Published : 17 Jun 2014 10:00 AM
Last Updated : 17 Jun 2014 10:00 AM
நாட்டுப்புறக் கலைகள் பார்வையாளர்களின் ரசனையை அனுசரித்தே நிகழ்த்தப்படுகின்றன.
விட்டலாபுரம் கிராமத்தில் (அப்போதைய திருநெல்வேலி மாவட்டம்) தமிழறிஞர் பி. ஸ்ரீ. இருந்த சமயம். திருநெல்வேலி தொழிலதிபர் ஒருவர் பி.ஸ்ரீயைப் பார்க்கப் போயிருந்தார். இருவரின் ராமாயண உரையாடலின் உச்சக்கட்டத்தில் தோல்பாவைக்கூத்து பற்றிச் சொன்னார் தொழிலதிபர்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தோல் பாவைக்கூத்தைப் பார்ப்பது தரக்குறைவாகக் கருதப்பட்ட காலம் அது. தொழிலதிபர், அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பார்த்திருக்கிறார். அவர் சொன்ன விதம், பி.ஸ்ரீக்கு தோல்பாவைக்கூத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி
யிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 40-களில் நடந்திருக்க லாம். அப்போது தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியில் தமாஷ் காட்சிகள் குறைவாக இருந்த காலம். புன்னைக்காய் எண்ணெய் விளக்கில் மைக் இல்லாமல் நிகழ்ச்சி நடத்திய காலம்.
உளுவனும் உச்சியும்
கோபாலராவ் (1882 - 1976) அப்போது திருநெல் வேலி மாவட்ட எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து விட்டலாபுரத்தில் கூத்து நடத்த ஏற்பாடு செய்துவிட்டார் தொழிலதிபர். முதலில் சுந்தரகாண்டம் நடத்தட்டும் என்றாராம் பி..
ஏற்கெனவே பார்த்த தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார் தொழிலதிபர். பாவை ஆட்டுபவரும் பக்கவாத்தியக்காரர்களும் நிகழ்ச்சியின்போது உரையாடிய கெட்டவார்த்தை களும் தமாஷ் பாத்திரங்களான உளுவத்தலையன், உச்சிக்குரும்பன், அப்போது வழக்கில் இருந்த பச்சைக் கொப்புளான் என்னும் பாத்திரங்கள் பேசிய இரட்டை அர்த்த உரையாடலும் அவர் நினைவுக்குவந்தன. ராமன், சீதை தவிர பிற எல்லாப் பாத்திரங்களிடமும் உளுவனும் உச்சியும் கிண்டலாகப் பேச உரிமை உண்டு.
இரண்டு நிபந்தனைகள்
இப்படியான காட்சிகளை பி.யும் அவரது அக்ரகாரத்துப் பெண்களும் தமிழறிஞர் சிலரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? அதனால் கோபால ராவிடம் கிளிப்பிள்ளைக்குச் சொன்ன மாதிரி இதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்றாராம் தொழிலதிபர். நிகழ்ச்சியின்போது கெட்டவார்த்தை, இரட்டை அர்த்தக் கதைகள், பழமொழிகள் போன்றவற்றைச் சொல்லக் கூடாது; நிகழ்ச்சி நடத்தும்போது குடிக்கவும் கூடாது என்று தொழிலதிபர் நிபந்தனை விதித்தது கோபாலராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தொழிலதிபர் நிகழ்ச்சிக்குப் பேசிய தொகை சம்மதிக்க வைத்தது.
பி.ஸ்ரீ. பார்த்த கூத்து
பி.ஸ்ரீ.யை அன்று அசரவைத்துவிட்டார் கோபாலராவ். முக்கியமாக அனுமனும் சுக்ரீவனும் உரையாடியபோது இடையில் வந்த சுயராஜ்யம் என்ற சொல் அவரைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. சுக்ரீவன் கிட்கிந்தையில் அடிமையாக வாழ் வதைவிட சுயராஜ்யத்துக்குப் போராடுவது மேல் என்கிறான். வாலியை வெள்ளைக்காரனாகவும் கிட்கிந்தையைப் பாரதமாகவும் வர்ணித்துப் பேசிய உரையாடலைப் பார்வையாளர்கள் புரிந்து கொண்டு கைதட்டியதையும் அன்றைய பிரமுகப் பார்வையாளர்கள் கவனித்தார்கள். வாலிவதை முடிந்த பிறகு படைதிரட்டி வருகிறேன்; சீதையைத் தேடலாம் என்று ராமனிடம் சுக்ரீவன் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான். அதனால் ராமன் லட்சுமணனிடம்,
வரவில்லையே சுக்ரீவன்
மனதை அறிந்துவா தம்பி
சுயராஜ்யம் வேண்டுமென்றான்
கிடைத்ததும் மறந்துவிட்டான்
சுகபோகி ஆகிவிட்டான் - கொடுத்த
வார்த்தைகளை மறந்துவிட்டான்
தம்பி நீ போய் வா
எனப் பாடுவான்.
பாட்டு முடிந்ததும் ராமனும் லட்சுமணனும் திரையின் ஓரத்துக்குச் சென்று மெல்ல மறைந்துவிடு வார்கள். அனுமன் வந்து சுற்றும்முற்றும் பார்ப்பான். அப்போது உளுவத் தலையன் வருவான். “ஏ அனுமா! கேட்டயா சங்கதி” எனச் சொல்லிவிட்டு, சுக்ரீவனும் தாரையும் சரசமாடுவதை இரட்டை அர்த்தத்துடன் விவரிப்பான். இந்த உரையாடலின்போது கோபால ராவ் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சமாளித்துவிட்டார்.
கம்பனைப் புகுத்தினார்
பி.ஸ்ரீ. இதன் பிறகு கோபாலராவின் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்தார். 20-க்கும் மேற்பட்ட கம்பனின் பாடல்களை ராவுக்குச் சொல்லிக்
கொடுத்தார். அவற்றை எங்கே பாட வேண்டும் என்பதையும் கற்பித்தார். நிகழ்ச்சி நடத்து வதிலும் ஆலோசனை சொல்லியிருக்கிறார். கெட்ட வார்த்தைகளையும், இரட்டை அர்த்தங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்தார் கோபாலராவ்.
பதிவுசெய்யப்படாத சொற்கள்
தோல்பாவைக்கூத்து மட்டுமல்ல; சடங்குகளோ புராணமோ சாராமல் உரையாடல் வழி நிகழ்த்தப் படும் நாட்டார் நிகழ்த்துகலைகளுக்குக் கட்டுப் பாடற்ற தன்மை உண்டு. நாடகப் பாணியிலான நிகழ்த்துகலைகளுக்குக் கொஞ்சம் விதிவிலக்கு உண்டு. (எ.கா. ஸ்பெஷல் நாடகம், தெருக்கூத்து) பார்வையாளர்களின் ரசனையை அனுசரித்தே நிகழ்த்திய கலைஞர்களுக்கு வரன்முறை கிடையாது.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் கிராமத்து விழாக்களில் மட்டுமே நிகழும்; ஊரின் ஒதுக்குப்புறத்திலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறும். பார்வையாளர்கள் ஆண்கள் மட்டுமே; சிறுவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முறை தவறிய உறவுகள், ஆண்/பெண்களின் வக்கிரங்களே மையப்பொருள். இவை இரட்டை அர்த்தங்களில் பேசப்படும்; இவை வட்டாரரீதியான வழக்காறுகள்; வட்டார மக்களுக்கு எளிதில் புரிவன. இச்சொற்கள் அகராதிகளில்கூடப் பதிவுசெய்யப்படாதவை.
கப்பல்பாட்டு
தாமிரபரணி ஆற்றங்கரை கிராமத்துக் கோயில் விழாவில் நான் பார்த்துப் பதிவுசெய்த கப்பல் பாட்டு நிகழ்ச்சி இப்போது நிகழ்வதில்லை. கப்பல்போல் அலங்காரம் செய்த வண்டியில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் நின்றோ இருந்தோ நிகழ்ச்சி நடத்துவார்கள். இவர்களின் உரையாடல் முறை தவறிய உறவுகுறித்து இருக்கும். மாமியார்- மருமகன், அண்ணி- கணவனின் தம்பி என உறவுக்காரர்களின் தகாத உறவு விரசமாக விவாதிக்கப்படும். கோமாளி இடையே புகுந்து இரட்டை அர்த்தங்களில் பேசுவான்.
மாமியார்- மருமகன் தொடர்பான விரசமான பாடலைப் பாடுவான் கோமாளி. மாப்பிள்ளை பெண் பார்க்கும் படலத்தில் மாமியாரிடம் லயித்த ஒருவனின் அனுபவம் பாடலின் மையம். இப்படியெல்லாம் பாடல், உரையாடல் என நாடகம் நடந்தாலும் இதன் மொத்த தொனி இதை நியாயப்படுத்தாது.
இரட்டை அர்த்தக் கலைகள்
கப்பல்பாட்டு போன்று கருப்பாயி ஆட்டம் (தஞ்சைப் பகுதி), கருப்பாயிக் கூத்து (மதுரை, புதுக்கோட்டை பகுதி), ரங்குபாய் நடனம் (தென் மாவட்டங்கள்), கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சிகள் (வாழைக்காய் வெட்டுதல்) எனச் சில நிகழ்ச்சிகளும் கணவன், மனைவி உறவின் விரிசல், தகாத உறவு, முதியவர்களின் வக்கிரம் என்பனவற்றை வெளிப்படையாக விமர்சிப்பவை.
அவசரகாலச் சட்டம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல்பாட்டு நிகழ்ச்சி நடத்திய பெண் கலைஞர் ஒருவரை மதுரையில் சந்தித்தேன். அவரிடம் பழைய நினைவுகளைக் கிளறியபோது, நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, கப்பல்பாட்டுக் கலைஞர் களை போலீஸ் பிடித்துச் சென்றதையும், அவர் களைப் போன்ற வேறு கலைஞர்கள் ஊர்விட்டுப் பெயர்ந்ததையும் சொன்னார்.
இதுபோன்ற செய்தியை கேரளத் தெறிப் பாட்டுபற்றி மலையாளப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டேன்.
தெறிப்பாட்டு
வட கேரளத்தில், குறிப்பாக பாலக்காடு, திரிசூர் மாவட்டங்களில் பகவதி, கண்ணகி கோயில் வழிபாடு, விழா தொடர்பானது தெறிப்பாட்டு. இதற்குக் கெட்ட வார்த்தை என்பது நேரடிப் பொருள். திருவிதாங்கூர் ராணி கௌரி லட்சுமிபாய் காலத்திலேயே (1810 - 15) இதற்குத் தடை வந்தது என்றாலும், 70-களில்கூட இது வழக்கில் இருந்தது. 1972-ல் நான் பாலக்காடு, சித்தூரில் படித்தபோது இப்பாடலைக் கேட்டிருக்கிறேன். தெறிப்பாட்டில் ஆண், பெண் உறுப்புகளின் வர்ணனை மேலோங்கி இருக்கும். இடையிடையே சிலப்பதிகாரக் கண்ணகி கதையும் துணுக்குகளாகக் கலந்து வரும். கோவலனிடம் சுகம் பெறாத கண்ணகியை ஆற்றுவிப்பதற்காக இந்தத் தெறிப்பாடல் என்ற விளக்கத்தையும் அப்போது கேட்டேன்.
நான் இதுபற்றி, மலையாளப் பேராசிரியர் விக்கிரமன் தம்பியிடம் கேட்டபோது, “எல்லாத் தெறிகளையும் சினிமாக்காரங்களும் அரசியல் வாதிகளும் ஏற்றுக்கொண்டார்களே; இனி எதற்குத் தனியான தெறிப்பாடல்” என்று மலையாளி களுக்குரிய கிண்டலுடன் சொன்னார்.
- அ. கா. பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT