Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
இடதுசாரி வட்டத்துக்குப் பரிச்சயமானவர் ‘பழங்காசு’ சீனிவாசன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் பல ஆண்டுகள் உழைத்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உருவாக்கத்தில் பங்கெடுத்தவர். ஆனால், சீனிவாசனின் அடையாளம் இவையல்ல; புத்தகங்களே அவருடைய அடையாளம். இவருடைய சேகரிப்பில் 35,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்களுக்கென ஒரு கோடி ரூபாய் வரையில் செலவிட்டிருக்கிறார். இதற்கும் இவர் பொருளாதாரரீதியாக வசதிபடைத்தவர் அல்ல. கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூரில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த சீனிவாசன், குடும்பச் சூழல் காரணமாகக் கல்லூரிக்குச் செல்ல இயலவில்லை. ஐடிஐ படித்துவிட்டு, திருச்சியில் உள்ள பிஹெச்இஎல் நிறுவனத்தில் சேர்கிறார். வருமானத்தில் புத்தகத்துக்கு என்று சிறிய தொகையை ஒதுக்குகிறார். அப்படி ஆரம்பித்தது பயணம். இன்று எங்குமே கிடைக்காத, நூற்றாண்டு பழமைமிக்க பல அரிதான நூல்கள் அவரிடம் உள்ளன. இவருடைய ‘பாரதி ஆய்வு நூலக’த்தை ஆய்வு மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். 70 வயதாகும் சீனிவாசன் தற்போது ஆவடியில் வசிக்கிறார். வெயில் கொளுத்திக்கொண்டிருந்த ஒரு நண்பகல் பொழுதில் அவரைச் சந்தித்தேன்.
எப்படி உங்களுக்குப் புத்தகங்கள் மேல் இவ்வளவு பற்று வந்தது?
வைஷ்ணவத்தில் ஆச்சாரமான ஒரு தெலுங்கு மரபுக் குடும்பம் என்னுடையது. வீட்டில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் முதலான நூல்களைச் சிறுவயதிலேயே படிக்க வேண்டிய சூழல். அந்த வயதிலே எனக்கு வாசிப்பு மீது ஆர்வம் ஏற்படுத்தியதற்கும் அதை ஒரு பழக்கமாகத் தொடரச் செய்ததற்கும் என் அன்னை தனலட்சுமி மற்றும் என் சிறிய தந்தை புலவர் நா.அரங்கராசன் இருவரே காரணம். பிறகு, என் இளம் பருவத்தில் எரவாஞ்சேரி அப்துல் கஃபூர் என்ற தபால்காரர் எனக்கு அறிமுகமானார். அந்தக் காலத்திலேயே கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், செகாவ், கார்க்கி எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அவருடைய தொடர்பு என் புத்தக வாசிப்பை விசாலப்படுத்தியது. அது என்னைப் பொதுவுடைமை இயக்கத்தை நோக்கித் தள்ளியது. அங்குள்ள தலைவர்கள் என்னைச் செதுக்கினார்கள். எப்படிப் படிக்க வேண்டும் என்பதைச் சொல்லித்தந்தார்கள்.
சேகரிப்புப் பழக்கம் எப்படி வந்தது?
பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. நான் படித்த எட்டாம் வகுப்பு துணைப்பாட நூல் இன்னும் என்னிடம் இருக்கிறது. என் பாட்டனார் பயன்படுத்திய கெட்டி இலக்க வாய்ப்பாடு, என் அம்மாவின் ஐந்தாம் வகுப்புப் பாட நூல்கள் என்னிடம் இருக்கின்றன. நான் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு, பணம் கொடுத்துப் புத்தகம் வாங்க ஆரம்பித்தேன். அப்போது என்னுடைய சம்பளம் எழுபது ரூபாய். அதில் பத்து ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுவேன். பணியிடத்தில் என்னுடன் இருப்பவர்களையும் படிக்க வைத்தேன். அவர்களுக்கென்று நிறைய பிரதிகள் வாங்கும்போது கணிசமான தள்ளுபடி கிடைக்கும். அதில் வரும் தொகையைக் கொண்டு எனக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன். இன்றைய நிலையில் புத்தகங்களைச் சேகரிப்பது என்பது எனக்குச் சுவாசிப்பதுபோல.
2001-ல் ‘பழங்காசு’ என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறீர்கள். என்ன நோக்கத்தில் ஆரம்பித்தீர்கள்?
பழைய நாணயங்கள், கல்வெட்டுகள் மீது எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது. பழங்காசுகளைச் சேகரித்துவந்தேன். எனவே, அவை தொடர்பான செய்திகளைத் தேடிப் படிப்பேன். கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும்போது அதைச் செய்தியாகப் போடுவார்கள். ஆனால் அதிலுள்ள வாசகங்களை முழுமையாகக் குறிப்பிட மாட்டார்கள். இந்தச் செய்தியைப் பின்னர் பார்க்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டால், அதன் புகைப்படத்துடன், அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களையும் அப்படியே வெளியிட்டால்தான் அது ஆய்வுக்குப் பயன்படும். எனவே, எனது மனைவி சுசீலாதேவியை ஆசிரியராகக் கொண்டு ‘பழங்காசு’ காலாண்டு இதழைத் தொடங்கினேன்.
அரிதானவை என்று சொல்லத்தக்க என்னென்ன புத்தகங்கள் உங்களிடம் உள்ளன?
வை.மு.கோபாலாச்சாரியர் திருக்குறளுக்கு எழுதிய உரை, திருக்குறளுக்கு எழுதப்பட்ட முதல் நாத்திக உரையான புலவர் குழந்தையினுடைய உரை, கவிதை வடிவ உரை, ஜைன உரைகள் என திருக்குறளுக்கான 125 உரைகள் உள்ளன. மத நூல்கள் என்று எடுத்துக்கொண்டால், 27 திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் (ஒரு மொழிபெயர்ப்பு மாரிமுத்து என்ற வழக்கறிஞர் செய்தது. அதுதான் முஸ்லிம் அல்லாதவர் செய்த முதல் மொழிபெயர்ப்பு), திருக்குர்ஆன் தேன் மலர்கள் என்ற வெ.பா.பாபுலின் வெண்பா வடிவ மொழிபெயர்ப்பு, திருக்குர்ஆனின் 20-க்கும் மேற்பட்ட கவிதை வடிவ மொழிபெயர்ப்புகள் உள்ளன. பைபிளைப் பொறுத்தவரையில் இரேனியஸ் ஐயர், பப்ரிசியஸ், பெர்சிவல், மோனகன், பவர் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள், ராஜரீகம் மொழிபெயர்ப்பு, பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் தனித்தனி மொழிபெயர்ப்புகளாக 20-க்கும் மேற்பட்டவை உள்ளன.
பகவத் கீதைக்கு 60-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளும் விரிவுரைகளும், வால்மீகி ராமாயணம், துளசி தாசரின் ராமசரித மானஸ், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், பர்மிய ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் எனப் பல வகை ராமாயணங்களும், கம்பராமாயணத்துக்கான அகராதியும் உரைகள் பலவும் என்னிடம் உள்ளன. இவை தவிர, மதுரகவி சீனிவாச அய்யங்காரின் ராமாயண வெண்பா, சுப்ரமணிய அய்யரின் ராமாயண வெண்பா, அமிர்த ராமாயணம், சங்ரக ராமாயணம், நலுங்கு மெட்டு ராமாயணம், தக்கை ராமாயணம், ராமாயணக் கும்மி ஆகியவையும் என்னிடம் உள்ளன.
1913-ல் வெளிவந்த விவசாய போதினி, தமிழ் எண் பின்னங்களுக்கான கெட்டி இலக்க வாய்ப்பாடு முதலிய நூல்களும், முருகன் பாடல்களைத் தொகுத்து செங்கல்வராயப் பிள்ளை வெளிட்ட முருகன் பண்ணிரு திருமறைகள், இலங்கையில் வெளியிடப்பட்ட முருகன் பாடல் 12 தொகுதிகளும் என்னிடம் உள்ளன. சித்தர் பாடல்களான பெரிய ஞானக்கோவை தொடங்கி ஞானயோக சாஸ்திரத் திரட்டு – பத்துத் தொகுதிகள், தாயுமானவர் பாடல்கள் முதலான பல்வேறு சித்தர் இலக்கியங்கள், ஞானப்பாடல் நூல்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு, தக்கலை பீரப்பா, கோட்டாறு ஞானியார் சாகிப் ஆகியோரின் பாடல் இலக்கியங்கள், ரூமியின் மஸ்னவி, உமர்கய்யாமின் ருபாயத் மொழிபெயர்ப்புகளையும் சேகரித்துள்ளேன்.
திருக்குறள் உரைக் கொத்து 3 தொகுதிகள், திருக்குறள் உரை வேற்றுமை 3 தொகுதிகள், திருக்குறள் உரைக் களஞ்சியம் 9 தொகுதிகள், காந்தி நூல்கள் 100 தொகுதிகள், கார்ல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் நூல்கள் 37 தொகுதிகள், அம்பேத்கர் நூல்கள் 37 தொகுதிகள், பாரதிதாசன் 25 தொகுதிகள், ஜெயகாந்தன் 12 தொகுதிகள், ‘சேக்ரட் புக்ஸ் ஆஃப் தி ஈஸ்ட்’ என்று மார்க்ஸ் முல்லர் வெளியிட்ட 50 தொகுதிகள், பெரியாரின் ‘குடிஅரசு’ கட்டுரைகள், பெரியார் சிந்தனைகள், இராமலிங்க அடிகளின் திருவருட்பா 10 தொகுதிகள் உள்ளன
‘திராவிட நாடு’ இதழ்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். மாநில சுயாட்சி தொடர்பான நூல்கள், பெரியார், கருணாநிதி, அண்ணா நூல்கள், ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகியோரின் நூல்கள், வடகலை தென்கலை பிரச்சினை தொடர்பான நூல்கள், கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய நூல்கள், பல ஸ்மிருதி நூல்கள், ஸ்மிருதி முக்தாபலம் முதலியனவும் உண்டு. ‘1001 அரேபிய இரவுகள்’ நூலுக்கு 1932-ல் வந்த தமிழ் மொழிபெயர்ப்பும்கூட என்னிடம் இருக்கிறது. எபிகிராஃபியா இன்டிகா தொகுதிகள், தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதிகள், பல கல்வெட்டுச் செப்பேடுகள், ஓலை ஆவணங்கள் தொகுதிகளும், நாணயங்கள் தொடர்பான நூல்களும், ஏராளமான தமிழக, இந்திய, உலக வரலாற்று நூல்களும் எனது சேகரிப்பில் உள்ளன.
இவ்வளவும் வாசிப்புக்காக வாங்கப்பட்டவையா அல்லது சேகரிப்புக்காகவே வாங்கினீர்களா?
என்னிடம் இருக்கும் புத்தகங்களில் 90% மேல் நான் வாசித்தவை. 10% – அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் முதலியன – சேகரிப்புக்காக வாங்கியவை. எனக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம். இதனால், மற்ற மதங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே ஒவ்வொன்றாகக் கிளை பரப்பிவிட்டது. நான் வாசிப்புக்கு எல்லை வைத்துக்கொண்டதில்லை. புத்தகங்களைப் படிக்கும்போது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற புத்தகங்களைத் தேடுவேன். ஆசிரியர், புத்தக உள்ளடக்கம், நண்பர்களின் பரிந்துரை எனப் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பேன். புத்தகங்கள் வாங்க பம்பாய் வரையெல்லாம்கூடச் சென்றிருக்கிறேன்.
இவ்வளவையும் எப்படிப் பராமரிக்கிறீர்கள்?
இந்தச் சேகரிப்புகளுக்காகவே தனியே ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருக்கிறேன். சிலிகா ஜெல்லை மூலைக்கு மூலை வைத்திருக்கிறேன்; அது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். ஒவ்வொரு மூலையிலும் வசம்பைத் தட்டி வைத்திருக்கிறேன். வேப்ப இலையைத் துணிப்பையில் கட்டி வைத்திருக்கிறேன். அந்துருண்டை பயன்படுத்துகிறேன். இவ்வளவுதான் என்னால் முடிந்தது.
உங்களுடைய அரிதான சேகரிப்புகளைப் பதிப்பிக்கக் கொடுத்திருக்கிறீர்களா?
உதாரணமாக, ஈ.வி.கே.சம்பத் புத்தகங்கள் அவரது குடும்பத்தினரிடமே இல்லை. என்னிடம் இருந்த புத்தகங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். அதைத் தொகுத்து ‘ஈவிகே சம்பத் நூல் திரட்டு’ என்று பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி என்னிடமிருந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மறுபதிப்பாக வந்திருக்கின்றன.
நூலகத்தை என்ன செய்யத் திட்டம்?
ஆம், இந்த வயதான காலத்தில் அதுதான் பெரும் கவலையாக உள்ளது. சில ஆர்வலர்கள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான நூல்களை மட்டுமே வாங்க விரும்புகின்றனர். அப்படி ஒவ்வொருவர் விரும்பும் நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அரிதான நூல்கள் தனித்தனியாகப் பிரிந்து செல்லும்போது பின்னால் அந்த நூல்களைக் கண்டடைவது சாத்தியமற்றதாகிவிடும். ஏதேனும் ஒரு அமைப்பு என்னுடைய நூலகத்துக்கு ஏற்புடையதாக ஒரு விலை வைத்து வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அது ஏதாவது பல்கலைக்கழகமாகவோ அல்லது அரசாகவோ இருந்தால் கூடுதல் நலம்.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT