Published : 10 May 2021 04:51 AM
Last Updated : 10 May 2021 04:51 AM

பிரிட்டன், இஸ்ரேல் வெற்றிக் கதைகள்

தம்பி

இந்தியா உட்பட பல நாடுகள் கரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில் சில நாடுகள் வெற்றிகரமாக மீண்டிருக்கின்றன. கரோனாவுக்கு எதிரான போரில் பிரிட்டனும் இஸ்ரேலும் இன்று உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

பிரிட்டன் – வேற்றுருவ கரோனா

2020-ன் இறுதியில் பிரிட்டனில் கரோனாவின் புதிய வேற்றுருவம் (variant) தலைகாட்டியதிலிருந்து உலகமே பிரிட்டனை அச்சத்துடன் பார்க்க ஆரம்பித்தது. பெரும்பாலான நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களையும் அங்கு செல்லும் விமானங்களையும் தடைசெய்தன. இந்த வேற்றுருவத்துக்கு பி.1.1.7 என்று பெயர். உலகெங்கும் இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு இந்த வகையும் இந்திய வகை, தென்னாப்பிரிக்க வகை போன்றவையும் காரணமாகக் கூறப்படுகின்றன.

பிரிட்டனில் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த ஜனவரி 8 அன்று மட்டும் ஏற்பட்ட புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 67,928; இறப்புகளைப் பொறுத்தவரை ஜனவரி 20 அன்று 1,823 பேர் பலியானதே உச்சம். இந்திய மக்கள்தொகையில் 20-ல் ஒரு பங்கே மக்கள்தொகையைக் கொண்ட பிரிட்டனுக்கு இது பெரும் பாதிப்பு.

பிரிட்டனில் காணப்படும் பி.1.1.7 வேற்றுருவத்துக்கும் இந்தியாவில் காணப்படும் பி.1.167-க்கும் இடையே முக்கியமான வேறுபாடு அவற்றின் கூர்ப்புரதங்களில் (spike protein) நிகழ்ந்திருக்கும் திடீர் மாற்றங்களே (mutations). கூர்ப்புரதங்களைக் கொண்டுதான் கரோனா வைரஸ் நம்முடைய செல்களில் ஊடுருவும். இந்திய வேற்றுருவத்தில் இரண்டு கூர்ப்புரதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதே அது பிரிட்டன் வேற்றுருவத்தைவிட அதிகமாகப் பரவுவதற்குக் காரணம். கூர்ப்புரதங்களில் மாற்றங்கள் நிகழும்போது உடலின் நோய் எதிர்ப்புசக்தி, உடலுக்குள் செலுத்திக்கொண்ட தடுப்பு மருந்தின் சக்தி போன்றவை கரோனாவுக்கு எதிராகக் குறைவாகவே செயலாற்றும். அதனால்தான், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கும்கூடத் தொற்று ஏற்படுகிறது.

இந்தச் சிக்கலோடுதான் இரண்டாம் அலையை பிரிட்டன் எதிர்கொண்டது. ஜனவரியிலிருந்து மூன்று மாதங்களுக்குக் கடுமையான ஊரடங்கை விதித்தது. கூடவே, தடுப்பூசி இயக்கத்தையும் முடுக்கிவிட்டது. பைசர்-பயோஎன்டெக், ஆக்ஸ்ஃபோர்டு-ஆஸ்ட்ராஜெனகா, மாடர்னா ஆகிய மூன்று தடுப்பூசிகளும் பிரிட்டன் மக்களுக்குச் செலுத்தப்பட்டன. இதுவரை பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையான 6.60 கோடியில் 3.50 கோடி பேருக்குக் குறைந்தபட்சம் முதலாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தன்னுடைய மக்கள்தொகையில் பாதி பேருக்கு மேல் விரைவாகத் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் பிரிட்டன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 50 வயதைத் தாண்டியவர்களில் 95% பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

கடுமையான ஊரடங்கு, வெற்றிகரமான தடுப்பூசி இயக்கம் இரண்டையும் அடுத்து, தற்போது தினசரித் தொற்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. மே 8 அன்று ஒட்டுமொத்த பிரிட்டனிலும் 2,047 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. அன்றைய தினம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 மட்டும்தான். இதே வேகத்தில் பிரிட்டன் செயல்பட்டால் ஆகஸ்ட் வாக்கில் அந்நாடு கரோனாவிலிருந்து முற்றிலும் விடுபட வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள். தடுப்பூசி, ஊரடங்கைத் தாண்டியும் அந்நாட்டு மக்களின் சுயக் கட்டுப்பாடும் இந்த வெற்றிக் கதைக்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

இஸ்ரேலின் கதை

கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இதுவரை இஸ்ரேலில் 838,887 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இது, கிட்டத்தட்ட அந்த நாட்டு மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கு. இரண்டாவது அலையில் ஜனவரி 20 அன்று 10,213 பேருக்குத் தொற்று ஏற்பட்டதே உச்சம். அன்றுதான் ஒரு நாளின் அதிகபட்ச அளவாக 101 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து ஏப்ரல் 27-ல் புதிய தொற்றுகள் 315, இறப்பு எண்ணிக்கை மே 8 அன்று 1 என்ற அளவுக்குக் குறைந்திருக்கிறது.
எப்படி சாதித்தது இஸ்ரேல்?

இஸ்ரேல் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னதாக, டிசம்பர் 19, 2020-ல் தனது தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது. இதுவரை 50 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது அந்த நாட்டு மக்கள்தொகையில் 56%. மேலும், 100 பேருக்கு 120 டோஸ் என்ற அளவில் தடுப்பூசி செலுத்தி இவ்வகையில் உலகிலேயே முதல் இடத்தை இஸ்ரேல் வகிக்கிறது. மக்கள்தொகையில் 65-70% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டால் திரள் எதிர்ப்புசக்தி (herd immunity) கிடைத்துவிடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதன் அடிப்படையில், திரள் எதிர்ப்புசக்தியை நோக்கி நடைபோடும் முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது.

ஊரடங்குகள் விதித்தும் கரோனாவின் தீவிரம் குறையாத நிலையில் தடுப்பூசி இயக்கமே உண்மையான வெற்றியை இஸ்ரேலுக்குப் பெற்றுத்தந்தது. கரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் முடங்கிப்போய்விடாமல் இருப்பதற்காக ‘பசுமைக் கடவுச் சீட்டு’ (Green Passport) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தொற்றிலிருந்து குணமானவர்கள் போன்றோருக்கு இந்தச் செயலியின் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் செயலியை வைத்திருப்பவர்கள் திருமணம், விழாக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளம் போன்றவற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். பசுமைக் கடவுச் சீட்டு இல்லாமல் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக முகக்கவசத்துடன் திரிந்த இஸ்ரேலியர்களுக்கு ஏப்ரல் 18-லிருந்து முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்தது. இஸ்ரேலியர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு அந்நாட்டின் தடுப்பூசி இயக்கமும் மக்களின் ஒத்துழைப்பும்தான் காரணம்.

நமக்கான பாடம்

பிரிட்டன், இஸ்ரேல் இரண்டு நாடுகளின் வெற்றியிலிருந்து இந்தியாவும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. இந்திய மக்கள்தொகையுடன் அந்த நாடுகளின் மக்கள்தொகையை ஒப்பிட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. திரள் எதிர்ப்புசக்தியைப் பெறுவதற்கு நம் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 65% பேருக்கு (அதாவது, 85 கோடி பேருக்கு) தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், ஏறத்தாழ 16.5 கோடி பேருக்குத்தான் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது (12%). அதிலும் இரு தவணைகளும் செலுத்தப்பட்டிருப்போர் எண்ணிக்கை 3.29 கோடிதான் (2.4%). கரோனா வைரஸ் புதுப் புது வடிவங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி இயக்கத்தை இந்தியா இன்னும் பல மடங்கு வேகத்தில் முடுக்கிவிடுவதே நம் முன் உள்ள ஒரே வழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x