Published : 15 Dec 2015 08:08 AM
Last Updated : 15 Dec 2015 08:08 AM
‘தி இந்து’ நிவாரண முகாமில் கடந்த 11 நாட்களாக நடைபெறும் நிவாரணப் பணி களை பார்க்கும் போது, மிகுந்த எழுச்சியும் ‘விரைவிலேயே சென்னை மீண்டெழும்’ என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது.
ஒருபக்கம் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து உதவும் உள்ளங்கள். மறுபக்கம் அந்த உதவிகளைச் சரியானவர் கைகளில் சேர்க்க வேண்டுமென்கிற அக்கறையோடு உணர்வுபூர்வமாய் பணிகளைச் செய்யும் தன்னார்வலர்கள்.
எப்படியோ இந்தப் பெருமழை, எங்கெங்கோ சிதறிக்கிடந்த நல்ல உள்ளங்களை எல்லாம் ஒரு இடத்தில் கைகுலுக்க வைத் திருக்கிறது. மனதின் ஈரம்மிக்க மனிதர்கள் சந்தித்து உதவும் மையமாய் ‘தி இந்து’ நிவாரண முகாம் உயிர்த்திருக்கிறது.
யாவரும் உறவுகளே..
‘தி இந்து’ மழை வெள்ள நிவாரண முகாமில் தன்னார்வத்தோடு பணி செய்து கொண்டிருக்கும் அனைவரும் உறவினர்களைப் போலவே பேசிக் கொள்கிறார்கள். அங்குள்ள பணிகளை தங்களுக் குள்ளேயே பகிர்ந்து செய்கிறார்கள். யாராவது கூப்பிட்டுச் சொல்லும்முன்னே ஓடிச்சென்று ஆளுக்கொரு கை கொடுக்கிறார்கள். அவர்கள் வேலை செய்வதைப் பார்க்கும்போது, நமக்குள் இயல்பாய் எழுகிற சந்தேகத்தைக் கேள்வியாக்கினோம்.
“இதுக்கு முன்னாடியே உங்களுக்குள்ளே அறிமுகம் இருக்கா?”
ஸ்ரீனிவாசலு, பாலாஜி, பாக்யராஜ், விக்னேஷ் என அனைவரும் ஒரே குரலில் சொல்கிறார்கள் ‘தி இந்து’ நிவாரண முகாம்தான் எங்களையெல்லாம் சேர்த்து வைத்தது”என்று.
களத்தில் நிற்கிறார்கள்
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ச்ரினிவாசலு(55), சிட்கோ நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி யில் படிக்கும் 160 குழந்தைகளுக்கு 4 ஆண்டுகளாக தினமும் காலைச் சிற்றுண்டி வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக இறங்கி, களப்பணி செய்தவர், ‘தி இந்து’ நிவாரண முகாம் தொடங்கிய நாளிலிருந்து உடனிருந்து அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
“பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பொருட்களை விநியோகித்து வருவதுதான் ‘தி இந்து’ நிவாரண முகாமின் சிறப்பான பணியாகும். இதில் பங்கெடுத்திருப்பது எனக்கு மனநிறைவை அளிக்கிறது” என்கிறார்.
எஸ்.பாலாஜி(47) கீழ்ப்பாக் கத்தில் வசிப்பவர். சொந்தமாக பிசினஸ் செய்கிறார். முகாம் பணிகளில் தன்னார்வத்தோடு ஈடுபட்டுவரும் இவர், கடலூரு க்கும் இரண்டு நாட்கள் சென்று, நிவாரணப் பொருட்களைத் தந்துவிட்டு வந்துள்ளார்.
“வெள்ளத்தால் பாதிக் கப்பட்டு, இன்னும் சரியான முறையில் நிவாரணம்கூடப் பெற முடியாத இருளர், அருந்ததியர் சமூக மக்களைச் சந்தித்து, அவர்களது இருப்பிடத்துக்கே சென்று, உதவிகளை வழங்க வாய்ப்பளித்த ‘தி இந்து’வுக்கு நன்றி” என்றார்.
அரசியல் குறுக்கீடற்ற உதவிகள்
‘திருவல்லிக்கேணி டைம்ஸ்’ பத்திரிகை ஆசிரியரான ஏ.பாக்கியராஜூம் நிவாரண முகாம் பணிகளில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
“எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லா மல் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வதுதான் ‘தி இந்து’ நிவாரண முகாமின் முக்கியமான அம்சம்” என்கிறார். பி.டெக்., படித்த இ.விக்னேஷோடு சேர்ந்து அவரது நண்பர்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
“வேளச்சேரியில் இடுப்பளவு தண்ணியில நடந்துபோயி, ஒரு வீட்டுல சாப்பாடும், தண்ணீர் பாட்டிலும் கொடுத்தோம். தம்பி, எங்களுக்கு இதெல்லாம் கிடைச்சிருக்கு. இன்னும் உள்பகுதியில் கொஞ்சம் பேருக்கு எதுவுமே கிடைக்காம இருக்காங்க. அவங்களுக்குக் கொடுங்கன்னு சொல்லித் திருப்பித் தந்தாங்க. எனக்கு அப்படியே கண்ணு கலங்கிடுச்சு”என்று நெகிழ்கிறார் விக்னேஷ்.
கல்லூரி கரங்கள்
சென்னை பிரஸிடன்சி கல்லூரியின் மாணவ - மாணவிகள் 14 பேர் வேகமாய் நிவாரண முகாமுக்கு வந்து, “நாங்களும் உங்களோட சேர்ந்து இந்தப் பணிகளைச் செய்கிறோம்”என்றபடி, கரம் கோக்கிறார்கள்.
வாழ்த்திய சூர்யா
'தி இந்து' நிவாரண முகாமுக்கு வந்த நடிகர் சூர்யா, அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். தன்னார்வலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கும் அவர்களை வாழ்த்துவதாக பாராட்டினார். அப்போது 'தி இந்து' இயக்குநர்களான லட்சுமி ஸ்ரீநாத், விஜயா அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.
சின்ன வயது, பெரிய மனது…
திருநெல்வேலியில் இருந்து வந்த கே.பி.என். டிராவல்ஸ் நிவாரணப் பொருட்கள் பார்சலில் ஒரு குட்டிப் பார்சலும் வந்தது. சங்கரன்கோவில் வட்டம், குந்தம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜீன் 6 வயது மகள் ஆராதனா போர்வையும், குழந்தைகளுக்கான டிரஸ்ஸூம் அனுப்பி வைத்திருந்தார். நன்றி… செல்லமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT