Published : 30 Dec 2015 07:35 AM
Last Updated : 30 Dec 2015 07:35 AM
*
தமிழகத்தில் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளையும் சூழ்ந்துள்ளது வெள்ளம். இந்த நாடுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் தமிழகத்தைவிட மிக அதிகம். ஆனால், அவர்கள் அதனை சமாளித்த விதம் அற்புதம் என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.
பராகுவே நாட்டில் 32 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 30 அடி அளவை தாண்டி ஓடியிருக்கிறது பராகுவே நதி. அர்ஜென்டினா 50 ஆண்டுகளில் இல்லாத பெரும் வெள்ளத்தை சந்தித்திருக்கிறது. இத்தனை வெள்ளத்திலும் பாராகுவே, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகிய நான்கு நாடுகளையும் சேர்த்து 8 பேர் மட்டுமே பலி ஆகியிருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து என அத்தனை நாடுகளையும் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவு. சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட உயிர் பலியுடன் ஒப்பிடால் இது எவ்வளவு குறைவு என்பது புரியும்.
குறிப்பாக அமெரிக்காவின் நீர் மேலாண்மை அபாரமாக இருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த நாடும் நம்மைபோலதான் நீர் நிலைகள் விஷயத்தில் அலட்சியமாக இருந்தது. மேற்கு அமெரிக்காவின் கொலோராடோ ஆறு மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டன. ஆற்றுச் சமவெளியின் பழங்குடியின மக்களான கொக்கொபா இந்தியர்களால் பல நுற்றாண்டுகளாக செய்யப்பட்டு வந்த மரபு வழி விவசாயம் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட பாலையானது பூமி.
அமெரிக்காவின் நீளமான ஆறு மிசவுரி. அதில் வரைமுறை இல்லாமல் ஏராளமான அணைகளைக் கட்டினார்கள். ஆற்றின் நீரோட்டங்களை செயற்கையாக திருப்பி ஏராளமான நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆற்றின் பல்லுயிர்ச் சூழல் கெட்டுப்போனது. உயிரினங்கள் அழியத் தொடங்கின. 16 வகை மீன்கள், 14 வகை பறவைகள், 7 தாவர இனங்கள், 6 பூச்சி வகைகள், நான்கு ஊர்வன, மூன்று பாலூட்டி, 2 சிப்பி வகைகள் ஆகியவற்றை அழியும் வகை உயிரினங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டியதாயிற்று. 32 உயிரிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. நீரை சுத்திகரிப்பதில் இந்த உயிரினங்களின் பங்கு முக்கியமானது. அவை தண்ணீரில் இருக்கும் கழிவை உறிஞ்சி வெளியேற்றுகின்றன. அதனால்தான் இவற்றை உயிரி வடிப்பான்கள் (Living filters) என்கிறார்கள்.
ஐக்கிய அமெரிக்க புவியியல் மையம் மற்றும் டெக்ஸாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அமெரிக்காவின் 30 மாநிலங்களில் 139 ஆறுகள், நீர் நிலைகளில் எண்டோக்ரின் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் தாய்மார்களின் தாய்ப் பாலில், வெடிமருந்திலும் ஏவுகணை எரிபொருளிலும் கலக்கப்படும் பெர்க்லோ ரேட் என்னும் ரசாயனம் லிட்டருக்கு 10.5 மைக்ரோ கிராம் அளவுக்கு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கண்ட சீரழிவுகளால் பருவ நிலை மாற்றங்களால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது. கடல் சீற்றங்களால் பாஸ்டன், நியூயார்க், பிலடெல்ஃபியா, பால்டிமோர், அட்லாண்டிக் ஆகிய கடற்கரை நகரங்கள் பாதிக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டன. 1927-ம் ஆண்டு மிஸிசிபி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 500 பேர் உயிரிழந்தார்கள். ஆறு லட்சம் பேர் வீடிழந்தார்கள். 1993-ம் ஆண்டு மிஸிசிபியில் வெள்ளம் வந்தபோது 50 பேர் இறந்தார்கள். 2005-ம் ஆண்டு ஹரிக்கேன் கேத்ரினா புயலில் சுமார் 1,800 பேர் பலியானர்கள். 2010 மார்ச் மாதம் தெற்கு நியூ இங்கிலாந்திலும், மே மாதம் டென்னிஸிலும், செப்டம்பரில் மின்னிசோட்டாவில் வெள்ளம் புகுந்தது. 2011 தொடக்கத்தில் மிஸிசிபியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் மத்திய அட்லாண்டிக்கில் வெள்ளம் ஏற்பட்டது. 2013-ல் கொலரோடாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 2014-ல் அமெரிக்க வளைகுடாப் பகுதிகளிலும் நியூயார்க், அரிசோனா ஆகிய இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போதும் இன்றைக்கும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மாதத்துக்கு சராசரியாக நான்கைந்து வெள்ளங்களாவது வந்துவிடுகின்றன. இவற்றில் எல்லாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 80 வெள்ளங்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டன. ஆனால், மிக அழகாக அங்கே வெள்ளத்தை சமாளிக்கிறார்கள். பழைய நீர் நிலை தடங்களைச் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடித்து அங்கெல்லாம் சுரங்க வழி நீர்ப்பாதைகளை அமைத்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு நியூயார்க் நகரத் திட்டம் (Liquid assets, Sandra postel) எடுத்துக்கொள்வோம். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு விஷயத்தில் கிட்டத்தட்ட நமது சென்னையைப் போல இருந்தது நியூயார்க். ஆறுகள், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. சிறு மழைக்கே மூழ்கிப்போயின சாலைகள். குடியிருப்புகளுக்குள்ளும் அடிக்கடி தண்ணீர் புகுந்தது. வறட்சியும் வெள்ளமும் மாறி மாறி தாக்கின. அந்த நகரம் தனது தண்ணீர் தேவையில் சுமார் 90 சதவீதத்தை கேட்ஸ்கில்ஸ் டெலிவேர் அணையில் இருந்து பெற்று வந்தது. ஆனால், அதன் நீர்ப் பிடிப்பு பகுதிகளான காடுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்யவும் வெள்ளத் தடுப்புகளை மேற்கொள்ளவும் மிகப் பெரிய வடிநிலையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன் முதலீட்டு திட்டச் செலவு மட்டும் 6 பில்லியன் டாலர். ஆண்டு பராமரிப்பு செலவு 300 மில்லியன் டாலர். ஆனால், அவ்வளவு செலவு செய்யத் தேவையில்லை என்று நகர நிர்வாகம் முடிவெடுத்தது. மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் முக்கியம் என்று கருதியது நிர்வாகம்.
அதன்படி நீர் நிலைகளின் பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. இதற்காக நடிகர்கள், பிரபலங்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நஷ்டஈடு தரவும் அரசு முன்வந்தது. மக்களும் சிறிது சிறிதாக மனம் மாறினார்கள். 1997-ம் ஆண்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆக்கிரமிப்பாளர்கள் முன்னிலையில் 70 சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றை ஒருங் கிணைத்து ஒப்பந்தம் தயாரானது.
தனியார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து 10 ஆண்டுகள் நியூயார்க் நகரின் நீர்நிலைகளைப் பராமரிக்க 1.5 பில்லியன் டாலர் முதலீட்டில் உடன்படிக்கை ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் நீர் நிலைகளை மீட்க ஏராளமான நிதியுதவிகள் குவிந்தன. வசதியான பலர் தங்கள் குடியிருப்புகளை விட்டுத் தந்தார்கள். வசதியற்றவர்கள் அரசிடம் விற்றார்கள். தவிர்க்க முடியாத இடங்களில் சுரங்க வழி நீர் பாதைகள் மற்றும் குழாய் வழி நீர்ப் பாதைகள் அமைக்கப்பட்டன. நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது. அதன் பின்பு நியூயார்க்கின் வெள்ளச் சேதம் 90 சத வீதம் குறைந்தது. தண்ணீர் பற்றாக் குறையும் நீங்கியது. நியூயார்க்கை முன்னுதாரணமாகக் கொண்டு பாஸ்டன், சியாட்டின், வாஷிங்டன், போர்ட்லேண்ட், ஓரியான், சைராகஸ், ஆபர்ன், மைனே ஆகிய பகுதிகளிலும் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டன.
மக்களும் அரசும் மனம் வைத்தால் சென்னையிலும் இது சாத்தியமே!
(நீர் அடிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT