வரவேற்ற ரஸல் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்குப் புறப்பட்டார். ஆனால், அவரது அனுபவங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. ஜாரின் கொடுங்கோலாட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ ஆட்சியைச் சிறந்ததாகக் கருதினார் என்றாலும் கம்யூனிஸ அமைப்பின் பெயரில் நிலவும் சர்வாதிகாரத்தின் அபாயங்களை எச்சரித்துத் தனிப் புத்தகம் எழுதிய முதல் இடதுசாரியும் அவர்தான். அரசு அதிகாரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஜனநாயக சோசலிஸத்தையே அவர் விரும்பினார்.

சீனாவிலும் சில காலம் தத்துவத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். அங்கு, இடதுசாரிக் கருத்துணர்வும் பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வமும் கொண்ட டோரா ப்ளாக் உடன் அடுத்த காதல் அரும்பியது. இங்கிலாந்து திரும்பியதும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதற்கு முன்பே ஆலீஸ் உடனான உறவு முடிவுக்கு வந்திருந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் டோராவுடனான உறவும் முறிந்தது. பின்பு, பாட்ரிஸியா ஸ்பென்ஸைத் திருமணம் செய்துகொண்டார். அதற்கும் பிறகான நான்காவது மண உறவுதான் அவரது கடைசி காலம் வரைக்கும் தொடர்ந்தது.

மாற்றுக் கல்வி முறை

இயற்பியல், கல்வி, சமயம், குடும்ப அமைப்பு, நீதிமுறை என்று பல துறைகள் சார்ந்தும் குறிப்பிடத்தக்க நூல்களை ரஸல் எழுதியிருக்கிறார். இரண்டு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் புத்தகங்கள் எழுதி அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தையே அவர் பெரிதும் சார்ந்திருந்தார் என்பதால் தொடர்ந்து எழுதிக் குவித்தார். ஒவ்வொரு புத்தகமும் தொடர்புடைய துறைகளில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின. புதிய கல்வி முறையானது குழந்தைகளைச் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும் சுதந்திரச் சிந்தனையாளர்களாகவும் சமூகப் பொறுப்பு கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்று கனவுகண்டார். குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி அளிக்க வேண்டியதைப் பற்றித் தீவிரமாகப் பேசிய முன்னோடியும்கூட. டோராவுடன் இணைந்து பீகன் குன்றில் அவரே ஒரு பரிசோதனைப் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். அந்த முயற்சி தொடரவில்லை.

பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்குச் செல்வதற்குக் கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டார் என்றாலும் அது ரஸலுக்கு எளிதாக அமையவில்லை. சர்ச்சைக்குரிய கருத்தாளராக அவர் பிரபலமாகிவிட்டிருந்ததே அவரது கல்வித் துறை வாய்ப்புகளையும் தாமதப்படுத்தியது. 1930-களின் இறுதியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றும் வாய்ப்பைப் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகும் வாய்ப்பு கிடைத்ததும் அமெரிக்காவுக்குக் குடும்பத்துடன் புறப்பட்டார். தொடர்ந்து வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய நிலையில் இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. வேலைவாய்ப்புகளை இழந்து நாடு திரும்பவும்கூடக் கையில் பணமின்றித் தவித்த நாட்கள் அவை. போர் ஓய்ந்து இங்கிலாந்து திரும்பியபோது, ட்ரினிட்டி கல்லூரி அவரை ஆதரித்தது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்ததும் ஒரு காரணம். ஏற்கெனவே அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வரலாறும் அவருக்கு உண்டு.

சமய நம்பிக்கைகளைக் குறித்த கடுமையான விமர்சகராக இருந்தார் பெர்ட்ரண்ட் ரஸல். பொதுக் கருத்துக்கு எதிரானவையாகவே அவரது விமர்சனங்கள் அமைந்திருந்தன. மதங்கள் பொய்யாக மட்டுமின்றி, ஆபத்துகளையும் விளைவிக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பது அவரது பார்வை. ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல?’ என்ற அவரது புத்தகம் மிகவும் பிரபலமானது. தமிழில் குத்தூசி குருசாமி மொழிபெயர்ப்பில் அந்நூல் அறிமுகமானது. காஞ்சா அய்லய்யா, இபின் வாரக், இவான் தாம்ப்சன், வந்தனா சோல்கர், சசி தரூர் என்று பலரும் இந்தத் தலைப்பைத் தழுவி தங்களது புத்தகங்களுக்கான தலைப்பை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ரஸலின் கல்விச் சிந்தனைகள் தமிழகத்தின் இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளால் இன்றும் குறுநூல்களாக வெளியிடப்பட்டுவருகின்றன.

அறிவை மட்டுமே துதிக்கும் அறிஞர்களுக்கு மத்தியில் ‘அறிவோடு அன்பும் சேர்ந்த உலகில்தான் நாகரிகம் தழைத்தோங்கும்’ என்றவர் ரஸல். பனிப்போருக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைக் கைவிடக் கோரியும் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் அந்த உணர்வுதான் அவரைப் போராட வைத்தது. இரு உலகப் போர்களுக்குப் பின்பும் வெடிமருந்துகளின் நெடி வீசிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் ரஸலின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டட்டும்.

மே 18: பெர்ட்ரண்ட் ரஸல் 150-வது ஆண்டு தொடக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x