Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM
பண்டிதர் அயோத்திதாசர் (1845 - 1914) சிந்தனையாளர், பத்திராதிபர் மட்டுமல்ல; தலைசிறந்த சித்த மருத்துவரும்கூட. அவரது சமூகச் செயல்பாடு, பௌத்த வரலாற்று மீட்டெடுப்பு ஆகிய முகங்கள் வெளிவருவதற்கு முன்பே அவரது மருத்துவர் அடையாளம் பிரபலமாகியிருந்தது.
தன் பாட்டனார் கந்தப்பன், தந்தையார் கந்தசாமியைப் போல அயோத்திதாசரும் வைத்தியம், ஓலைச்சுவடி வாசிப்பு, நாள்கோள் கணிப்பு, ஜோதிடம், இலக்கிய பாண்டித்தியம் பெற்றிருந்தார். தந்தை கந்தசாமி மயிலாப்பூரில் வைத்தியம் பார்த்ததால் இவருக்கும் இளமையிலே வைத்தியத்தில் பரிச்சயம் ஏற்பட்டது. பின்னர் ‘போகர் எழுநூறு’, ‘அகத்தியர் பரிபாஷை இருநூறு’, ‘பாலவாகடம்’, ‘புலிப்பாணி வைத்தியம் ஐந்நூறு’ உள்ளிட்ட மருத்துவ நூல்களை அச்சுக்குக் கொண்டுவந்த கவிராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதரிடம் மாணவராகச் சேர்ந்தார். அவரிடம் மரபான கல்வியும் மருத்துவமும் முறைப்படி கற்ற இவர், ‘காத்தவராயன்’ எனும் தன் பெயரை ‘அயோத்திதாசர்’ என மாற்றிக்கொண்டார்.
திருவிகவுக்கு வைத்தியம்
அயோத்திதாசரின் குடும்பம் ஆங்கிலேய அதிகாரிகளுடன் தொடர்புடையது என்பதால் அவரது வாழ்க்கை 1890 வரை சென்னையிலும் நீலகிரியிலும் மாறிமாறிக் கழிந்தது. நீலகிரியில் ‘துளசி மாடம்’, ‘அத்வைதானந்த சபை’ உள்ளிட்டவற்றை நிறுவி 17 ஆண்டுகள் சமூகச் செயல்பாட்டுடன் மருத்துவமும் பார்த்தார். ‘அக்காலத்தில் அயோத்திதாசர் பெயர் பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். அதனால், மாதம் ரூ.70 முதல் ரூ.100 வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு செல்வாக்காக இருந்தார்’ என ஆங்கிலேய போலீஸாரின் உளவு அறிக்கைகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
1900-களில் சென்னை ராயப்பேட்டையில் ‘புத்திஸ்ட் மெடிக்கல் ஹால்’ நிறுவி, பிரபல மருத்துவராக இருந்தார். இதைப் பற்றி விரிவான தகவல்கள் கிடைக்காத நிலையில் தமிழ்த் தென்றல் திருவிகவின் நாட்குறிப்பில் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதில் திருவிக, “முடக்குவாத நோயினால் அவதிப்பட்ட எனக்குப் போலி மருத்துவர் கொடுத்த மருந்தைத் தின்று நோய் முற்றிப்போனது. அப்போது ராயப்பேட்டையில் சிறந்த மருத்துவராக இருந்த அயோத்திதாஸ் பண்டிதர் விதவிதமாகச் சிகிச்சை அளித்தார். முழங்காலுக்குத் தைலம் பூசி கொஞ்ச காலம் ஆனாலும் முடக்குவாதத்தைக் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கையூட்டினார். மெழுகு, ரசாயனம், பஸ்பம், கிருதம், சூரணம் என வரிசையாக ஓராண்டுக்கு மருந்து கொடுத்தார். பலவித மருத்துவச் சோதனைகளுக்குப் பிறகு பண்டிதர், ‘இதயம் நன்றாக இருக்கிறது. நாடியும் செம்மையாக ஓடுகிறது. புது மருந்து எடுப்பதற்கு முன் குடலுக்கு ஓய்வு தேவை’ என ஒரு மாதம் கழித்துப் புது மருந்தைக் கொடுத்தார். அது என்ன முருக மருந்தோ தெரியவில்லை. அது செய்த அற்புதத்தால் குணமடைந்தேன். ஒரு மாதம் மீண்டும் தைலம் பூசிய பின் முடங்கிய கைகளும் கால்களும் நீண்டன. உடலும் தேறியது. முடவன் என்ற பெயர் நீங்கி எழுந்து நிற்கத் தொடங்கினேன்” என நெகிழ்ச்சியோடு விவரித்திருக்கிறார்.
சமூக மருத்துவர்
அயோத்திதாசர் ‘தமிழன்’ இதழ் (1907 - 1914) காலகட்டத்தில் பிளேக், காலரா, பெருவாரிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தலைவிரித்தாடின. மருத்துவரே பத்திரிகை ஆசிரியராக இருந்ததால் அதன் தீவிரம் உணர்ந்து ஆரம்ப இதழில் தொடங்கி கடைசி இதழ் வரை நோய் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார். பிளேக், காலரா போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்தில் அதைத் தடுப்பதற்கான முறைகளையும், அதிலிருந்து தப்பிப்பதற்கான மருத்துவக் குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். சில மருந்துகளின் பெயர்களையும், மருத்துவ நூல்களையும் பரிந்துரைத்த அயோத்திதாசர் அதுவரை அச்சில் வராமல் இருந்த ‘அகஸ்தியர் விவேகப்பத்து’, ‘அகஸ்தியர் விவேகதசபாரதம்’, ‘கடுவெளி சித்தர் பாடல்’ உள்ளிட்டவற்றை ‘தமிழன்’ இதழில் பிரசுரித்தார்.
பிளேக் நோய் நாக்பூரில் பரவத் தொடங்கியதிலிருந்து பஞ்சாப், பம்பாய், பெங்களூர், சேலம் என மாகாண, மாவட்ட வாரியாகவும் தொடர்ச்சியாக விவரங்களை வெளியிட்டிருக்கிறார். பிளேக் நோயின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை முறை, பலியானோர் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நோய் பரவாமல் இருக்க வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்களைத் தனிமைப்படுத்தும் முறை இருந்ததும் 18.9.1912 தேதியிட்ட ‘தமிழன்’ இதழ் மூலம் தெரியவருகிறது.
சாதி நோய்
உடலைத் தாக்கும் நோய் குறித்து விழிப்புணர்வூட்டிய அதே சமயத்தில் அயோத்திதாசர் சமூகத்தைத் தாக்கிய சாதி நோய் குறித்தும் சாடியிருக்கிறார். சாதிப் பாகுபாட்டின் காரணமாக, சுத்தமான நீரை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த முடியாத நிலை, சுகாதாரமற்ற சூழல், அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றின் காரணமாகவே கொள்ளைநோய் (பெருவாரிக் காய்ச்சல்) பரவியது எனக் குற்றஞ்சாட்டுகிறார்.
23.10.1912 அன்றைய இதழில், ‘சுதந்திரம், சுதேசி, தேசப்பற்று எனப் பெருங்கூச்சலிட்டுப் பெருங்கூட்டங்களைக் கூட்டினர். வீதிவீதியாய் பணம் வசூலித்தார்கள். இப்போது ஏழை மக்கள் பஞ்சத்தில் தவிக்கும்போது அந்தத் துயரைத் துடைக்க ஒருவரும் வரவில்லை. இவர்களின் தேசப்பற்று என்பதே சுயநலம் சார்ந்தது’ என விமர்சித்திருக்கிறார். அயோத்திதாசரின் இந்த அவதானிப்பு நூறாண்டு கழிந்து இன்றும் பொருந்திப்போகிறது!
- இரா.வினோத்,
தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in
மே 20: பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்தநாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT