Published : 17 Dec 2015 11:36 AM
Last Updated : 17 Dec 2015 11:36 AM
பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி இங்கெல்லாம் ஏராளமான அணைகளைப் பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள். வைகை ஆற்றங்கரையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் பாண்டிய செழியன் சேந்தன் வைகையில் மதகு கட்டியதையும் அரிகேசரி என்கிற கால்வாயை வெட்டியதையும் அறிய முடிகிறது. மதுரை சோழவந்தான் தென்கரை கண்மாயை உருவாக்கியதும் செழியன் சேந்தனே. அவை இன்றும் பயன்பாட்டில் இருப்பது பாண்டியர்களின் தலைசிறந்தப் பாசனக் கட்டுமானங்களுக்கு சாட்சியாக இருக்கின்றன.
சங்க காலத்தில் இருந்தே முற்கால பாண்டியர்களும் பாசனக் கட்டுமானங்களை அமைப்பதிலும் பராமரிப்பதிலும் ஈடுபாட்டை காட்டினார்கள். பாண்டிய நாட்டில் உள்ள சில பாசனக் குளங்களை ஆய்வு செய்த மறைந்த நீரியல் வல்லுநரான முனைவர் பழ.கோமதிநாயகம் அவை கி.பி. 300-க்கும் முன்னரே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். முற்கால பாண்டியர் காலத்தில் மதுரை குருவித்துறைக்கும் தென்கரைக்கும் (சோழவந்தான்) இடையே வைகை ஆற்றின் தென்புறம் வெட்டப்பட்ட பெரிய கால்வாய் மேலக்கால், நாகமலை புதுக்கோட்டை வழியாகச் சென்று நிலையூர், மாடக்குளம், கூத்தியார்குண்டு ஆகிய ஊர்களின் கண்மாய்களை நிரப்பியிருக்கிறது. சமண மலையில் உள்ள முற்கால பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் இதை ‘நாட்டாறு’ என்று குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மா.சந்திரமூர்த்தி, வெ.வேதாசலம் (பராக்கிரம பாண்டியபுரம்).
மதுரை செக்கானூரணி அருகே உறப்பனூரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீர் அடுத்தடுத்து சங்கிலித் தொடராக எட்டு ஏரிகளை நிரப்புகிறது. இதன் உள்வாய் கல் மடையின் ஒரு தூணில் ‘வீரநாராயணன்’ என்றும், மற்றொரு தூணில் ‘ஸ்ரீ கரிவரமல்லன்’ என்றும் தமிழ் கிரந்த எழுத்துக்களில் முற்கால பாண்டிய மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பிற்கால பாண்டியர்களும் ஏராளமான அணைக்கட்டுகளை கட்டினார்கள். அவர்கள் திருக்கோவிலூர் அணையில் மதகு அமைத்து வாய்க்கால் வெட்டினார்கள் என்கிறது விக்கிரம பாண்டியன் கல்வெட்டு.
இன்றைய மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் அவர்கள் கட்டிய அணைகளும் ஏராளம். நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி மாவட்டம்) பழையாற்றின் குறுக்கே இவர்கள் கட்டிய பாண்டியன் அணைக்கட்டுகளைப் பார்த்து ஆங்கிலேய பொறியாளர்கள் வியந்துப்போனார்கள். அவற்றை மக்கள் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள். பாண்டியன் அணையை 1750-ல் முதலாவது திருவிதாங்கூர் மன்னரான மார்தாண்டவர்ம ராஜா புதுப்பித்தார். அதுதான் புத்தன் அணை என அழைக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள். புத்தன் அணை என்றால் மலையாளத்தில் புதிய அணை என்று அர்த்தம்.
இப்படி மதுரையிலும் கன்னியாகுமரியிலும் நம் முன்னோர்கள் அமைத்த நீர் நிலைகளின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதே மதுரையிலும் கன்னியாகுமரியிலும் நாம் என்ன செய்தோம்? ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 959 குளங்களும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 2,593 குளங்களும் இருந்தன. இவற்றில் சுமார் 3,500 குளங்கள் இன்று அழிந்துவிட்டன. இதனால், குமரி மாவட்டத்தின் விவசாயமும் அழிந்துவருகிறது. 1982-ம் ஆண்டு 46,000 ஏக்கராக இருந்த குமரியின் நெல் சாகுபடி, தற்போது 18 ஆயிரம் ஏக்கராக சுருங்கிவிட்டது. நாகர்கோவிலில் மட்டும் கண் முன்னாலேயே ஐந்து குளங்களை மூடிவிட்டார்கள் என்று வேதனைப்படுகிறார் அ.கா.பெருமாள்.
நாகர்கோவிலின் செம்மாங்குளம் அண்ணா பேருந்து நிலையமாகிவிட்டது. கள்ளர்குளம் அண்ணா விளையாட்டு மைதானமாகிவிட்டது. இந்தக் குளத்தில்தான் முன்பு இடலாபுரத்தில் இருந்த கிளை சிறைச்சாலையின் கைதிகளை அழைத்து வந்து குளிக்க வைத்தார்கள். எழுத்தாளர் சுந்தரராமசாமி தனது ‘ஒரு புளிய மரத்தின் கதை’யில் இந்தக் குளத்தின் நாற்றம் தாங்க முடியாமல் மூடிவிட்டதாக கற்பனையாக ஒரு காலத்தில் எழுதினார். பிற்காலத்தில் அது உண்மையாகவே ஆகிவிட்டது. வடசேரி குளம் கிறிஸ்டோஃபர் பேருந்து நிலையமாகிவிட்டது. நாகராஜா குளம் நாகராஜா நகராட்சி திடலாகிவிட்டது. பெதஸ்தா குளம் வணிகக் கட்டிடங்களாகிவிட்டது.
இவை மட்டுமின்றி இன்னும் அழியக் காத்திருக்கின்றன குளங்கள். நாகர்கோவில் - பூதப்பாண்டி சாலையில் புத்தேரி பெரிய குளம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆகாயத் தாமரைகளாலும் புதர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தரும் குளம் இது. குளத்தை ஆக்கிரமித்து நில வணிக முயற்சிகளும் தொடங்கியிருக்கின்றன. இதே நிலைதான் தாமரைக் குளத்துக்கும்.
மதுரை கண்மாய்களின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அங்கு 30 கண்மாய்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 7 மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. சிலையனேரிக் கண்மாய், ஆணையூர் கண்மாய், ஆ.கோச குளம் கண்மாய்களில் வீடுகள் கட்டி குடியிருக்கிறார்கள். தத்தனேரி கண்மாயும் செல்லூர் கண்மாயும் தென்னக ரயில்வேயால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பீ.பீ.குளம், சொரிக்குளங்களை வருமான வரித்துறை, சுங்கத்துறை, அஞ்சல் துறை, வருங்கால வைப்பு நிதி, வணிக வரித் துறை ஆகிய துறைகள் பங்கிட்டுக்கொண்டன.
தல்லாகுளத்துக்குள்தான் மதுரை மாநகராட்சி அலுவலகமும் சட்டக் கல்லூரியும் உலகத் தமிழ்ச் சங்கமும் அமைந்திருக்கின்றன. வண்டியூர் கண்மாய் மாட்டுத்தாவணி பேருந்து நிலையமாகிவிட்டது. செங்குளம் மாவட்ட நீதிமன்றமாகிவிட்டது. உலகனேரி உயர் நீதிமன்றமாகிவிட்டது. புதுக்குளம் செய்தியாளர் நகராகிவிட்டது. புதூர் கண்மாய் மாவட்ட அலுவலர் குடியிருப்பாகிவிட்டது. வில்லாபுரம் கண்மாய் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளாகிவிட்டன. அவனியாபுரம் கண்மாய் குப்பைக்கிடங்கு ஆகிவிட்டது. முடக்கத்தான் கண்மாய், அனுப்பானடி சின்னக் கண்மாய், சிந்தாமணி கண்மாய், துணியாத்திக் கண்மாய், ஜலந்தன் கண்மாய், அயன் பாப்பாக்குடி கண்மாய், நாராயணபுரம் கண்மாய், ஆத்திக்குளம் இவை எல்லாம் கழிவு நீர் காப்பகங்களாகிவிட்டன.
வரலாற்றில் ஏராளமான வெள்ளங்களை சந்தித்திருக்கிறது மதுரை. சென்னையில் இப்போது வெள்ளம் வந்ததைப் போல மதுரையிலும் வெள்ளம் வராது என்பது என்ன நிச்சயம்?
(நீர் அடிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT